செவ்வாய், 22 மே, 2018

நான் - அவன்


-ந.மயூரரூபன்




ஆண்டவரே இயேசுவே!
உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்க இன்று எனக்கு மீண்டுமாக ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற உமது கருணைக்கு நன்றி செலுத்துகிறேன். உமது அன்புக் கட்டளையைப் பின்பற்றுவது எளிதான ஒன்றாக அமையவில்லை. கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மைக் கல்லாயிற்று என்று இரண்டாம் வாசகத்தில் வாசிக்கக் கேட்கிறேன் இறைவா!
தன்னைப்; புறக்கணிக்கும் குழந்தைகளுக்கு மூலைக்கல்லாய் விளங்க அவர்கள் ஒவ்வொன்றாய் இழந்து போகிறார்கள். அவர்களைத் திடப்படுத்த வேண்டுமாய் செபிக்கிறேன். என்னைச்சுற்றி வாழும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற உமது கருணைக்குச் செவிகொடுக்க நல்ல மனதைத் தர வேண்டுகிறேன். என் விருப்பத்திலும் சிந்தனையிலும் உமது அருள் வரங்கள் நிரம்பி வழிய என் இனிய கிறிஸ்துவின் பெயரால் செபிக்கிறேன்.
ஆமென்.
.............
..............
1.    மரத்தின் வேர்களிலிருந்து பாம்பு மெதுவாக ஏற ஆரம்பிக்கிறது.
நான் ஒருபோதும் காயினாக† இருக்க விரும்பியதேயில்லை. ஆனால் இறைதூதனின் உடைகள் சற்றும் எனது உடலில் பொருந்தியிருக்கவில்லை என்பதையும் உணர முடிந்தது. காணிக்கையின் சடங்குகள் மீதியாய் வைத்திருந்த நறுமணத்தின் சுவடுகளை எனதுடைகளின் இழைகளில் நுகரவே முடியவில்லை. பலியாட்டின் கழுத்திலிருந்து இரத்தம் ஒழுகிக் காய்ந்து பின் மணக்கும் இழையாய் அது உறைந்திருக்க உணர்ந்தேன்.
நான் என்னில் நுகரும் காயினின் வியர்வையை நீங்களும் நுகர்ந்திருக்கிறீர்களா?
என்னை அப்படிப் பார்க்காதீர்கள். உங்கள் முகத்தின் தசை நெளிவை உன்னிப்பாகப் பார்க்கிறேன். மூக்கின் அசைவில் எனது விழிகள் கவனமாயே இருக்கின்றன.
உதட்டை ஏன் இப்படிச் சுழிக்கிறீர்கள்?
என்னை அறிந்துவிட்டீர்களா?
ஆதாமுக்கு ஒருபோதும் இரண்டு மைந்தர்கள் இருக்கமுடியாது. பாவந்தான் வளரவேண்டுமென்பது படைப்பின் ஒவ்வொரு துளைகளிலும் நிரம்பிவரும் மது.
தாம் ஏவாளுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர் அவர்கள் காயீன் மற்றும் ஆபேல். காயின் விவசாயி. காயின் கடவுளுக்கு காணிக்கையாக விளைச்சலில் மிச்சமிருப்பதை கொஞ்சம் எடுத்து வைத்தான். ஆபேல் தன் சிறந்த ஆடுகளில் ஒரு முதல்குட்டியை எடுத்து அதன் சிறந்த பாகங்களை பலியாகத்தந்தான். ஆகவே ஆபேலின் பலி கடவுளுக்கு விருப்பமாக இருந்தது. அதை எற்றுக்கொண்டார். காயினின் பலியை ஏற்றுக்கொளளவில்லை.
இதனால் காயின், ஆபேலின் மேல் வன்மம் கொண்டான், மேலும் ஆபேலை கொல்லத்துடித்தான். கடவுள் காயினிடம்,பாவம் உன்னை சிக்கவைக்க காத்திருக்கிறது, அதிலிருந்து உன்னை காத்துக்கொள்' என எச்சரித்தார். ஆனாலும் காயினின் வன்மம் வளர்ந்தது. தன் தம்பி ஆபேலை ஒரு வயல்வெளிக்கு அழத்துச்சென்று கொலை செய்தான்.
கடவுள் காயினிடம்,'உன் தம்பி எங்கே?', என 'என் தம்பிக்கு நான் காவலாளியா என்ன?' என பதில் தந்தான் காயின். கடவுள் அவனை தூர நாட்டிற்கு ஓடிப்போகும்படி சபித்தார். 'நான் தூர நாட்டிற்கு ஓடிப்போனால் என்னை கொன்று போடுவார்களே? இந்தத்தண்டனை கொடுமையானது.' என காயின் முறையிட, கடவுள் அவனிடம், 'உன்னை கொல்பவனுக்கு பலமடங்கு தண்டனை காத்திருக்கிறது.' என்று கூறி, யாரும் அவனை கொல்லாதபடி அவன்மீது ஒரு அடையாளமிட்டார்.


உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் ஆபேல் ஒரு பொருந்தாப் படைப்பு.
படைப்பின் அந்த இடுக்குகளில் சொட்டும் மதுவை அழைந்தள்ளி மயங்கும் பாவத்தின் மைந்தன் நான். அந்தச் சதை நிலத்தின் மணல் துளைக்குள் அவனைப் புதைத்தேன். இரத்தத்தில் திரண்ட மணல் இன்னமும் என் மூளைக்குள் குறுகுறுத்தவண்ணம் உருண்டு கொண்டிருக்கின்றன.
பாவம், என்னைச் சிக்கவைக்க ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் காத்து நிற்கிறது. அது மரணமா? இந்த மரணத்துடன் பாவம் முடிந்துவிடும். அப்படி முடிந்துவிட்டால்....
முடியாது.
என்மேல் பொறிக்கப்பட்ட அடையாளம் தெரிகிறதா உனக்கு?
அதையா இவ்வளவு நேரமும் தேடுகிறாய்?
குறிசுட்ட மாடு நான். அடையாளங் காணும் நீ ஒருபோதும் என்னைக் கொலை செய்யமாட்டாய்.
பாவம் முடிந்துவிடக் கூடாது.


2.    பாம்பு மரத்தின் தண்டுப் பகுதியை சுற்றியபடி மேல்நோக்கி வளர்ந்துகொண்டிருந்தது.
'பாவங்களின் பெயரால் இந்தமண் அழிக்கப்பட இருக்கிறது. நீ உன் மனைவி பிள்ளைகளோடு ஓடித்தப்பு'
தூதர்கள் சொன்னார்கள்.
என்மேல் பொறிக்கப்பட்;ட அடையாளம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது: நான்  அவ்வாறுதான் நினைத்தேன்.
மண்ணைப்பார்த்தேன். ஆதாமும் ஏவாளும் கலவி கொண்ட மண்.
பாவங்கள் நிறைந்திருக்கின்றனவா?
பாவத்தை அழிக்கும் வல்லமை ஒருவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
மீண்டும்  எச்சரித்தார்கள்.
'இங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடித்தப்புங்கள். திரும்பிப் பார்த்தால் சுடப்படுவீர்கள்.'
மணலில் புதைந்து கடலில் மிதந்து ஓடினார்கள். திரும்பிப் பார்க்கமுடியாதா என் மண்ணை.
யுத்தம் உச்சமடைந்திருந்தபோது அவன் யுத்த களத்தில் இருந்தான். அவனது குடும்பம் யுத்தத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. குண்டுகள் முழங்கிக் கொண்டிருந்தன. இரவுகள் தொடர்ந்து வெடித்துப் பிளந்துகொண்டிருந்தன. இரத்தம் எங்கும் ஊற்றெடுக்கத் தொடங்கியிருந்தது.
பகலும் இரவும் பங்கருக்குள்ளேயே தொடர்ந்து வந்து போகத் தொடங்கியிருந்தது. முற்றுமுழுதான சுடலையாய் அந்த நிலம் விரிந்திருந்தது. ஏங்கும் எரிந்துகொணடNயிருந்தது.
' இன்னும் கொஞ்ச நேரங்கூட நிக்கேலாது. எல்லாப்பக்கத்தாலயும் அடிச்சுக் கொண்டு வாறாங்கள். கடக்கரைப் பக்கத்தாலயும் அசையேலாது.... இப்ப இதில மாட்டுப் பட்டுச் செத்தால் அது அநியாயம்.... என்ன பிரயோசனம் இருக்கு...'
ஒன்றுமே பிரயோசனமில்லைத்தான்.
காயப்பட்டு உடல் கிழிந்து கிடந்தவர்களின் கதறல்கள் காற்றை மாரடித்து அழவைத்துக் கொண்டிருந்தது. உன்மத்தங் கொண்டதுபோல் அது சுழன்றடித்து வீசத் தொடங்கியிருந்தது.
வானத்திலிருந்து தீப்பிழம்புகள் மண்மீது கொட்டுப்பட்டன. அந்தப்பாவ மண் தீப்பிடித்தெரிந்தது. லோத்துவின்† மனைவியென ஒரு கணம் அவள் திரும்பிப் பார்த்தாள். உப்புக்கல் சிலையாய்க் கடலில் கரைந்து போனாள்.
பாவம் செய்தவன் கடந்து போனான்.
வாழ்க்கை பாவத்தின் மீதேறிக் கொடிபிடித்துச் சிரித்தது.

ஆபிரகாமின் அண்ணன் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்துவந்தார் அவர் நீதிமான்
இரு தேவ தூதர்கள் சோதோம் கொமெராவில் லோத்துவின் வீட்டில் வந்து தங்கினர். லோத்துவிடம்,'பாவங்களின் பேரில் சோதோமும் கொமெராவும் கடவுளால் அழிக்கப்படவிருக்கின்றன. நீ உன் மனைவியோடும் மகள்களோடும் சோதோமை விட்டு உடனே வெளியேறு' என்றனர்.
லோத்து தன் மருமகன்களை தம்மோடு வருமாறு கெஞ்சினார். அவர்கள் லோத்துவின் பேச்சை கேட்காமல் சோதோமில் தங்கினர்.
லோத்துவும் அவர் மனைவியும் மகள்களும் சோதோமை விட்டு வெளியேற மனமின்றி நின்றுகொண்டிருந்தபோது தேவதூதன் அவர்களை கைபிடித்து அழைத்துச்சென்று,'சோதோமிலிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போங்கள், திரும்பிப் பார்த்தால் தண்டிக்கப்படுவீர்கள்', எனக்கூறி சோதோமிலிருந்து அவர்களை வெளியேற்றினார்.
லோத்துவின் குடும்பம் வெளியேறியதும் வானத்திலிருந்து தீப்பிழம்புகள் சோதோம் கொமெரா மீது விழுந்தன. இரு பாவ நகரங்களும் அதன் அருகிருந்த சில நகரங்களும் பற்றி எரிந்தன.
லோத்துவின் மனைவி கடவுளின் ஆணையை மறந்து எரியும் நகரங்களை திரும்பி பார்த்தாள். பார்க்கவும் உப்புக்கல் சிலையாய் மாறினாள்.


3.    பாம்பு நிற்காமல் மரத்தின் உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டேயிருந்தது
என்னை இரகசியமாய் ஆட்சித் துணையாய் அழைத்தார்கள்.
அரச அந்தஸ்து அது. அதிகாரம் காலடியில் வாலாட்டடிக் கொண்டு நின்றது.
குடமுழுக்கு ஒன்றும் செய்யவில்லை. பூக்கள் தூவவில்லை. தலைக்கு எண்ணெய் ஊற்றாமலேயே கதிரையின் காலருகுக்கு இழுத்தார்கள்.
மனதுக்குள் பறை, மூலை முடுக்கெல்லாம் அதிர வாசித்துக் கொண்டிருந்தது. அவனது பயமும் மகிழ்ச்சியும் பதட்டமும் பறையொலியல் சிக்குப்பட்டு அலைந்தலைந்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது.
மனதின் புதர்களெல்லாம் இருட்டில் மண்ட, பறையொலி மட்டும் எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. பொல்லாத ஆவியாய் மனம் குத்துக்கரணமிட்டுக் குதித்தது.
என் மனதின் பறையதிர்வால் இந்த ஆவியை ஓட்ட முடியவேயில்லை.
நான் முகாமுக்குள் அடைபட்டபோது, தாவீதைக்† கொன்றிருந்தேன்.
என் மனதைத் தன் பறையால் தொடர்ந்து அருட்டிக் கொண்டிருந்தவன் அவன். தான் கடவுளின் துணையோடு என்னைக் கொல்வேன் என சபதமிட்டிருந்தான். எல்லோரும் சேர்ந்து அவனை அதட்டினார்கள். ஓடிவிடு எனத் துரத்தினார்கள். அவன் அசையவேயில்லை.
போருடையைத் தூக்கியெறிந்தான். சாரத்துடனும் சேட்டுடனும் என்னுடன் போர் புரியத் தயாரானான். அவனிடம் பாரிய ஆயுதம் எதுவுமேயில்லை.
என்னிடம் கத்தி ஒன்றிருந்தது.
கற்களால் என்னை அடிக்கத் தொடங்கினான்.
வெறுஞ்சிறுபயல்.
கடவுளின் பெயரால் என்னை அடித்துக் கொண்டேயிருந்தான். என்னைக் கொல்பவனை ஆயிரமாயிரம் பாவங்கள் சூழ்ந்துகொள்ளுமென்ற கடவுளின் சாபவரத்தை அவன் அறிந்திருக்கவேயில்லை.
எனக்குள்ளிருந்த ஆவி துடியாட்டம் போடத் தொடங்கியது. மெதுவான பறையொலி ஒலிக்கத் தொடங்கியருந்தது. கத்தியெடுத்து அவனைக் கொன்று போட்டேன். சரசரவென்று அவன் தலையை அறுத்தெடுத்துக் கொண்டேன். மணலில் இரத்தம் கொப்பளித்துப் பரவி  ஊறத் தொடங்கியருந்தது.
அவனது கண்கள் என்னையே வெறிக்கப் பார்த்தபடி நிலைகுத்தியிருந்தன. என் மனதின் இருளுக்குள் அந்தக் கண்கள் மெது மெதுவாய்ப் புதைந்தும் போயின.
நான் கோலியாத்† என்பதை அவன் மட்டுமே சொல்ல முடியும்.

சாமுவேல் கடவுள் கான்பித்த படியே பெத்தலகேமிற்குச் சென்று ஈசாயின் குமாரன் தாவீதுக்கு எண்ணெய் ஊற்றி அரசனாக்கினான், ஆனால் அவன் மிகவும் சிறியவனான படியால், அவனுக்கு சவுலால் ஏதும் ஆபத்து வராமலிருக்க அதைவெளிப்படையாக அறிவிக்கவில்லை.
சவுலுக்கு அசுத்த ஆவி வந்து நிலைகுலையச் செய்தது, ஆகவே கின்னரம் வாசிக்கும் ஒருவனை அழைத்து வந்து அவனுக்கு அசுத்த ஆவி மேலிடும் போதெல்லாம் கின்னரம் வாசித்து, அந்த ஆவியை சாந்தப்படுத்த முயன்றார்கள் அப்போது தாவீது கின்னரம் வாசிப்பதில் வல்லவன் என அறிந்து அவனை சவுலின் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். தாவீதும் அந்த பொல்லாத ஆவி சவுலின் மேல் வரும் போது கின்னரம் வாசித்து சவுலை குணமாக்குவான்.
அந்தக் காலகட்டதில் பெலிஸ்தியர் மற்றும் இஸ்ரவேலர் இடையேயான போர் உச்ச கட்டத்தில் இருந்தது போர்க்களத்தில் பொலிஸ்திய வீரனான கோலியாத் என்பவன், இஸ்ரவேலரைப் பார்த்து தன்னை வென்றால் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரின் அடிமை... என்னிடம் யார் வந்து சன்டை போடுகிறீர்கள் என்று சவால் விடுவான். இதைக் கேட்ட இஸ்ரவேலர்கள் சிதறி ஓடுவார்கள். இப்படியே நாற்பது நாட்கள் இஸ்ரவேலர்களைப் பார்த்து சவால் விடுவதும் அதைக் கேட்ட இஸ்ரவேலர்கள் சிதறியோடுவதும் வாடிக்கையாக இருந்தது.
தாவீதின் மூத்த சகோதரர்கள் சவுலோடு போர்க்களத்தில் இருந்தனர், அதனால் தாவீதின் அப்பா அவர்களுக்கு உணவு கொன்டுபோய் கொடுத்து அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுவா என தாவீதை போர்க்களத்திற்கு அனுப்பினார், தாவீதும் தன் தகப்பனார் சொன்னபடியே போர்க் களத்திற்குச் சென்று தன் சகோதரர்களைப் பார்க்கப் போனான்,அப்போது கோலியாத் வழக்கம் போல இஸ்ரவேலருக்கு எதிராக வந்து நின்று சவால் விட்டான், ஆனால் இஸ்ரவேலர்கள் சிதறி ஓடினார்கள் இதைக் கண்ட தாவீது, நான் கடவுளின் துனையோடு இவனை கொல்லுவேன் என்று சொன்னான். இதைக் கேட்ட தாவீதின் சகோதரர்கள் தாவீதை மிரட்டி அவனை வீட்டிற்கு திரும்பச் சொன்னார்கள். ஆனாலும் அவன் திரும்பிப் போகாமல் சவுலிடம் போய் நான் கோலியாத்தை வீழ்த்தத் தயார் என்று சொன்னான், அதற்கு சவுல் நீ மிகவும் சிறியவன் உன்னால் முடியாது, நீ திரும்பி உன் வீட்டிற்குப் போ என்று சொன்னான்.
தாவீது சவுலைப் பார்த்து நான் ஆடுமேய்க்கும் போது என் ஆட்டை ஒருமுறை சிங்கமும் ஒரு முறை கரடியும் கவ்விக் கொண்டு போனது ஆனால் நான் அவைகளை கொன்று எனது ஆடுகளை மீட்டேன் அந்த சிங்கம் கரடி போல இந்த கோலியாத்தும் நம் கடவுளின் முன்னால் சிறியவனே என்று சொன்னான்.சவுலும் அதற்கு சம்மதித்து தாவீதை போர் உடை அணியச் சொன்னான், தாவீது போருடையணிந்து நடந்து பார்த்தான், அது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்த படியால் அவைகளை கழற்றிப் போட்டு விட்டு சாதாரண உடையோடு கோலியாத்தை எதிற்கச் சென்றான்.
போர்க்களத்தில் கோலியாத் கையில் மிகப்பெரிய வாள் இருந்தது தாவீதின் கையில் ஆற்றிலிருந்து எடுக்கப் பட்ட ஐந்து கூளாங்கற்களும் கவணும் மட்டுமே இருந்தன, கோலியாத் தாவீதைப் பார்த்து நீயோ சிறுவன், உன்னிடம் வாளும் இல்லை என்று கேலி செய்தான், அதற்கு தாவீது உன்னிடம் இரும்பால் செய்யப்பட்ட வாள் மட்டும்தான் உள்ளது என்னிடம் எல்லாம் வல்ல இறைவனின் அருள் உள்ளது என்று சொல்லி, தன் கையிலிருந்த கவணில் கல்லை வைத்து கோலியாத்தை நோக்கி வேகமாய் அடித்தான், அக்கல் கோலியாத்தின் நெற்றியில் புதைந்தது அதே இடத்தில் கோலியாத் மூர்ச்சையாகி கீழே விழுந்தான், தாவீது ஓடிப் போய் கோலியாத்தின் வாளையெடுத்து அவனைக் கொன்று போட்டான்.



4.    இப்போது பாம்பு மரத்தை நன்றாகச் சுற்றிவளைத்து உச்சியில் தலைவைத்து கொத்துவதற்குத் தயாராக இருந்தது.
இந்த அடையாளம்.
இது மட்டும் எனது உடலிலிருந்து மறையவுமில்லை, மாறவுமில்லை.
அதைத் தேடிப் பலர் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் தாவீதைத் தேடுகிறார்களா?
இல்லை கோலியாத்தைத் தேடுகிறார்களா?
அது யாராயினும், கதிரையும் காத்திருக்கின்றது.
மரணமும் காத்திருக்கின்றது.
பாவம் என்பது ஒருபோதும் கொல்லப்பட முடியாதது. என் மரணம் தொலைந்துவிட்டது. தொலைந்ததை ஏன் தேடுகிறாய்?
͎͎
இணைந்து செபிப்போம்
ஆண்டவரே இயேசுவே!
நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள் என்ற இறைவார்த்தையை இன்று வாசிக்கக் கேட்கிறேன், நன்றி. தாங்கள் என்மீது பிரியம் கொண்டு இந்த அடையாளத்தைப் பொறித்தீர்கள், மரணத்தை தொலைவில் நிற்கச் செய்தீர்கள். நன்றி செலுத்துகிறேன். பிரிவு என்பது என்னுடைய பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக பார்க்கிறேன். ஆனால் இன்று என் வாழ்க்கைப்பாதை அதனால் உயர்ந்த நிலையில் உள்ளது என்று பெருமையோடு உம் திருபாதத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள எனக்கு வாய்ப்பைக் கொடுக்கின்ற உமது கருணைக்கு நன்றி செலுத்துகிறேன். பிரிவினால் வரும் இன்பத்தையும், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளும் திடத்தை கொடுத்தருள மன்றாடுகின்றேன். நீர் எனக்கு துணையாக பரிசுத்த ஆவியை கொடுத்து உமது அருளையும், அன்பையும் பொழியும் இரக்கத்திற்கு நன்றி செலுத்தி போற்றுகிறேன். பிரிவினால் வரும் இழப்பை மனமுவந்து ஏற்றுக் கொள்ள உமது பரிசுத்த ஆவியின் கொடைகளை கொண்டு நிரப்ப வேண்டுமாய் என் இனிய கிறிஸ்துவின் பெயரால் செபிக்கின்றேன்.
ஆமென்

திங்கள், 22 ஜனவரி, 2018

பதுங்குகுழி





                                                                                                            
உருவத்தில் மிக மெலிந்த, உயரங்குறைந்த தோற்றத்தில் தற்போது குடியிருக்கும் அவன், தன்னை வீரசிங்கம் இரத்தினகுமார் என போதகரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
சுதந்திரபுரத்திலிருக்கும் அந்த ஆலயத்துக்குப் போதகர் ஆனந்தம் றோகான் கடந்தமாதந்தான் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு மிக இளவயது, ஆயினும் தனது எண்ணங்கள் தொடர்பில் மிக மேலான மதிப்பீடுகளை அனைவரிலும் ஏற்படுத்தியிருந்தார். அவரது ஆள்மன எண்ணமும் அதுவாகவே இருந்தது. அதற்கேற்றவகையிலேயே அவரது நடவடிக்கையும் இருப்பதை உணரமுடிந்தது.
தன்னை ஒரு ஆசிரியனாக அடையாளப்படுத்தியிருந்த இரத்தினகுமார், போதகர் றோகானின் முன் வெகுவாக சங்கடப்பட்ட தோரணையிலேயே அமர்ந்திருந்தான். போதகர் அவனது முகத்தினை மிக உன்னிப்பாகப் பார்த்தார். நீண்டநேரம் பாரத்தபடியே இருந்தார். இரத்தினகுமார் அடிக்கடி அவரது முகத்ததை நமிர்ந்து பார்ப்பதும் பின்னர் தலையைக் குனிவதுமாக இருந்தான். இடைக்கிடை கால்களை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்கொண்டான். அவனால் தொடர்ந்து அவ்வாறு இருக்கமுடியவில்லை.
போதகர் மேலும் கீழுமாக தலையை ஆட்டிக்கொண்டார். இறுதியுத்தத்தில் அவனது மனைவியும் பிள்ளைகளும் இறந்துவிட்டதன் பேதலிப்பு அவனது முகத்திலும் உடலிலும் இருப்பதனை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார்.
இரத்தினகுமாரும் எப்போதும் பதட்டத்தினை தன் மேல் போர்த்திக் கொண்டவன் போலவேயிருந்தான். சிரிப்பதற்கு அதிகம் சிரமப்பட்டான். சிரிக்கமுனையும்போது உதடுகள் மட்டும் கட்டளைக்கு விரிவது போல் விரிந்து பின் மூடிக்கொள்ளும். பற்கள் ஒழுங்கற்றும் அதிகமாய் கறைகளைப் பூசிக் கொண்டனவாயும் காணப்பட்டன. மிகத் தொலைவில் பார்ப்பதற்கு ஆசைப்பட்டவன் போல அவனது பார்வை தூர எறிந்திருப்பதனை போதகர் றோகான் கண்டுகொண்டார். இதனால் அவருக்குள்ளும் சிறிது பதட்டம் தொற்றிக்கொண்டது. நடுக்கமாகவும் இருக்கலாம், அந்தக் கணத்தில் அதனைச் சரியாக  இனங்கண்டுகொள்ள முடியவில்லை.
தனியாக யாருமற்று இரத்தினகுமார் இருப்பதை கண்டுகொண்ட போதகர் றோகான் இரத்தினகுமாரைத் தன்னுடனேயே இருத்திக்கொண்டார். பாடசாலை நேரம்போக மீதி நேரங்களில் போதகருடனேயே இருக்கமுனைந்தான் இரத்தினகுமார்.
தனிமையின் பிடிக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது அவனுக்கு மிகக் கடினமாகவே இருந்தது. ஆலயத்துள் அதிக நேரம் மௌனமாக இருக்கத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டான்.சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவத்தை பார்த்தபடி நீண்டநேரம் அமர்ந்திருப்பான். போதகர், இரத்தினகுமாரின் இந்த இருப்பை அவதானித்தபோதும் அவனைத் தொந்தரவு செய்யாமல் அவன் போக்கிலேயே விட்டுவிட்டார். சிலுவையிலுள்ள இயேசுவின் உருவத்தில் விழிகள் எப்போதும் நிலைத்திருந்தன.
தன்னை யாரோ பின் தெடருகிறார்கள் என்பதான பிரமை இரத்தினகுமாரின் தோள்களில் நன்றாகவே குந்தியிருந்தது. அந்தப்பிரமையில் அடிக்கடி தோள்களைக் குலுக்கிக் கொள்வான். தோள்களைக் குலுக்கிக் கொள்வது அவனது இயல்பாகவே மாறியிருந்தது.
இரத்தினகுமாரின் ஆலய இருப்புக்கண்டு போதகர் றோகான் அவனுக்கு ஞானஸ்னானம் செய்தார். அவன் போதகரிடம் தன்னுடைய மதத்தைப் பற்றியோ கடவுளைப்பற்றியோ அல்லது ஆன்மீகத்தைப்பற்றியோ எப்போதும் வாய்திறந்து உரையாடியதில்லை. அவனது தூரத்தில் கொழுவிய பார்வையும் ஆலயத் தனித்திருப்பும் இயேசுவின் மீதான பார்வை நிலைப்பும் இரத்தினகுமாரை கிறிஸ்தவனாக்கியிருந்தது.
கர்த்தர் அவனது வாழ்வின் கிருபைக்குத் துணையிருப்பார் எனப் போதகர் றொகான் முழுமையாக நம்பிக்கை வைத்தார்.
இப்பொழுதெல்லாம் கிறிஸ்தோபர் இரத்தினகுமார் பைபிளுக்குள் தனது பார்வையை நிலைத்திருக்கப் பழக்கிக் கொண்டான். இரவுகளிலும் தொடர்ந்து பைபிளுக்குள் தனது பார்வையை கொழுவியிருந்தான். ஆலயத்தின் மேலே பார்த்த, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அந்த உருவம் பைபிள் தாள்களில் நீர்த் தோற்றமாய் அசைந்தது. அது அவனது விழிகளை எப்போதும் அழைத்து வைத்திருந்ததை யாருமே அறிந்திருக்கவில்லை.
திடீரென அந்தத் தாள்களிலிருந்து விழிகளை பிடுங்கிக் கொள்பவன் தனது தோள்களை குலுக்கிக் கொள்வான். பின் விழிகள் மெல்ல மெல்ல அந்த நீருக்குள் இறங்கும். அங்கு சிலுவையில் தொங்கும் இயேசுவை அவை தேடிக்கொண்டேயிருக்கும்.
கிறிஸ்தோபரின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்த றோகான் போதகருக்கு வியப்பாக இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்க இரத்தினகுமார் உழைக்கிறான் என உணரத் தலைப்பட்டார். அதனால் கிறிஸ்தோபருடன் விவலியக் கருத்துகளை விவாதிப்பதற்கு அவர் முனைந்தார். எனினும் இரத்தினகுமார் அதில் பெரிதாக ஆர்வங் கொண்டவனாய்க் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் அமைதியுடன் போதகர் கூறுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் கரிசனையுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் தான் கூறுவனவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறானா என்பதை போதகரால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அவன் இடைக்கிடை தனது தோள்களைக் குலுக்கிக் கொள்வதை மட்டுமே அவரால் கண்டுகொள்ள முடிந்தது.
ஆயினும் கிறிஸ்தோபரின் பைபிள் படிப்பு தொடர்ந்து கொண்டேயருந்தது. விழிகள் தொடர்ந்து நீர்ச்சலனத்துள் மிதந்து படிப்படியாக நீந்தத் தொடங்கியிருந்தன. இயேசுவின் உடல், காயங்களின் செம்மையில் உயிர்த்திருந்தது. குருதிப் பொட்டுகள் நீரில் விழுந்து கீழிறங்கிப் பின்னர் உடைந்து நீரில் அடர்ந்தது. முக்குழித்துச் சுழியோடப் பழகிக் கொண்ட அவனது கண்கள் செந்நீர் அடர்த்தியின் வலிகளில் தத்தளித்து மீண்ட பின் தத்தளித்தது. தொடர்ந்து தத்தளிக்க, வலிகள் புதிது புதிதாய் உயிர்த்தெழுவதை விழிகள் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தன.
பொதுவாக இரத்தினகுமாருக்கு இரவுகளில் நித்திரை வருவதில்லை. பெரும்பாலான இரவுகள் இரத்தினகுமாரின் விழிப்புகளை மட்டுமே காவிச் சென்றன. இது கிறிஸ்தோபர் இரத்தினகுமாராக அவன் மாறிய பின்னும் தொடர்ந்தது. அவனது விழிப்பு நேரங்களில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. அதேபோல் தனிமையில் தன்னுடலை வைத்திருப்பதை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தான். அவனது மூளையும் மனமும் முழுமையான விழிப்புடன் இருளுக்குள்ளும் இருள் கடந்தும் தொடர்ந்தும் அலைந்தபடியே இருந்தன.
நைலோன் கயிறொன்று உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. சற்று பழுப்பேறிய நீலநிறக் கயிறு. ஆதன் கீழ்முனையில் ஞட்டியுடன் ஒருவன் தொங்கிக் கொண்டிருந்தான். குள்ளமான மெலிந்த தோற்றத்திலிருந்த அவனது வெற்றுடம்பிலிருந்து வியர்வை கரைந்து கொண்டிருந்தது. அவனது தலைக்குக் கீழே சிறு தொட்டியொன்று, அதற்குள் நீர் நிறைந்திருந்தது. சற்றே ஊத்தை கலந்த செம்மையேறிய அந்த நீர் சலனப்பட்டுக் கொண்டேயிருந்தது.
மெதுவாக ஒவ்வொரு இஞ்சிகளாய் இறங்கிய கயிறு, திடீரென மிக வேகமாக தொட்டிக்குள் அவனது தலை மூழ்கக் கூடியவாறு இறங்கி பின் நிலைத்து நின்றது. அவனது அந்தரத்தையும் அவஸ்தையையும் அவனது உடல் துடித்தபடி வெளித்தள்ளியது.
இரத்தினகுமாருக்கு மூத்திரம் மணத்தது.
தொhங்குபவனின் விழிகள் அந்தச் செந்நீரில் நீந்தி விளையாடுவது போலிருந்தது. தொங்குபவனின் முகம் தன்னைப் போலவே இருந்ததை அவனது மூளையும் மனமும் உணர்ந்துகொண்டது. அவன் முக்குளிப்பதை இரசிக்கும் ஒருவனும் அங்கிருந்தான். கொம்ரேட் டுச்-சின்னின்* மூளையும் எண்ணமும் அந்த இரசிப்பவனின் சாயலுக்குள் ஒளிந்திருப்பதை இரத்தினகுமாரின் வழிகள் துடித்தபடி கண்டுகொண்டன.

அவனது வாயில் குரூரப் புன்னகையொன்று நெளிந்த நிலையில் உறைந்திருந்தது. உதடுகளின் இடைவெளி  செத்துக்காய்ந்த பாம்பின் உடல்போல் வறண்டிருக்க குரூரம் நஞ்சாய்க் கசிந்து உலர்ந்து கிடந்தது. அவனது கைகளிலும் கால்களிலும் இரத்தம் காய மறுத்த அடத்துடன் வழிந்து சித்திரமாய்ப் படர்ந்து படிந்திருந்தது.
பார்வை அவனது முகத்தை நோக்கி நகர்வதற்கிடையில் கிறிஸ்தோபர் இரத்தினகுமாரின் விழிகள் உறக்கத்துள் அமிழ்ந்து போயின.
உயிர்ப்பதற்கு முன் இயேசு எவ்வாறான வேதனைகளை எனுபவித்தாரென போதகர் றொகான் மிகவும் உணர்வுபூர்வமாக கூறிக் கொண்டிருந்தார். கிறிஸ்தோபர் இரத்தினகுமார் அதனை எந்தவித சலனமுமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.
குறித்த ரிதத்தில் அவனது தோள்கள் குலுக்கிக் கொண்டன.
*பொல் பொட் ஆட்சியில் கமர் ரூஜ் இயக்கத்தினர் நடத்திய பயங்கரமான கொடுமைகளின் போது டுவால் ஸ்லெங் (Tuol Sleng )என்ற சிறையின் வோர்டனாக இருந்தவன். நடந்த கொலைகளில் 17000 கொலைகளுக்கு பொறுப்பானவன்.

மிக மூர்க்கமாக ஆணிகளில் அறையப்பட்ட வலியும் இரத்தமும் தன்னைச் சுற்றி உறைந்திருப்பதான எண்ணம் இரத்தினகுமாரின் எண்ணங்களை சூறையாடிக்கொண்டிருந்தது. அவனது விழிகள் அந்த வலிகளுள்ளும் வடியும் இரத்தத்துள்ளும் நுளைந்து நுளைந்து வெளியேறிக் கொண்டிருந்தன.
கொலை செய்யும்போதிருக்கும் கண்களை இரத்தினகுமாருக்கு நன்றாகத் தெரியும். அந்தக் கண்களின் விழிகள் எப்போதும் விரிந்திருக்க வாய்ப்பேயில்லை. புருவங்கள் குவிந்தபடியே எப்போதும் இருக்கும். கிறஸ்தோபர் இரத்தினகுமாரின் மூளையும் மனமும் இந்தக் கண்களை உதன் உறை நிலையில் பாடமாக்கித் தனக்குள்ளேயே வைத்திருந்தன.
குளிரேறிய அன்றிரவு இருள் சற்று அதிகப்படியான ஈரத்துடனிருந்தது. மௌனத்துக்கான இடைவெளிகள் அவனைச் சுற்றி வழமைபோல கொட்டப்பட்டுக் கொண்டேயிருந்தன. நித்திரையும் அவனருகில் சுற்றிவைக்கபட்டிருந்தது. மூளையும் மனமும் அந்தக் குரூரமுறைந்த கண்களைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
திடீரென எழுந்து ஆலயத்துள் ஓடினான். வழமையாக இருக்குமிடத்தில் அமர்ந்து கொண்டான் மூச்சு இலேசாக இழைத்தது. மெதுவாகத் தலையை உயர்த்தி சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்த்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே தொங்கவிடப்பட்டிருந்த சிலுவையின் மேற்புற ஆணி கழன்று சிலுவை தலைகீழாக வந்து நின்றது. இப்போது இயேசு தலைகீழாகத் தொங்கினார்
மீண்டும் வீட்டுக்குள் இரத்தினகுமார் ஓடிவந்து அமர்ந்து கொண்டான். தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டபின் பைபிளை எடுத்துப் புரட்டத் தொடங்கினான். நீராய் சலனப்படும் இயேசு இங்கேயும் அதேபோல் சிலுவையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தார்.
உண்மையில் தலைகீழாகத்தான் தொங்கவிட்டிருப்பார்களா?
'ச்சீ... அப்பிடியெண்டா கைகளை பின்னுக்கெல்லோ கட்டி வச்சிருப்பாங்கள்.'
விழிகள் இரண்டும் வலிகளும் செம்மையும் கலந்து நெகிழ்ந்த தாள்களுக்குள் முக்குளித்து மீண்டன. மிதந்து வரும் எண்களைச் சேகரமாக்கிக் கொண்டான். மீண்டும் அந்தக் குரூரக் கண்கள் இருளில் தொங்க முற்படும்போது முதலாவது அழைப்பை ஏற்படுத்தினான்.
' நீங்கள் அழைத்த இலக்கத்தை தற்போது அடையமுடியாதுள்ளது...'
மீண்டும் அழைத்தான்.
மீண்டும் மீண்டும் அழைத்தான்.
தொலைபேசி இலக்கம் அழைப்புகளால் தொடர்ந்து முற்றுகையிடப்பட்ட வண்ணம் இருந்தது. இது மீட்சி பெறும் வழியென கிறிஸ்தோபர் இரத்தினகுமாரின் மனம் நம்பத் தொடங்கியிருந்தது.
வெட்டிப்போடப்பட்டிருந்த தென்னை ஓலைகளுக்கு மேல் குந்தியிருந்தபோது இது ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. எந்தப் பற்றுமில்லை...
 எந்தக் கடவுளுமில்லை....
எந்த இலக்கமுமில்லை...
பயத்துக்கான அழைப்புகள் மட்டுமே அவனைச் சுற்றிச் சேர்ந்து கொண்டிருந்தன.
எனினும் இப்போது இந்தத் தேவைப்படாத அழைப்பை ஏற்படுத்த கிறிஸ்தோபர் இரத்தினகுமார் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தான். நகமில்லாத சுட்டு விரல்கள் இலக்கங்களை ஏதோவொரு வேகத்துடன் ஓடியோடி அழுத்திக்கொண்டிருந்தன.
எனினும் விரல்களில் காணப்பட்ட பதட்டம் அவனில் காணப்படவில்லை.
இரவு ஒரு பதுங்குகுளி போலவே தனது வாயைப் பிளந்திருந்தது. இரவு எப்போதும் போல பதட்டங்களை விழுங்கிக் கொண்டேயிருந்தது. அழைப்புகள் நிறைய நிறையக் குழி மூடிக்கொண்டது.
இரவின் வெளியில் மரணம் காத்திருப்பதான பிரமையை உள்வாங்கி அவனது உடல் அதனைப் பாவனை செய்து இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
இரவு – அது பெரும் பதுங்குகுழி
மரணம் - கடந்துவிடமுடியாப் பெருவெளி
அவன் கடந்துவந்த வெளி வர்ணங்கால் பூசப்பட்ட முகட்டைக் கொண்டது. சிவப்பும் கருப்பும் அதிகம் பூசப்பட்ட முகடு. அந்த முகட்டைப்போலவே அவனுக்கான இரவுகளும் துடைக்கப்படாதவை. அவனது ஒவ்வொரு இரவுகளிலும் சிதறியிருக்கும் மூளையும் இரத்தமும் நிணமுமாய் குழந்தைகள் சிதறிக் கிடக்கும் காட்சியும்.... நிறை வெடிலும்.... அள்ளியிறைக்கப்பட்டிருந்தன. இரவின் சுவர்களில் பசியும் பட்டினியுமாக இருந்த மனிதர்களின் ஓவியங்கள் மறைய மறுத்தன.
கிறிஸ்தோபர் இரத்தினகுமார் தன்னந் தனியே இரவுக் குழிக்குள் பதுங்கிக் கொண்டான்.
தூரத்தே எறித்த பார்வையுடன் அந்தத் தொலைபேசி  இலக்கங்களைத் தன்னிச்சையாக கைகள் அழுத்த, அவனது மூளையும் மனமும் இருளைத் துளாவித் துளாவி குரூரமாய் உறைந்த அந்தக் கண்களை இழுத்துக்கொள்ள முயற்சித்தன.
இருளைச்சுற்றி இருளுக்குள் அவனது மனமும் மூளையும் நாய்போல இளைக்க இளைக்க ஓடிக்கொண்டேயிருந்தன.
இரத்தினகுமார் தலைகீழாகத் தொங்க. அவனது முகம் மூத்திரத்  தொட்டியில் முக்குளித்துக் கிடந்தது. அவன் முக்குளிப்பதை அந்தக் குரூரக் கண்களுக்குச் சொந்தக்காரன் இரசித்துக்கொண்டிருந்தான். அவனது நிழல் அங்கிருந்த சிறு துண்டு ஒளியில் பூதாகரமாய் நீண்டிருந்தது. அந்த நிழலுக்குள் பல உருவங்கள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன. அவனது முகத்தில் குரூரப் புன்னகை பாம்பு போல நெளிந்த நிலையில் உறைந்திருக்க, இப்போது அவனது முகம் வெளிச்சத்துக்குள் சிக்குப் பட்டிருப்பதை கிறிஸ்தோபர் இரத்தினகுமார் கண்டுகொண்டான். மிக மெலிந்த உயரங்குறைந்த தோற்றத்திலிருந்த அந்தக் குரூரக் கண்ணுக்குரியவனின் முகம் இரத்தினகுமாரின் சாயலை அப்படியே கொண்டிருந்தது.
இப்போது அழைப்பை ஏற்படுத்தும் முயற்சியை கிறிஸ்தோபர் இரத்தினகுமார் கைவிட்டிருந்தான்.
            

 ந.மயூரரூபன்