திங்கள், 5 ஏப்ரல், 2010

மரத்தில் தொங்கும் பாம்பு

-ந.மயூரரூபன்


இருளை கரைக்கும் முனைப்புடன் மழை பெய்துகொண்டிருந்தது. இருளின் கருமை செறிந்து கொண்டிருப்பது தெரியாமலேயே மழை வேகத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. இருளும் மழையும் நட்புடன் இருப்பதான வெளித்தோற்றம் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. கனத்த இருளையும் மழையின் வேகத்தினையும் பார்த்து உயிரை சுமந்திருந்த அனைத்தும் தங்கள் கூடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்தன.
மழை ஓயத் தொடங்கியதும் கத்தும் யோசனையுடன் சில் வண்டுகள் காத்திருந்தன. நிலத்தின் திடத்தினை கரைக்கும் சுவடுகள் நான் படுத்திருக்கும் நிலத்திலும் தெரியத் தொடங்கி விட்டது.  கைகளால் நிலத்தினை தொட்டுப் பார்த்தேன் நிலத்தின் ஈரம் நடுக்கத்துடன் கைகளுக்குள் இறங்கியது.

 அருகில் நீலப் பாயில் படுத்திருக்கும் அவளைப் பார்க்கிறேன். தலை முடிகள் ஒட்ட வெட்டப்பட்டிருந்த அவளது முகத்தில் அவளின் இயல்புகளின்  சாவைக் காண முடிந்தது. கண் இமைக்குள் மூடுண்டு தூக்கத்தின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இரு கண்களிலும்  பயத்தின் முளைகளுக்கான வாசத்தினை முகர்ந்து கொள்ள முடிகிறது. ஓடுவதற்கானதும் ஒளிவதற்கானதும் அருட்டுணர்வுகளால் களைத்துப் போன கால்களைப் பரிவுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிக்கிறேன்.
அவளின் முகத்தில் ஒரு சிரிப்பு நெளியாதா என்ற ஏக்கம் நினைக்கப்பட முடியாத எல்லா வேளைகளிலும் என் உணர்வின்றி வந்து போகின்றன.

மழையின் இரைச்சலைக் கடந்து தூரத்தே கேட்கும் வாகன இயந்திரத்தின் ஒலிக்காய் என் காதுகள் விழிப்பாய்க் காத்திருக்கின்றன. காதிற்குள் ஒரு துடிப்பின் ஒலி கேட்டது,
         “அயர்ந்து போனேனோ”
மிக வேகமாக விரைந்து வருகின்ற அந்த வாகனத்தின் ஒலியால் எல்லாக் கூடுகளும் விழித்து விட்டன. வாகனம் நிற்கின்ற ஒலி கேட்டதும் அவளைத் திரும்பிப் பார்த்தேன,;
பாய் வெறுமையாக இருந்தது. அடிக்கடி நடைபெறும் இச்சடங்குகளினால் நன்கு பழக்கப்பட்டு போனாள்.

முட்கம்பிக்குள் ஓய்ந்திருக்கும் நிலத்துள் தன் ஒளிர்வுக்காய் காத்திருக்கும் ஒரு சிறு வாஞ்சைப் புள்ளியை நோக்கி அவள் பறந்து விட்டிருந்தாள். பதின்மூன்று வயதினில் தனது இருப்பினை தெளிவாக அவளது மனதினுள் வாங்கி இருந்தாள், தப்பிப் பிழைத்திருக்கும் என் ஒரு மகள்.

 நான் பதில்களை தயார்படுத்தி காத்திருக்கிறேன் அவர்களின் வருகைக்காய். .நிலத்தின் ஈரம் கால்களுக்குள் ஏறத் தொடங்குகிறது.

நான் வெளியே எழுந்து மழைக்குள் நடக்கத் தொடங்குகிறேன். இருளும் மழையும் களைப்பை உணராமல் தொடர்ந்தும் அப்படியேதான் இருந்தன. நெருக்கமாய் அடுக்கப்பட்டிருந்த கூடுகள் மழையில் குளித்துக் கொண்டிருந்தன. நான் நடந்து கொண்ருக்கின்ற போது எனது கண்களில் இருந்து வழிகின்ற கண்ணீரையும் மழை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கூடுகளிலும் பெருகுகின்ற கண்ணீர்த் துளிகளையெல்லாம் மழை தன் தாகத்திற்கானதாக்கிக் கொண்டிருக்கிறது.

கால்கள் புதைய சேறாய் நிலமாகிக் கொண்டிக்க அவ்வழியே நிதானமற்று நடந்து கொண்டிருக்கிறது. தடுமாறி விழுகின்ற பொழுதுகளில் எல்லாம் நீண்டு தொலைவு நோக்கி ஓடுகின்ற முட்கம்பிகளைப் பற்றியே எழுந்து கொள்கிறேன்.
கைகளில் பெருகும் வலிகளை உதடுகள் முனகும் வார்த்தைகளையும் குருதியையும் சுற்றி முட்கம்பி தனக்குள்ளே இழுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கூடுகளிலிருந்தும் முனகலாய் வரும் வேதனைகள் எல்லாம் முட்கம்பியினுள் மோதுப்பட்டு உடல் கிழிந்து விம்முகிறது. கண்களும் காதுகளும் மரத்துப் போன நிலையில் அதனையே வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறேன். முட்கம்பியின் முனைகளில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டே இருக்கிறது.
சேற்றுள் தேங்கும் மழை நீர் கரைத்தபடி நெளிந்து ஓடுகிறது.
மனத்தின் பாரத்தின் சுமையையும் அதன் கதறலையும் தாங்க முடியாமலேயே நடந்து கொண்டிருந்த எனது கால்கள் ஒரு மரத்தின் அடியில் தளர்ந்து கொள்கின்றன.
அப்படியே அமர்ந்து கொள்கிறேன்.

 எனக்கான பொழுதுகளைப் பற்றி என்னால் எப்பொழுதுமே சிந்திக்க முடியவில்லை. எனது மகளின் திரும்பி வருகையைப் பற்றிய எதிர்பார்புகள் கூட இனிவரும் பொழுதுகளில் என்னிடம் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் எனது எண்ணங்களின் எல்லா முனைகளையும் தின்றுகொண்டிருக்கின்றன.

எனது கண்களுக்குள் அடிக்கடி வந்து சிறைப்பட்டு, கண்களைக் காயப்படுத்தும் எனது மகனின் ஏக்கம் வழியும் விழிகள். கால்கள் இரண்டும் அறுந்துபோன நிலையில் குருதிச் சேற்றுக்குள் கைகளை அடித்தபடி அவன் பார்த்த பார்வைகள்….
 உயிர் மண்ணுள் இறைந்து போகிறதே என்ற அவலத்தில்…..
                                 “மறந்து போ..”
அதட்டிக்கொள்கிறேன்.
மறந்து போகிற எண்ணத்தில் வந்த அதட்டல் இல்லை அது. தாங்க முடியாத வேதனையின் வெடிப்பில் வந்தது அது.
நிலத்தில் மழை நீருடன் உழன்று சேறாகிப்போன மண்ணைக் கைவிரல்களால் பினைகிறேன். விரல்கள் நோவெடுத்துக் கதற முற்படும் வரை என் உணர்வுகளின் கொந்தளிப்பு அடங்கவில்லை.

மழை சற்று ஓய முற்படுகின்ற வேளையில் தவளைகளின் அவலக்குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் முளைத்துப் பெருகிக்கொண்டிருக்கும் அவற்றின் காதறையும் சத்தங்கள் என்னைச் சுற்றி அலைந்துகொண்டிருக்க அவற்றினை எனது வெற்றுக் கைகளால் விரட்ட முனைகிறேன்.
கைகள் சோர்ந்து வெற்றுக் காற்று வெளியினை உசுப்பும் முனைப்பைத் தவறவிட்டுத் தளர்ந்து விழுகின்றன.
சோர்வும் இயலாமையும் தமது முழுப்பாரத்தினையும் என்மீது அழுத்திக் கொண்டிருக்க, வகையின்றி இயலாமையில் வெளிப்படும் கண்ணீரின் சுதந்திரத்துடன் மரத்தின் வேரில் சாய்ந்தபடியேயிருந்தேன்.
மழை மெதுவாக சொட்டுப் போட்டுக் கொண்டிருந்தது, எனது துடிப்புகள் கேலி செய்யப்படும் உணர்வில் சுருங்கிக் கொண்டன.

நீண்ட நெடும் பொழுதுகள் கடந்ததோ?
முடிவற்ற மௌனப் பெருவெளி உடைவு கண்டதென திடுக்கிட்டு விழித்தேன், உணர்வுகள் சுயஉருப்பெறும் கணங்களைக் கண்டுகொண்டேன். மேலிருந்து ஒற்றை நீர்த்தாரையொன்று எனது தலையில் சொட்டிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
மன்னிக்கவும்!
“உணருகிறேன்”; என்று என்னால் சொல்ல முடியவில்லை.
ஏனெனில் உடலும் உணர்வும் என்னில் புறமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்பதனை சில பொழுதுகளில் நான் உணரும் தகுதியினைப் பெற்றிருக்கிறேன்.
மரத்தின் கிளையினை உற்றுப் பார்க்கிறேன்,
கருமையாய்ச் சுருண்டிருந்தது ஒரு பாம்பு.
அது என் மீது மூத்திரம் பெய்து கொண்டிருப்பதை எதுவித சலனமுமின்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக