செவ்வாய், 9 மார்ச், 2010

பெத்தாச்சி


-ந.மயூரரூபன்

வெயிலில் வெறித்திருந்த வளவுக்குள் பெத்தாச்சியின் நடமாட்டத்தைக் காணேல்ல….. வரம்பால இறங்கி பெத்தாச்சி வீட்டு ஒழுங்கைக்குள் ஏறி நடந்தன். வீட்டு முத்தத்துக்கு கிட்டவா நிண்டிருந்த ரண்டு தென்னையையும் காணேல்ல. நடு முற்றத்துப் பனை நிண்டிருந்த புட்டியும் வெளிச்சிருந்தது.
அப்புவின்ர உடைஞ்சுபோன வண்டிலும் ஒருதற்ற கையும் படாததால உக்கத் தொடங்கியிருந்தது.

வீட்டுக் கூரை இறக்கத்தின் மூலையோடுகள் உடைஞ்சிருக்கு…..
ஒரு பக்கச் சுவரும் இடிஞ்சு, பிறகு கட்டினது மட்டும் துருத்திக்கொண்டு தெரியுது….
நான் ஊர் பள்ளிக்கூடத்தில படிக்கேக்குள்ள நெடுகவும் பெத்தாச்சியோடதான் இருப்பன். இப்ப ரவுணுக்கு போனதால அவவை பாக்கக்கூட முடியிறேல்ல.
நானும் பெத்தாச்சியும்தான் ஆட்டுக்கு குழைவெட்ட மணலுக்குப் போறனாங்கள். பெத்தாச்சியோட போறதெண்டா ஓரே கொண்டாட்டந்தான். நிறைய கதையளெல்லாம் சொல்லிக்கொண்டு வருவா. அவ சொல்லித்தான் இஞ்ச இருக்கிற ஒவ்வொரு இடமும் எனக்கு நல்லாத் தெரியும். ஊரில பாக்குற எல்லா இடத்திலயும் பெத்தாச்சியத்தான் என்னால காணமுடியுது.

மணல்ல பாலை, சீந்தில், தவிட்டை குழையளைத்தான் பெத்தாச்சி தேடித்தேடி அறுப்பா. அவவுக்கு தெரியும் எந்தெந்த ஆட்டுக்கு எந்தெந்த குழை பிரியமெண்டு. குழைவெட்டுறதுக்கெண்டு பிள்ளைத் தடியொண்டும் பெத்தாச்சியிட்ட இருக்கு.
ஒரு கைக்கடக்கமான தடியில கத்தி கட்டியிருக்கும்… குழை அறுக்குறதுக்கு தோதானதுதான்.
குழையோட திரும்பி வரேக்குள்ள ஒவ்வொரு விறகுக்கட்டும் கொண்டுவருவம். முக்காவாசித்தூரம் என்ர சின்ன விறகுக்கட்டையும் பெத்தாச்சியே தூக்கிகொண்டு வருவா.

பூசின சுவரைப் பாத்துக்கொண்டு படலையடில நிண்டு கூப்பிட்டன்;
“பெத்தாச்சி……… பெத்தாச்சி………..”
“…….ணேய் பெத்தாச்சீய்ய்………”
ஒரு அசுமாத்தத்தையும் காணேல்ல.
ஆனா கனபேர் கதைக்கிற மாதிரியான சத்தமும் கேக்குற மாதிரிக் கிடக்கு.
ஒருத்தரயும் என்னால பாக்க முடியேல்ல.
“கிழவி வீட்டில இல்லயோ”
கிழவி வீட்டில எங்க நிக்கும், குடு குடுவென்டு எங்கையெண்டாலும் ஓடிக்கொண்டெல்லே இருக்கும்.

இப்படித்தான் குழைவெட்ட ஒரு நாள் போனம். பெத்தாச்சி முன்னுக்குப் போய்கொண்டிருந்தா.
அவ கையில வச்சிருந்த பிள்ளைத் தடியை,
“ணேய் உத இஞ்ச கொண்டு வாணை….” எண்டு இழுத்தன்.
“டேய் பெடி பேசாம வா…..இது உன்ர கையில இருந்தா அருமந்த குழையளையும் தடியளையும் அறுத்து விழுத்திக் கொண்டு வருவாய்…..
என்னட்டயே கிடக்கட்டும்…….வா….”
மள மள வெண்டு மணலில் கால் புதையப் புதைய நடந்துகொண்டிருந்தாள்.

பாதை மாறிப்போட்டுது.
கிழவி எனக்குச் சொல்லேல்ல, அங்கையுமிஞ்சையும் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.
கடற்கரையும் வந்துட்டுது... தூரத்துல அஞ்சு கொட்டிலுகள் தெரிஞ்சுது.
“அதென்னணை ஆச்சி”
தொலைவா மரங்களப் பாத்து கணக்குப் போட்டுக் கொண்டிருந்த ஆச்சி திரும்பி,
“அதுதான் மேன… வாடிவீடு”
“வாடிவீடோ…..” கேக்கிறதுக்குள்ள ஆச்சியின் முகத்தப் பாத்து கேள்வியக் கைவிட்டன்.
யோசனைக்குள் புதைஞ்சிருந்துது முகம்.
“பெடியா வரேக்குள்ள அந்தக் கொடிய மிதிச்சனியே”
“எந்தக் கொடிய…”
“அது தான்ரா… பச்சையும் சிவப்புமா… சுருண்டிருக்கும்”
“காலுக்குள்ள ஏதோ இழுவட்டதுதான்…நான் பாக்கயில்லையணை…”
“உதுதான்ரா எங்கள இப்படி ஏய்க்குது” என்று பெருமூச்சு விட்டாள் பெத்தாச்சி.
நாங்கள் சுத்திச் சுழல சூரியனும் மணலை விட்டு மறைய தொடங்கிவிட்டான்.
“மேன கெதியா….அந்தா…. தூரத்தில தெரியிற பெரிய சவுக்கப் பாத்து நட…… குண்டஞ்சி வீடா இருக்கோணும்….அங்க போனாச் சரி..”
“…………….”
ம் பராக்கு பாக்காமல் நட”
அதட்டியபடி வேகமா நடந்தாள் பெத்தாச்சி.
குடுகுடுவென்டு இப்பிடி ஓடிக்கொண்டிருக்கிற பெத்தாச்சியாவது வீட்டில நிக்கிறதாவது.

படலையைத் திறந்துகொண்டு வீட்டுக்குள்ள போக கண்ணில பட்டுது, சரிஞ்சுரிருந்த பூவரசு. எனக்குள்ள ஏதோ அறுபட்டுது.
பெருமூச்ச இழுத்து விட்டபடி பூவரசப் பாத்தன்.
“ஆரோ வெட்டித்தான் விழுத்தியிருக்கிறாங்கள்”
அது பெத்தாச்சியின்ர வேலியில இருந்த மொக்குப் பூவரசு.
ஆச்சி அடிக்கடி எனக்கு பூவரசக் காட்டி சொல்லிக்கொண்டிருப்பா.
“டேய் ….மேன….இந்தக்குத்திதான் என்ரநெஞ்ச வேக வைக்கோணும்…. அதுக்காகத்தான் இத விட்டு வச்சிருக்கிறன்”
கிளைகள் அறுபட்டு மணலில் கிடந்த பூவரசப் பாத்தன்… கண்களில கண்ணீர் கீறியது.

யாரோ எனது கையப் பிடிச்சு பக்கத்திலிருந்த நிழலுக்குள்ள இழுத்திச்சினம்.
என்ர கண்கள் ஒருதரயும் அறிஞ்சு கொள்ளேல்ல.
காற்று மட்டும் சூடான மூச்சுக்களைக் காவி எனக்கு ஏதோ நினைபூட்டவெண்டு என்னில மோதிச் சுழண்டு திரிஞ்சுது.
நான் பூவரசையே வெறிச்சுப் பார்த்துக்கொண்டு நிண்டன்.
“இது பெத்தாச்சியின்ர பூவரசு “

ஒருக்கா எங்கட சுடலைக்கு மயிலம்மான் என்னைக் கூட்டிக்கொண்டு போய்க்காட்டினவர்,
“டேய் இஞ்ச பார் இது நேசத்த எரிச்ச இடம்…..
...அதுதான் கொப்புவ எரிச்ச இடம்...”
அதில காடாத்திற்துக்காக அணைச்ச பூவரசங் குத்திகள் நூந்திருந்துது.
கொஞ்சநேரம் அதைத் தொட்டபடியே குந்தியிருந்தன.;

இடைக்கிடை லீவில ஊருக்குள்ள வரேக்குள்ள உடும்பு வேட்டைக்கும் பண்டி வேட்டைக்குமெண்டு இழுபட்டிருக்கிறன். அப்பவும் சுடலையும் பூவரசம்குத்திகளும் கண்ணில படும். பாத்துக்கொண்டே ஓடுவன். கண்கள் நனைஞ்சுகொண்டே கடக்க, மனமும் அதில தோஞ்சு சிலிர்க்கும்.
பத்து வருசமா என்னால எங்கட சுடலையை பாக்க முடியேல்ல. ஊருக்கு வாற நேரங்களிலயெல்லாம் நீளமான முள்ளுக்கம்பி வேலிய மட்டும் கொஞ்சநேரம் பாத்துத் திரும்பியிருக்கிறன்.
திரும்பேக்குள்ள புதுசா இடம்பிடிச்சுக் காத்திருக்கிற புதுச்சுடலையையும் கடந்துதான் வருவன். ஊருக்கு நல்லாக் கிட்ட இருக்கிற சுடலை, மனசுல எந்த மூலையையும் அருட்டினதில்ல.

கண்ணீர் விழுந்து கைகள் குளிர்ந்திச்சுது. நிமிந்து பாத்தன், பக்கத்தில அம்மா இருக்கிறா. நான் எழும்பி படலையைக் கடந்து மெதுவா மணல் பக்கமா நடந்தன்.
“நேரம் போகுது நீ எங்கயடா போறாய்”
அம்மா கேக்குறது, தூரமாய் வந்தது.
எங்கட சுடலையை தேடினன்.
அப்புவின்ர, நேசத்தின்ர ஊமையப்புவின்ர, பெரியண்ணாவின்ர …..எல்லாற்றையும் சுடலை இதுதான்.
கண்டுபிடிக்கேலாமல் கிடக்கு.
ம்….. இந்த ஆலமரத்த மட்டும் கண்டுபிடிக்ககூடியதாக் கிடக்கு….
இதுதான் ஆசையையாவின்ர அண்ணன் படுத்திருந்த ஆலடி.
ஆசையையாவின்ர அண்ணன் மூளை சுகமில்லாமல் மணலுக்கு வந்து ஒரு பத்தையச் சுத்து சுத்தெண்டு சுத்தி, பிறகு இந்த ஆலடியில தான் படுத்திருந்தவராம்.
வல்லிபுர சுவாமியை இந்த ஆலடியில வைச்சுத்தான் பராமரிச்சவை...
எனக்குத் தெரியும்.

ஆலமரம் மிகப்பெரிசாய் பெரிய இடத்தை பிடிச்சு வைச்சிருக்குது.
நிலத்தில குப்பையளும் தடியளும.;
வல்லிபுர சுவாமி இப்பவும் இருக்கிறாரோ?
ம் கூம் …. பராமரிக்க இஞ்ச ஒருத்தரும் இல்ல.
அண்ணன் மாதிரி ஆலமரத்த நான் சுத்தத் தொடங்கினன். கொஞ்ச நேரத்துல ஏலாமப் போட்டுது.
நாக்கு வறளத் தொடங்கீட்டுது.. உடம்பெல்லாம் தொய்ஞ்ச மாதிரி…..
நிழலில சுருண்டு படுத்தன்.

பெத்தாச்சி தன்னை எங்கட சுடலையிலதான் எரிக்கோணும் எண்டு வாய்க்குவாய் சொல்லுறவ……..
பெத்தாச்சிய நினைக்க நினைக்க மனசு கீறுப்பட்டு, வலிதான் பெருகுது.

...அங்க…..பெத்தாச்சி... பொக்கைவாய்ச் சிரிப்போட அப்புவின்ர வண்டில்ல ஏறியிருக்குறா…..
என்னப்பார்த்து கை காட்டுறாவோ…..!?
எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்துது.
மணலில முகம் புதைய அழுதுகொண்டேயிருந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக