புதன், 10 மார்ச், 2010

தேவியின் ஆசைகளும் அதற்கான மொழிபெயர்ப்பும்

-ந.மயூரரூபன்
சடாரென்று எழுந்து உட்கார்ந்தேன். நான் விழித்துப் பார்ப்பது என் விழிகளுக்கே அந்நியமாய் இருப்பது போல் ஓர் கூச்சம் இமைகளில் ஒட்டிக் கொண்டது. நானாகவே எழுந்தேனா? எனக்குள் எழுந்த வினாவில், என் உணர்வுகளுக்கு உடன்பாடில்லை என்பதை என்னால் அறிய முடிந்தது. இதனை மிக நீண்ட தூக்கமாய் நான் கருதவில்லை. ஏனெனில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் தூங்கிய எனக்கு இடைக்கிடை ஏற்படும் இவ்வாறான விழிப்புக்கள் நுளம்புக்கடியின் சிறிய சிறிய அருட்டல்களாகவே தோன்றுகின்றன.



எனினும், பதினாறு அல்லது பதினேழு மாதங்களில் ஏற்பட்ட திடீர் விழிப்புத்தான்.



நானாக அருண்டிருக்க மாட்டேன். அருட்டியவர்களைத் தேடிச் சலிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் எனக்கு இல்லை. என் வாரிசுகள் பற்றி எனக்கு நன்கு தெரியும். இப்போது தூக்கத்தின் கனதி என்னை விட்டு இறங்கிவிட்டது.

இமைச்கூச்சத்தை உதறியெறிந்து விழிப்பார்வைகளை விரியவிட்டேன்.



சிறைக்கூடம்தான்.



வெளியேயிருந்து பார்ப்பவர்களுக்கான அற்புதச் சிறைக் கூடம். உள்ளிருந்து எனது உணர்வுகளையும் ஆசைகளையும் வழமை போல் வளர்த்துக்கொள்ள வசதிகளனைத்தும் உள்ளே வகையிட்டு இருந்தன.



என் நூற்றாண்டு ஆசைகளின் எச்சங்களும், அதுபற்றிய கனவுகளும் செல்லரிக்காது பேண அழகிய பெட்டகமொன்று எனக்கருகே இருந்தது.



எழுந்தேன்.

யானைகள் அணி வகுத்து நின்றன.

படை வீரர்கள் கவசம் பூண்டு, ஆயுதம் தாங்கி, என் வார்த்தைகளை எதிர்பார்த்து காதுகளில் உயிர்ப்பினை நிறைத்திருந்தனர்.

மஞ்சளுடை போர்த்திய,

புரவிகளின் வழி திறக்கும் எங்கள் மதிப்பிற்குரிய குரு ஆசி கொடுத்து ஒதுங்க நான் நீண்ட வாளுடன் அம்பாரி மேல் ஏறி அமர்ந்தேன்.

வாயிலிருந்து வார்த்தை பிறந்தது.

மண்ணிலிருந்து புழுதி பறந்தது.

வாளிலிருந்து இரத்தம் சொட்டியது.



ஒவ்வொரு தடவையும் எனது துயில் நீங்கலில் இந்த நினைவுகள்தான் - (கனவுகள் என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் என்னால் அவ்வாறு சொல்ல முடியவில்லை.) குளிப்பாட்டுவனவாய் இருந்தன.



இன்றும் மாற்றமேதுமின்றி அப்படியே இருக்கின்றன.



புத்துணர்ச்சி புகுந்துகொண்டதாய் உணர்வுகள் எனக்கு ஞாபகப்படுத்தின.

பெட்டகத்தை நெருங்கினேன்.

ஆசைகளின் சேமிப்பு; எனது பொக்கிசம்.

பெட்டகத்தினை மிகுந்த அன்புடன் தடவினேன். நானென்று என்னை அடையாளப்படுத்துவதே இந்தப் பெட்டகந்தானே. என் மகனின் தலையினைத் தடவுவதாயும் எனக்குள் நினைப்பு ஓடியது. ஒருவித ஆவல் நிறைந்த வேகத்துடன் யன்னலை நோக்கிப் பாய்ந்தேன்.



கால்களில் பூக்கள் மிதிபட்டன.

அப்போதுதான் பார்த்தேன். எனது கட்டிலின் பகுதிகளில் வாடாத அற்புத மலர்கள் - அருமையான அல்லி மலர்கள் தரையிலும் பரவியிருந்தன.

ஊதுபக்தியின் வாசனையை இப்போது நன்றாக எனது நாசிகள் நுகர்ந்து கொண்டன.



எனக்குள் மகிழ்ச்சி பீறிட்டெழுந்தது.

கரைபுரண்ட சந்தோச வேக்காட்டுடன் சத்தமிட்டுச் சிரித்தேன்.

எனது விம்மும் இதயம், இச்சேதியை யாருக்காவது சொல்ல வேண்டுமெனத் துடித்தது. எனது துரதிஷ்டம், என்னருகே யாருமே இல்லை.



மன்னர், விகாரமாதேவியின் இந்நிலையைப் பார்க்க நேரிட்டிருந்தால்…..

“ஹஹ்ஹஹ்ஹா…..”

அவருடைய முகத்தின் கோணலைக் கற்பனையில் ரசிக்க நன்றாய்த்;தான் இருக்கிறது.



சிரித்தபடியே பெருமிதமாய் எனது பெட்டகத்தின் மீது விழிகளால் தடவினேன்.

எனது மகிழ்ச்சி அக்கணத்தில் திடீரென என்னைவிட்டு ஓடியது.

எனது உற்சாகத்தின் முதுகெலும்பை யாரோ உருவி எறிந்துவிட்டார்கள்.



யாரோ? – அது எனது வாரிசுகளேதான்.



பெட்டகத்தினை மீண்டும் நெருங்கினேன்.

முதலில் நான் இதனைக் காணவில்லையே…

கவனிக்கத் தவறிவிட்டேன்.



பெட்டகத்திற்கு அல்லி மலர்களால் மாலை போடப்பட்டிருந்தது. அது ஆயிரம் மலர்களாகவே இருக்க வேண்டும். அருகே பெரிய சாடியொன்றில் தேன் நிறைந்திருந்தது.



எனது ஆசைகளுக்காய் இன்றும் அவற்றினை நிறைவேற்றி இருக்கிறார்கள். மூன்றாவது ஆசையான தமிழ்த் தளபதியின் தலையையும் அர்ப்பணித்திருப்பார்கள்.



மகிழ்ச்சிதான்.

எனினும், எனக்கான மரியாதை எனது ஆசைகள் பொதிந்த பொட்டகத்திற்கானதேயென்ற உண்மைதான் என்னை நிலைகுலைய வைக்கிறது.



பெட்டகத்தின் முன்னே தட்டுக்களில் பழங்கள் படைக்கப்பட்டிருந்தன.

கொழுத்தப்பட்ட ஊதுபத்திகளின் வானை அங்கு காவல் வளையத்தினை ஏற்படுத்தியிருந்தது.



எனக்கு நன்றாகவே புரிந்தது.

பெட்டகத்தின் உடமைக்குச் சொந்தக்காரி என்பதால் எச்சமலர்கள் ஒரு சில, எனக்காக.

இது வழமைதான்.

எனது துக்கத்தின் பின்னான ஒரு சடங்கு,

எனினும் ஒவ்வொரு தடவையும் எனக்கவை புதியனவாகவே உணர்ந்து கொள்கிறேன்.



பெட்டகத்தினடியில் தளர்ந்தமர்ந்து, சிறிது நேரம் மோன நிலைப்பட்டவளாயானேன்.



ஏதோவொரு திடுக்கிடலில் என் நிலைகலைந்து எழுந்து பெட்டகத்தினைத் திறந்தேன். திறக்கும் நொடிகள் ஒவ்வொன்றிலும் இனம் புரியாத ஓர் உணர்வு என்னைச் சூழ்ந்து கொள்கிறது.



ஆயிரம் ஆண்டுகள் …..

இன்னுமோர் ஆயிரம் ஆண்டுகள் …. பின்னோக்கிச் சென்று எனது உயிர்ப்புடன் கலந்து கொள்வதாய் ஓர் குழப்பமான நினைவுகள் படருகின்றன.

எனது நிலை சிறிது தடுமாறுவதாய்…..

…”ஆங்…..ம்….”

மெது மெதுவாக அவற்றிலிருந்து விடுபட்டு, எனது ஆசைகளின் அடுக்குகளை ஒவ்வொன்றாய்ப் பிரிக்கிறேன்.



எனது ஆசைகள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டனவாய்க் காணப்படுகின்றன. எனது ஆசையின் மூலத்தினைக் கொண்டு மொழி பெயர்த்த பிரதி மட்டும் அங்கே காணப்படுகின்றன. எனது ஆசையின் மூலத்தினைக் காணவில்லை. எனது நினைவடுக்கின் சேமிப்பினைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஆசையின் பிரதியில் மூலத்திற்கு அண்மித்ததாய் வார்த்தைகளைத் தேடினேன்.



நீண்ட வருடங்களில் ‘தேன்’ இரத்தமென மாற்றம் கொண்டிருந்தது. கூசாவினை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

‘பல்லாயிரம் தமிழர்களின் தலையாலான மாலை’ என மீண்டுமொன்று.

இது கால நீட்சியின் மொழி மாற்றமா?

இல்லை…? ம்….!



தொடர்ந்து ஏட்டினை வாசிக்க வேண்டிய தேவையில்லையென அவற்றிலிருந்து எனது உணர்வுகளை நான் திருப்பிக் கொண்டாலும், தொடர்ந்து வாசிப்பதற்கு எனக்கு ஏற்பட்ட பயமே முதற்காரணம். ஏனெனில் தேன், அல்லிமாலை, தளபதியின் தலை….என எனது ஆசைகளின் கிடைப்பிடத்தை ஒன்றெனப் பிணைத்து ஆசையின் மூல நாயகியாய் என்னை அடியிலே முத்திரை குத்திருப்பார்கள்.



எனினும் காலங்கள் வழியே கடந்து வரும் எண்ணங்களிலாலான மொழிபெயர்ப்பை முழுவதுமாய் புரிந்து கொண்டேன்.

சரி! எனது ஆசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமே.

இன்றைய வேளையிலும்…

எனது ஆசைகளை நிறைவேற்றும் என் அருமை மைந்தன் எங்கே?

யன்னலை நோக்கி ஓடினேன், எட்டிப் பார்த்தேன்.



காமினி அபயா!



முன்பு போலவே விசாலமான கட்டிலில் ஒடுங்கியபடி சயனித்திருந்தான்.

நீண்ட தூக்கம்.

கண்ணாடி அறைக்குள் விழிப்பதற்குரிய அறிகுறி எதுவுமேயின்றி அசையாது கிடந்தான். கண்ணாடிக் கூண்டிற்கு வெளியே பலருக்கு அவனது நித்திரை பற்றிய மொழி பெயர்ப்பு நிகழ்த்தப்படுவதைப் பார்த்தேன்.

தங்களில் என்மகனை உணர்ந்துகொள்ள பலர் படுக்கையில் நித்திரை பழகிக் கொண்டிருந்தார்கள்.



எனது கனவுகளில் இருந்து மீண்டெழுந்த நான் எனது சிறையினை மீண்டும் பார்த்தேன்.



எனக்கான உணர்வுகள் என்னைத் தொற்றிக் கொண்டன.



நான் விழித்தெழும் ஒவ்வொரு வேளையிலும் எனது ஆசையினை நிறைவேற்றிக் கொள்ளும் அவா எனக்குள் புகுந்து கொள்வதுண்டு. இன்றும் அது என்னை பிடரிபற்றித் தள்ளியது. எனது ஆசையின் பிரதிகளை தூக்கிக் கொண்டேன்.



யானைகள் அணிவகுத்து நின்றன.

படைவீரர்கள் கவசம் பூண்டு ஆயுதம் தாங்கி என் வார்த்தைகளை எதிர்பார்த்து காதுகளில் உயிர்ப்பினை நிறைத்திருந்தனர்.

நான் நீண்ட வாளுடன்…

மீண்டும், தேவியாய் எழுந்தேன்.





வெளிச்சம் 2003

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக