வெள்ளி, 1 அக்டோபர், 2010

என்னைப்பற்றிய பிற்குறிப்பு-ந.மயூரரூபன்
இதமான எண்ணங்களின் அரவணைப்பில் சுருண்டிருந்தது மனது. உடலது உணர்வுத்துளிர்களில் ஒருவிதமான இன்பத்தேறல் துளிகளாய்ச் சொட்டிக்கொண்டிருந்தன. எனது ஒவ்வொரு அணுக்களும் மோகத்தின் மயக்கந்தரும் மகரந்தத்தின் வாசனையின் ஆக்கிரமிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து துடித்துக்கொண்டிருந்தன. அவளின் அன்பு பொலியும் முகம் என்னருகே என்னையே பார்த்தபடி...........
நான் உணர்வுகளில் சரணடைந்து, என்னிலை மறந்து அவள் முகத்தினை நெருங்கினேன்.
ஒளிச்சிதறலுடன் வெடித்துச்சிதறியது காற்று.
என் கண்கள் இருளையே கண்டன. ஒளியைப் பார்க்க முனையும்போது சிதறிய உயிரின் துகள்களில் என்முகங்களே பலவாய்த் தெரிந்தன.

நினைவுகளின் அடுக்குகளில் வெடிக்கும் உண்மையின் கனவாயே இது எனக்குள் சேகரமாகிக்கொண்டிருக்கின்றது. மெதுவாக கால இழை படிகிற வாழ்க்கையின் அடுக்குகள் எனக்குள் வாழ்வின் இன்பத்தின் வரிகளை ஒளித்து வைத்தன. என்னால் அவற்றினை தேடிக்காண முடியவேயில்லை. இப்போது வாழ்க்கையின் அடுக்குகள் அடிக்கடி இழைபிரிந்து என் மூச்சுக்காற்றினைக் கதறவே செய்விக்கின்றன.
எனது காற்று வெடித்துச்சிதறிய பொழுதினைக் கடந்தபோது, நான் உயிரினைப் பொத்திவைத்து ஓடத்தொடங்கியிருந்தேன். மணல்களில் கால்கள் புதைந்தெழும் ஓட்டத்திலும், காற்றின் வாதையிலும் உயிர் தளம்பிக்கொண்டேயிருந்தது.
இப்போதும் தளம்பிக்கொண்டிருக்கின்றது.

எனது உயிரருகே சாம்பர் மேடுகளின் சூடு மெது மெதுவாய்த் தணிந்துகொண்டேயிருக்க, அந்த சாம்பர் பூத்த வெளிகளைக் கிளறிக் கிளறி மனது கீழிறங்குகிறது. கீழிறங்கும் மனத்தின் மூலைகள் ஒவ்வொன்றிலும் என்னசைவின் படங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளையாய் தூசிபடிந்து போகின்றன.
கீழிறங்கும் மனது பல்லாயிரம் சிலுவைகளில் அறையப்பட்ட வலியையே தேடுகிறது.
 உயிர்பொத்தி ஓடுகின்ற பொழுதுகள் உன்னையும் அவனையும் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. ஆந்தப்பொழுதுகளின் இடுக்குகளில் நானும் தொங்கிக் கொண்டிருந்தேன். காற்றின் கதறலில் பயந்து பொழுதுகளில் அள்ளுண்ட என் நண்பன் தனது கைகளால் மணல் பறித்து என்னையும் தன்னுடன் அதற்குள் நுளைத்துக்கொண்டான். காற்று அவனின் கதறலை மட்டும் தன்னுடன் இழுத்தோடியது. அக்குழியின் வாசல் திறக்கும் நினைவுகளில் அவனது முகம் மிக நெருக்கமாக தன் கனவுகள் தூர்ந்து போன கண்களால் என்னை அழைந்து செல்லும்.
வாழ்க்கையின் வேர்கள் மறைந்திருந்து வேடிக்கை பார்க்க, மனதில் ஆணியடிக்கப்பட்ட வலிதரும் கண்ணீரில் நனைந்துகொள்கிறது-என் கீழிறங்கும் மனது.
..........................
இயல்புலகம் இதுவென சொன்ன இடம். நான் வெளிவருகிறபோது பலவீனப்பட்டிருந்த மனதினையும் உடலினையும் உறவுகளின் இயல்பிலும் மாசற்ற அன்பிலும் போக்குவதற்கு முனைந்தேன். எனினும் வீட்டில் முடங்கியிருக்கும் போது முகட்டில் தொங்கும் அந்தரத்தின் அரவணைப்பே என்னைத் தன்னுடன் உச்சி முகர்ந்து அணைத்துக்கொள்கிறது.

அப்பா நெல் விதைத்த வயல் என்னை அடிக்கடி அழைத்துக் கொள்ளும். ஆதன் மாறா இயல்பின் மடிகள் நீள நடக்கின்றபோதும், வயலின் நுனியிலுள்ள பனங்கூடலில் அமர்ந்து என்னைக் கரைத்தபோதும் நெருங்கி நின்று என் வலிநீவித் தடவ காற்றும் தயங்கி ஒதுங்கியது.அந்த சுடலைக்கருகே இருக்கும் தாமரைக்குளமும் அதனருகே ஒற்றையாய் நிற்கும் சிறுபற்றையும் நான் ஒதுங்கிப்படுக்க சலனமற்றிருந்தன.

உடலின் வலு வடுவாக உறைந்தபோதும் மனதின் வலி இன்னமும் இரத்தத்தினைக் கசியவே வைக்கின்றது.
என்னுயிரின் வெறுமையினை நான் என்னிலிருந்து தூக்கி வைக்க பிரயத்தனப்படவேயில்லை.
ஒளிச்சிதறலுடன் காற்று இப்போதும் எனக்குள் வெடித்துச் சிதறுகிறது. என்னைக் கடந்து போகும் காலத்துடன் சேர்ந்து நகரவே முடியவில்லை. காலம் என்னை மட்டும் தனியேவிட்டுப் போவதை வேடிக்கை பார்ப்பதற்கே முயற்சிக்கிறேன்.

அப்பாவும் அம்மாவும் என்னைச் சிறுபிள்ளை போல அவதானத்துடனேயே கவனிக்கிறார்கள். முதிரும் பருவத்திலும் அவர்கள்முன் குழந்தையாய்த் தளர் நடையிடுகிறது என் மனது. வெறும் சேதியாய் எவர்கள் என்னைக் கேள்விப்படுவதற்குப் பதில் நானாக அவர்களிடம் நான் இருப்பதில் கண்ணீர் வழியும் திருப்தி அவர்களுக்கு.

உலகம் தன்னியல்பில் அசைகிறது.!?
நான் அதனை புரிந்துகொள்ள முனையவில்லை.; நான் என்னைப் பிரித்துப் பார்க்கும் முயற்சியில் இறங்கினேன். என்னிலிருந்து நான் வேறுபட்டுக் கொள்வதற்கு காலத்தின் வரிகளையும் அதுதந்த வலிகளையும் அழித்துவிட முடியுமா?
பொழுதுகள் தம்மியல்பை மறந்துவிடுகின்றன.
அது வெறுமனே அனைத்தையும் காவிசெல்லும் வண்டியாயே ஓடிக்கொண்டிருக்கின்றது.
எழுதிவிடும் வரிகளை அடித்துவிடும் வெறுங்கதையாய் ஒருவரின் வாழ்வும் இங்கு இருந்துவிடவில்லை.
ஒளித்துவைக்கவே முடியும்.

ஒளித்துவைப்பதற்கான இடத்தினை எங்குபோய் நான் தேடுவது...?
ஒருவிடயம் எனக்குப் புரிவதேயில்லை.
இரவிலா பகலிலா ஒளிப்பது சிறந்தது?
எந்தக் காலக் கண்களில் மயக்கம் அதிகம்?
இருளைப்பற்றி நான் பேசுகின்ற பொழுதுகளில் இவனைப்பயம் முற்றாகத் தின்றுவிட்டது என்கிறார்கள். எனது வலிகளைச் சொல்லி அழுகிறபோது விளங்காத தத்துவத்துள் சரிந்துவிட்டான் என்கிறார்கள்.
இரவிலும் பகலிலும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
என்னை ஒரு அடையாளத்துடன் காணவே எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். உண்மையில் அடையாளங்களைத் துறக்கும் ஒரு நிலையே எனக்குத்தேவையானது.

என்னிலிருந்து நான் விலகிக் கொள்வதன் தேவை வலுப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. என்னுடன் நான் சேர்ந்திருக்கும் பொழுதுகளில் நான் ஆயுள் பலத்தினை இழந்துவிடுவேன் என சாத்திரிகள் கண்களை மூடியபடியே கூறினார்கள். அதற்கான குணங்குறிகள் பலதினையும் ஊரிலுள்ள குறிசொல்லிகள் அம்மாவிடம் சொல்லிச் சேர்ந்தழுதனர்.
சாத்திரக் குறிப்புகளும் குறிசொல்லிகளின் அருட்டல்களும் அம்மாவின் கண்ணீருடன் சேர்ந்து என்னை விரட்டி வந்துகொண்டேயிருக்கிறது. இங்கு கால இழைபடிகிற வாழ்க்கையின் அடுக்குகள்அடிக்கடி இழைபிரிந்து என்மூச்சுக் காற்றினை கதறவே செய்விக்கின்றது.

விழிகள் மயங்குகின்ற பொழுதொன்றில் வெறித்திருந்த வெளியொன்றில் நான் நடந்துகொண்டேயிருந்தேன் என்னுடன். எங்கும் வெம்மை ஏறிக்கொண்டிருப்பதை ஒதுங்கியிருந்த ஓரிரண்டு மரங்களும் அசைவற்றுப் பார்த்திருந்தன.
நான் நீள நடந்துகொண்டேயிருந்தேன்.
இருள் கனத்துப்படுத்திருந்த அந்தச் சரிவில் இறங்கி சிறுபற்றைக்கருகில் அமர்ந்துகொண்டேன். வியர்வை ஓடிக்கொண்டேயிருந்தது. நனைந்த சேட்டின் தெறிகளை கழற்றி விட்டுக்கொண்டேன்...
மூச்சு இரைத்தது.
மல்லாக்காகப் படுத்துக்கொண்டேன். வானில் நட்சத்திரங்களும் ஒளித்துவிட்டிருந்தன. நேரம் நீண்டுகொண்டேயிருந்தது, சடாரென எழுந்தமர்ந்தேன். வண்டுகள் கதறிக்கொண்டிருந்தன.
சுற்றுமுற்றும் பார்த்தேன், கதறலை நிறுத்திக்கொண்டன. தவளைகள் மட்டும் விட்டு விட்டுக் குரல் கொடுத்தன. அருகிலுள்ள தாமரைக்குளத்தின நெடியினை இப்போழுது உணரமுடிந்தது.
சிந்தனைகளை ஒதுக்கி பற்றையின் அடியில் மணலைக் கைகளால் வாரத் தொடங்கினேன். சாம்பர் பூத்த மணலைக் கிளறிக் கிளறி கைகள் கீழிறங்க மனதும் உடனிறங்குகிறது. கைகள் ஆழத்தைத் தேடியிறங்க மனதுமட்டும் பல்லாயிரம் சிலுவைகளில் அறையப்பட்ட வலியையே தேடுகிறது. கண்ணீரில் மனது தோய்ந்துகொள்கிறது.
களைத்துப்போய்ச் சற்றே அமர்ந்திருந்தேன். உடல் முழுதும் வியர்வையில் தோய்ந்திருந்தது. சாரத்தின் ஓரத்தினைத் துக்கி முகத்தினை ஆழுத்தமாய்த் துடைத்துக் கொண்டேன்.
பின் எழுந்து குளத்தினை நோக்கிச் சென்றேன். தண்ணீர் குளுமையற்று சூடாயிருந்தது. கைகளால் நீரினை அள்ளியள்ளி வாய்க்குள் விட்டேன். சூடு உடலுக்குள் நேர்கோடாய் இறங்குவதனை உணரமுடிந்தது. வயிறு நிறையும்வரையா மனது நிறையும்வரையா குடித்தேன்?
..........நினைவில்லை.
மீண்டும் பற்றையடியில் தோண்டத் தொடங்கினேன். தோண்டிமுடித்ததும் சேட்டினைக் கழற்றி வைத்துவிட்டு ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டேன். இருட்டில் சுற்றிவர இருப்பவையனைத்தும் என்னையே பார்ப்பதான பிரமையில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தேன். காற்றின் அருகாமை எனக்குத் தேவையாயிருந்தது, ஆழ மூச்சினை உள்ளிழுத்தேன். காற்றினை யாரோ கட்டிவைத்துவிட்டனர். தவளைகளும் காணாமலே போயிருந்தன.
நான் என்னை மெதுவாக அந்தக் கிடங்கினுள் வைத்து அழுத்தினேன். சாதாரணமான ஒரு பொருளை வைத்து மூடுவதுபோன்று மிக இலகுவாக இருக்குமென்று நான் நினைக்கவேயில்லை. மண்ணில் மறைந்திருந்து வேடிக்கை பார்த்திருந்த வேர் முனைகள் என்னை இறுக்கமாகப் பற்றிக் கொண்டன. என் மூச்சுக்காற்று ஒருகணம் பதறித்துடித்தது.
நான் கிடங்கினை மூடிவிட்டு எழுந்துகொண்டேன்.
நினைவின் அடுக்குகளில் வெடிக்குமந்த உண்மையின் கனவாயே இதுவும் எனக்குள் சேகரமாகிக் கொண்டிருந்தது. இப்பொழுது காற்று வெடித்துச் சிதறுகிற பொழுதுகளை நான் கலக்கமற்றுக் கடந்துகொண்டிருக்கிறேன். காற்றின் குளுமையையும் உணர முடிகிறது.தவிர
10022010

திங்கள், 5 ஏப்ரல், 2010

மரத்தில் தொங்கும் பாம்பு

-ந.மயூரரூபன்


இருளை கரைக்கும் முனைப்புடன் மழை பெய்துகொண்டிருந்தது. இருளின் கருமை செறிந்து கொண்டிருப்பது தெரியாமலேயே மழை வேகத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. இருளும் மழையும் நட்புடன் இருப்பதான வெளித்தோற்றம் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. கனத்த இருளையும் மழையின் வேகத்தினையும் பார்த்து உயிரை சுமந்திருந்த அனைத்தும் தங்கள் கூடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்தன.
மழை ஓயத் தொடங்கியதும் கத்தும் யோசனையுடன் சில் வண்டுகள் காத்திருந்தன. நிலத்தின் திடத்தினை கரைக்கும் சுவடுகள் நான் படுத்திருக்கும் நிலத்திலும் தெரியத் தொடங்கி விட்டது.  கைகளால் நிலத்தினை தொட்டுப் பார்த்தேன் நிலத்தின் ஈரம் நடுக்கத்துடன் கைகளுக்குள் இறங்கியது.

 அருகில் நீலப் பாயில் படுத்திருக்கும் அவளைப் பார்க்கிறேன். தலை முடிகள் ஒட்ட வெட்டப்பட்டிருந்த அவளது முகத்தில் அவளின் இயல்புகளின்  சாவைக் காண முடிந்தது. கண் இமைக்குள் மூடுண்டு தூக்கத்தின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இரு கண்களிலும்  பயத்தின் முளைகளுக்கான வாசத்தினை முகர்ந்து கொள்ள முடிகிறது. ஓடுவதற்கானதும் ஒளிவதற்கானதும் அருட்டுணர்வுகளால் களைத்துப் போன கால்களைப் பரிவுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிக்கிறேன்.
அவளின் முகத்தில் ஒரு சிரிப்பு நெளியாதா என்ற ஏக்கம் நினைக்கப்பட முடியாத எல்லா வேளைகளிலும் என் உணர்வின்றி வந்து போகின்றன.

மழையின் இரைச்சலைக் கடந்து தூரத்தே கேட்கும் வாகன இயந்திரத்தின் ஒலிக்காய் என் காதுகள் விழிப்பாய்க் காத்திருக்கின்றன. காதிற்குள் ஒரு துடிப்பின் ஒலி கேட்டது,
         “அயர்ந்து போனேனோ”
மிக வேகமாக விரைந்து வருகின்ற அந்த வாகனத்தின் ஒலியால் எல்லாக் கூடுகளும் விழித்து விட்டன. வாகனம் நிற்கின்ற ஒலி கேட்டதும் அவளைத் திரும்பிப் பார்த்தேன,;
பாய் வெறுமையாக இருந்தது. அடிக்கடி நடைபெறும் இச்சடங்குகளினால் நன்கு பழக்கப்பட்டு போனாள்.

முட்கம்பிக்குள் ஓய்ந்திருக்கும் நிலத்துள் தன் ஒளிர்வுக்காய் காத்திருக்கும் ஒரு சிறு வாஞ்சைப் புள்ளியை நோக்கி அவள் பறந்து விட்டிருந்தாள். பதின்மூன்று வயதினில் தனது இருப்பினை தெளிவாக அவளது மனதினுள் வாங்கி இருந்தாள், தப்பிப் பிழைத்திருக்கும் என் ஒரு மகள்.

 நான் பதில்களை தயார்படுத்தி காத்திருக்கிறேன் அவர்களின் வருகைக்காய். .நிலத்தின் ஈரம் கால்களுக்குள் ஏறத் தொடங்குகிறது.

நான் வெளியே எழுந்து மழைக்குள் நடக்கத் தொடங்குகிறேன். இருளும் மழையும் களைப்பை உணராமல் தொடர்ந்தும் அப்படியேதான் இருந்தன. நெருக்கமாய் அடுக்கப்பட்டிருந்த கூடுகள் மழையில் குளித்துக் கொண்டிருந்தன. நான் நடந்து கொண்ருக்கின்ற போது எனது கண்களில் இருந்து வழிகின்ற கண்ணீரையும் மழை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கூடுகளிலும் பெருகுகின்ற கண்ணீர்த் துளிகளையெல்லாம் மழை தன் தாகத்திற்கானதாக்கிக் கொண்டிருக்கிறது.

கால்கள் புதைய சேறாய் நிலமாகிக் கொண்டிக்க அவ்வழியே நிதானமற்று நடந்து கொண்டிருக்கிறது. தடுமாறி விழுகின்ற பொழுதுகளில் எல்லாம் நீண்டு தொலைவு நோக்கி ஓடுகின்ற முட்கம்பிகளைப் பற்றியே எழுந்து கொள்கிறேன்.
கைகளில் பெருகும் வலிகளை உதடுகள் முனகும் வார்த்தைகளையும் குருதியையும் சுற்றி முட்கம்பி தனக்குள்ளே இழுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கூடுகளிலிருந்தும் முனகலாய் வரும் வேதனைகள் எல்லாம் முட்கம்பியினுள் மோதுப்பட்டு உடல் கிழிந்து விம்முகிறது. கண்களும் காதுகளும் மரத்துப் போன நிலையில் அதனையே வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறேன். முட்கம்பியின் முனைகளில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டே இருக்கிறது.
சேற்றுள் தேங்கும் மழை நீர் கரைத்தபடி நெளிந்து ஓடுகிறது.
மனத்தின் பாரத்தின் சுமையையும் அதன் கதறலையும் தாங்க முடியாமலேயே நடந்து கொண்டிருந்த எனது கால்கள் ஒரு மரத்தின் அடியில் தளர்ந்து கொள்கின்றன.
அப்படியே அமர்ந்து கொள்கிறேன்.

 எனக்கான பொழுதுகளைப் பற்றி என்னால் எப்பொழுதுமே சிந்திக்க முடியவில்லை. எனது மகளின் திரும்பி வருகையைப் பற்றிய எதிர்பார்புகள் கூட இனிவரும் பொழுதுகளில் என்னிடம் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் எனது எண்ணங்களின் எல்லா முனைகளையும் தின்றுகொண்டிருக்கின்றன.

எனது கண்களுக்குள் அடிக்கடி வந்து சிறைப்பட்டு, கண்களைக் காயப்படுத்தும் எனது மகனின் ஏக்கம் வழியும் விழிகள். கால்கள் இரண்டும் அறுந்துபோன நிலையில் குருதிச் சேற்றுக்குள் கைகளை அடித்தபடி அவன் பார்த்த பார்வைகள்….
 உயிர் மண்ணுள் இறைந்து போகிறதே என்ற அவலத்தில்…..
                                 “மறந்து போ..”
அதட்டிக்கொள்கிறேன்.
மறந்து போகிற எண்ணத்தில் வந்த அதட்டல் இல்லை அது. தாங்க முடியாத வேதனையின் வெடிப்பில் வந்தது அது.
நிலத்தில் மழை நீருடன் உழன்று சேறாகிப்போன மண்ணைக் கைவிரல்களால் பினைகிறேன். விரல்கள் நோவெடுத்துக் கதற முற்படும் வரை என் உணர்வுகளின் கொந்தளிப்பு அடங்கவில்லை.

மழை சற்று ஓய முற்படுகின்ற வேளையில் தவளைகளின் அவலக்குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் முளைத்துப் பெருகிக்கொண்டிருக்கும் அவற்றின் காதறையும் சத்தங்கள் என்னைச் சுற்றி அலைந்துகொண்டிருக்க அவற்றினை எனது வெற்றுக் கைகளால் விரட்ட முனைகிறேன்.
கைகள் சோர்ந்து வெற்றுக் காற்று வெளியினை உசுப்பும் முனைப்பைத் தவறவிட்டுத் தளர்ந்து விழுகின்றன.
சோர்வும் இயலாமையும் தமது முழுப்பாரத்தினையும் என்மீது அழுத்திக் கொண்டிருக்க, வகையின்றி இயலாமையில் வெளிப்படும் கண்ணீரின் சுதந்திரத்துடன் மரத்தின் வேரில் சாய்ந்தபடியேயிருந்தேன்.
மழை மெதுவாக சொட்டுப் போட்டுக் கொண்டிருந்தது, எனது துடிப்புகள் கேலி செய்யப்படும் உணர்வில் சுருங்கிக் கொண்டன.

நீண்ட நெடும் பொழுதுகள் கடந்ததோ?
முடிவற்ற மௌனப் பெருவெளி உடைவு கண்டதென திடுக்கிட்டு விழித்தேன், உணர்வுகள் சுயஉருப்பெறும் கணங்களைக் கண்டுகொண்டேன். மேலிருந்து ஒற்றை நீர்த்தாரையொன்று எனது தலையில் சொட்டிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
மன்னிக்கவும்!
“உணருகிறேன்”; என்று என்னால் சொல்ல முடியவில்லை.
ஏனெனில் உடலும் உணர்வும் என்னில் புறமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்பதனை சில பொழுதுகளில் நான் உணரும் தகுதியினைப் பெற்றிருக்கிறேன்.
மரத்தின் கிளையினை உற்றுப் பார்க்கிறேன்,
கருமையாய்ச் சுருண்டிருந்தது ஒரு பாம்பு.
அது என் மீது மூத்திரம் பெய்து கொண்டிருப்பதை எதுவித சலனமுமின்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

திங்கள், 22 மார்ச், 2010

மரக்கட்டைகள்

-ந.மயூரருபன்கேட்கின்ற கேள்விகளும்இ ஒரு வாய் உணவும் எனது வாய்க்கு அருகருகான அர்த்தத்தையே கொடுத்திருந்தது. இரண்டுக்குமே திறக்கச் சொல்கிறது மனது.
வாய் மட்டுமல்ல எனது உடல் முழுதுமே உலர்ந்திருக்க உணர்ந்தேன். உலகின் ஈரமெல்லாம் கொணர்ந்தாலும் போதாததாய் மனமெங்கும் அனலடித்துக் கொண்டிருந்தது.
இங்கு வெளியேயும் ஒரே அனல்.
முகாமைச் சுற்றிவர உயரமாய் அடிக்கப்பட்டிருந்த முட்கம்பிஇ காற்றைக் கீறிக்கீறி அனலுக்கு உக்கிரமேற்றிக் கொண்டிருந்தது.

கடந்த நாட்களில் காற்றுக்கு நண்பனாக நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதற்கு என்னிடமில்லாத எல்லை கடந்தவைகளை அது கொண்டிருக்கிறதே என்பதும் ஒரு காரணம் தான். காற்று என்னிடம் சற்றுப் பிரியப்பட்டிருந்தது என்பதை சில நாட்களிலேயே நான் உணர்ந்து கொண்டுவிட்டேன்.
மேலும் ஒரு சில நாட்களிலேயே முகாமுக்குள,; ஒதுக்குப் புறமாய் அடைபட்டிருந்த ஒரு மரத்தினை நானும் காற்றும் சேர்ந்து எங்கள் நண்பனாய் அடையாளங் கண்டுகொண்டோம். மூவரும் காற்றுக் கண்டுவரும் கவனிப்புச் சோர்ந்த நேரங்களைத் தேர்ந்து பேசிக் கொள்வோம்.

காற்றும் மரமும் சேர்ந்து எனக்கு எப்போதுமே ஆறுதலைத் தந்து கொண்டிருந்தன. தமது நண்பனின் உயிரை இரண்டும் மாறி மாறி வருடிக் கொண்டன.
எனக்கு உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கின்றன.
காற்றுடன் பேசுகின்ற பொழுதுகளிலெல்லாம் அது வைத்திருப்பவற்றையும் உளவு பார்க்க முயன்றேன்.
நான் ஓடி வந்த வெளிகளில் அடங்கிய மூச்சுக்களை காற்றுத்தானே வைத்திருக்கிறது.
மூச்சுக்களைப் பிரித்தறியும் பக்குவமும் வல்லமையும் என்னிடமிருந்து சென்று விட்டன.
அன்பும் பாசமும் அடியிலேயே அடங்கிக் கொள்கின்றன.

கடந்து வந்த வெளியில் முக்குளித்த ஓலங்கள்இ இன்னமும் அடங்காமல் காற்றுக்குள்ளேயே இருக்கின்றன.
அழுகைகள் என்னை நோக்கி ஓடி வருகின்றன.
இரத்தம் சொட்டிக்கொண்டே இருக்கிறது…..
காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
                         “அண்ணை என்னைத் தூக்கிக் கொண்டு போங்கோ”
ஒற்றைக்கால் அறுந்து போன அந்தச் சிறுமியின் அந்தரிப்பான கண்களும்இ பின்பு எனது கைகளில் நிலைத்துப் போன அதே கண்களும் மாறி மாறி என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.
பெருமூச்சு விட்டு நண்பனைப் பாரமாக்க விரும்பாமல்  கண்களை இறுக மூடி மரத்தின் அடிப்பரப்பில் சாய்ந்து கொண்டேன்.

காதுகளடைபட வைக்கும் கேள்விகளால் களைத்துப் போனது உடல். உடம்பிலிருந்து  அனைத்தும் வடிந்திறங்கியது போல் துவண்டு அமர்ந்தேன்.
    “உம்மட மச்சான் உம்மப் பார்க்க வந்திருக்கிறாராம்…. வெளியில 
     நிக்கிறார்….”
மெதுவாய் மரத்தில் கைகளை ஊன்றி எழுந்தேன். கம்பிகளுக்கு  அப்பால் அவன் நிற்பது தெரிந்தது. மூன்று வருடங்களிற்கு முன்புதான் அவனைப் பார்த்திருந்தேன். அதிக மாற்றங்கள் தெரிந்தன.
என்னை இனங்கண்டுவிட்டான். 
          “அத்தான்…” 
மெதுவான குரலில் கூப்பிட்டான். 
அவன் கொஞ்சம் பயந்த சுபாவமும் கூச்ச உணர்வும் கொண்டவன்இ எனினும் தேடிப்பிடித்து வந்துவிட்டான். 
                “சசி… எப்பிடியிருக்கிறாய்…?….. அக்கா…..பிள்ளையள 
        பாத்தனியே….” 
பரபரப்புடன் வாய் முந்திக் கொண்டது.
                  “இருக்கிறன் அத்தான்… அக்காவும் பிள்ளையளும்  
         ……அங்க…..முகாமில இருக்கினம்…..பிரச்சனையில்ல…. நீங்கள் 
         …எப்பிடி….?” 
தயக்கத்துடன் யோசித்து யோசித்து வார்த்தைகள் வந்தன. 
அவனது கண்களும் கலங்கியிருந்தன.

எனது இளையவள் செத்துப் போனதும் மனைவிக்கு இடக்கால் இல்லையென்பதும் எனக்குத் தெரியும். அவனுக்கும் தெரியும்இ 
மறைக்கிறான்.
அவனது கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது. நான் கை நீட்டித் துடைக்க முடியாத தூரத்தில் கம்பிக்கு மறுபுறத்தில் சசி நின்று கொண்டிருந்தான்.
அவனுக்கான நேரம் முடிந்துவிட்டதுஇ புறப்படப் போகிறான்.
        “அத்தான் இத வச்சிருங்கோ…”
முள்ளுக்கம்பிக்கூடாக கையினை எட்டி நீட்டினான். அதற்குள் சில ரூபாய்த் தாள்கள் சுருண்டிருந்தன.
சற்று வெறிக்கப் பார்த்தேன். பின் அதனை வாங்கிக் கொண்டேன்.

நான் மீண்டும் மரத்துக்கு கீழே வந்து அமர்ந்தேன். 
      “எல்லாம் இயல்பாகவேதான் இருக்கின்றனவா!?”
எனக்கு யோசிக்கப் பிடிக்கவில்லை. அப்படியே மரத்தின் வேர்களில் படுத்திருக்கஇ காற்று வந்து தடவிக் கொண்டிருந்தது. 

நான்  எனது முகத்தினை வருடிப் பார்த்தேன். நாடிப்பகுதியில் எரிச்சல் சூடாய் நின்றது முகத்தைச் சுளித்துக் கொண்டேன்.
              “ என்ன நண்பா… முகத்த நல்லாத்தான் செதுக்கிப் போட்டாங்கள் 
        போல்…உனக்குக் கொஞ்சமெண்டாலும் அளவில்லாத அச்சு அது…”
ஆறுதலாக இதமாய் வருடியபடியே காற்று கேட்டது.
              “அவங்களுக்கு மண்டேக்குள்ள ஒண்டுமில்ல…அந்த முகத்தின்ர 
       அச்சைக் கொண்டுவந்து என்ர முகத்தில அமத்துறாங்கள் … அதுகும் 
       முகமெண்டு பாக்காமல்… மரக்கட்டைல இறுக்கிற மாதிரி….”
சொல்லும் போதே முகம் முழுதும் கொதித்தது. மீண்டும் காற்றைப் பார்த்துச் சொன்னேன், 
              “அந்த முகம்  எனக்குத்தானெண்டு தீர்மானிச்சுப் போட்டாங்கள்…. 
       எப்பிடியோ ப+ட்டத்தான் போறாங்கள்…..”
காற்று மௌனித்திருந்தது.
             “பொறுமையாயிரு…. வெளியில ஏதும் கதைச்சுக்   
       கொண்டிருப்பாங்கள்……நல்லது நடக்கும்”
மரம் அமைதியைக் கடந்து ஆறுதல் சொன்னது.

காற்று மௌனத்தைவிட்டு மீளவேயில்லை. அது சொல்வதற்கு என்ன இருக்கிறது. பசியடங்கா இருளைப் பற்றி கூறுகின்ற பொழுதே எல்லாவற்றையும் எனக்குக் கூறிவிட்டது.

ஊயிரறுந்து தொங்குகின்ற வேதனையில் ஒருவன்…. இல்லை ஒரு கூட்டமே பதைக்கின்ற பொழுதுகளில் அவர்களைச் சூழ நின்று ஆராய்கிற, கூட்டம் போட்டு கதை பேசுகிற, தேனீர் குடித்த வாய்களை அழுக்குப் படாத் துணிகளால் ஒற்றியெடுத்துச் சிலாகிக்கின்ற பெரிய மனிதர்களைப் பற்றி, காற்றும் சொன்னது. 
என்னைப் போல் ஒரு கை மூச்சைக் கையிருப்பில் வைத்திருக்கின்ற சில பேர் அவர்களை நம்பித்தான் இருக்கிறார்கள். ஆனால் காற்றுச் சொல்லாமலேயே எனது மனிதர்களின் இயல்புகளை நான் உணர்ந்து கொள்கிறேன்.

சிறுவர்களதும் பெண்களதும் நிர்வாண உடைகள் மலத்திலும் இரத்தத்திலும் தோய்ந்து போய்க் கிடக்கின்ற பொழுதுகளிலும், பீதியையும் வலிகளையும் விதைக்கும் நீரால் அவர்கள் கழுவப்படுகின்ற பொழுதுகளிலும், புனிதப்படாமல் இறந்தே போகிறார்கள் . 
யாசகமாய் வந்து விழுகின்ற மரணத்தின் கொழுந்துகள் எல்லோர் மடியிலும் வளர்கின்றன, எனக்குள்ளும் எனது நண்பர்களால், உறவுகளால் என்னதான் செய்யமுடியும்.
பிள்ளைகளை அணைத்துக் கொள்வர், மனைவியை முத்தமிடுவர், உடல் மீது முயங்குவர், வியர்த்து வழிய களைத்துப் படுப்பர். 

              “எனக்குப் புரிகிறது உண்மையில் ஒட்டுமொத்தமான ஒரு கோணல் 
       பார்வையை நான் பார்க்கிறேனோ?”
என்னால் முடியவில்லை.
எனது வேதனைகளும் அருகிலிருப்பவர்களின் அரற்றல்களும் எனது சிந்தனையைக் கொல்கின்றன.
எனக்குள் வளர்ந்து வந்த, முனைப்படுத்தி நிற்கின்ற என்னுணர்வுகளைக் கஞ்சி தந்து, சோறுதந்து, பாண்தந்து, தண்ணீர் தந்து அணைக்கிறார்களோ?

               “ ஏய் கொஞ்சம் அடங்கியிரு”
எனது மனதை அதட்டுகிறேன். 
அது தன்னிச்சையாகவே படங்களைக் கீறிச் செல்கிறது.
ஆனால் எனக்குத் தெரியாமலேயே அனைத்தும் சேர்ந்து என்னுணர்வுகளை வளர்த்துச் செல்கின்றன.

             “என்ன நண்பா… நல்லாச் சோர்ந்து போனாய்” 
காற்று மெதுவாக என்னுடலைத் தடவியது.
            “நண்பனே … உன்னை நான் என்ர நண்பனா… மனுசியா, பிள்ளையளா    
      உணருறன்…. அதனால ….ம் …ஆனா நீ என்னை வருடுறத மட்டும்   
      நிப்பாட்டிக் கொள்”
காற்று அசையாமல் மௌனமாய் என்னை ஒரு கணம் பார்த்தது.
            “ இல்ல நண்பா… இந்த வருடலை என்னால தாங்கேலாமல் கிடக்கு…
       வலியும் நோவும் நிரந்தரமானாப்பிறகு இந்த வருடல் எதுக்கு…..”
காற்று சற்றுப் பாரமாய் மரத்தினைச் சுற்றிவந்து பின் அதன் கிளைகளில் அமர்ந்து கொண்டது.
           “நண்பா உன்ர முகம் நல்லாத் தாக்குப்பட்டுப் போச்சு…. தோலெல்லாம்   
      களரத் தொடங்கியிட்டுது….”
மரம் மெதுவாகக் காதுக்குள் நினைப்ப+ட்டியது.

நான் எனது கைகளில் செதுக்கி வைத்திருந்த, என்முக அளவுள்ள அதனைப் பார்த்தேன். எனது முகத்திற்கு இதுதான் பொருத்தமானதென்று அவர்கள் ஒன்றைப் பொருத்த முனைகிறார்கள்.
நானும் பொருத்திப் பார்க்கிறேன்.


ஒரு துளி மூச்சுத்தான் என்னிடம் இருக்கிறது. எனது இரண்டு நண்பர்களிடமும் கூறுவதற்கு எனக்கு ஒரு விடயமுண்டு.
           “காற்று நண்பனே! எனது இறுதி மூச்சையும் எனது உறவுகளின் மூச்சுக்   
      காட்டுக்குள் இறக்கிவிடு…” 
      மர நண்பனே…. விழி திறக்கப்படாத, காதுகளும் வாயும் அடைபட்ட,   
      உனது கிளையில் செதுக்கிய என் முகத்தை உனது இலைகளால் ஒரு   
      தடைவ வருடு….”

                           நண்பர்களே ….நன்றி!

யுகமாயினி பிப்ரவரி 2010

புதன், 10 மார்ச், 2010

பசியடங்கா இருள்

-ந.மயூரரூபன்

நான் படுக்கையில் படுத்திருந்தபடி நெருங்கிவரும் இருளையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா ஒருவரை என்னருகே அழைத்துவந்து இருத்தினாள். நான் அவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு முனையவில்லை.

அவரின் உருவம் இருளின் செழுமையுடன் கலந்திருந்தது.

வந்தவர்,

“தம்பி….. எப்பிடி இருக்கிறாய்….?”

நான் அவரைப் பார்த்து சிரித்தேன். உதடுகள் சிரமப்பட்டு பிரிந்ததில் சிறிது வலி எட்டிப்பார்த்தது.“எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான்…”

உதடுகள் வார்த்தைகளின் பரிச்சயத்தைக் குறைத்திருந்ததால் சிரமப்பட்ட முணுமுணுப்பாக அது என்னிலிருந்து, மிக ஆறுதலாக வெளிப்பட்டது.

பெரிய பெருமூச்சு ஒன்றுடன் அவர் அமர்ந்திருந்தார்.“ நந்தினி அக்காவின்ர சிந்து இப்ப வளந்திருக்குமோ”

எனது உதடுகள் மீண்டும் பிரிந்தன.

“தம்பி…இது உன்ர ரஞ்சன் அண்ணை”

அம்மா என்னருகே வந்து தலையைத் தடவியபடி கூறினாள். நான் மீண்டும் அவரை உற்றுப்பார்த்தேன்.

“இல்ல.. சரவணன் வாத்தியின்ர மீசை மாதிரி..”

என்று கூறிய பின் நீண்ட நேரம் முகட்டைப் பார்த்தவாறு படுத்திருந்தேன்.

ஏதோ ஞாபகத்தில் மீண்டும் அவர்கள் பக்கம் பார்iயை திருப்பினேன். போயிருந்தார்கள்.

மீண்டும் முகட்டில் தொங்கும் தூசியில் எனது பார்வையைக் கொழுவினேன்.

ஜன்னல் கம்பிகளில் மெதுவாக சுரண்டுகிற சப்தம்தான், அது என்பதை கண்டுபிடிக்க எனக்கு சிறிது நேரம் எடுத்தது.

எங்கோ தொலைவில், காற்று வதைபடுகிறதெனவே நினைக்க முடிந்தது. மூடியிருந்த இமைகளைப் பிரித்தேன். மிகக் கடினமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. நெற்றியின் இருபக்கங்களும் வலித்துக்கொண்டிருந்தன. ஓர் இழையைச் சுண்டி விட்டது போல சடக்கென உச்சந்தலையிலிருந்து மண்டைக்குள் பாய்ந்து சென்றது வலியின் கீற்று ஒன்று.மீண்டும் அந்தச் சத்தம்.

ஜன்னல் கம்பிகளில் இலேசாக உராய்கின்றது போல……

“ஓம் அப்பிடிப் போலதான்…”

நான் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து, போர்வையை என்னிலிருந்து வழித்து ஒதுக்கிப் போட்டேன்.ஜன்னலால் எட்டிப்பார்த்தேன்.

ஒன்றுமே தெரியவில்லை. முற்றத்தில் நிலவின் ஒளி வெண்மையாக படர்ந்திருந்தது. வலப்புற ஓரத்தில் அந்தச் சிறிய விலாட்டு மாமரம் மட்டும் இருட்டினை தனக்குள் இழுத்து வைத்திருந்தது.

மாமரத்தின் கிளைகளின் நுனிகளில் இருந்து இருட்டுக்கள்@ கொத்துக் கொத்தாக வெண்ணிலத்தில் குதித்துக் கொண்டிருந்தன. அந்த உதைப்புகளினால் கிளைகளில் ஓர் ஆவேசமான அசைவு தெரிந்தது.

காற்றும் முற்றத்தில் மண்ணினை சுழற்றி, சீண்டிக் கொண்டிருந்தது. மீண்டும் எனது கவனத்தின் இழை சுண்டி இழுக்கப்பட்டது. திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.

ஒன்றையுமே காணவில்லை. ஆனால் இலேசான மூச்சிரைப்பு கேட்பது போலி;ருந்தது.

“ம்… மூச்சிரைப்பா அது…இல்ல…. இலேசான விம்மல்… ஓமோம்…யாரோ

அழுகையை அடக்க முயற்சி செய்யிற மாதிரி….”நான் வெளியில் பாய்ந்தேன்.

ஒருவரையுமே காணவில்லை.

ஆனால் நிலத்தில் பல காலடிகள் காணப்பட்டன.“ஏன் .. நீ…என்ன மறந்து போனியோ”

அழுகையை அடக்கிய மெதுவான குரல் கிசுகிசுப்பாக என்னைக் கேட்டது.

நான் மண்ணிலே அப்படியே குந்தி அமர்ந்தேன்@

“ என்ன முழிக்கிறாய்...? உன்னுடைய கையை கீழ வை….”

நான் கையை மண்ணில் விரித்து வைத்தேன்.

கையில் எதுவோ ஏறுவது தெரிந்தது.

உற்றுப் பார்த்தேன் கண்கள் இலேசாக வலிகண்டன.

அது ஒரு காலடி!“ என்ன யோசிக்கிறாய்…நான் உன்னுடைய காலடிதான்… இங்க நாங்கள்

கனபேர் வந்திருக்கிறம்…உன்னைப்பாக்க…”

நான் அந்த காலடியை – என்னுடைய காலடியை உற்றுப் பார்த்தேன்.

அது வரண்டு, இலேசாக சுருளத் தொடங்கியிருந்தது. ஆங்காங்கே உதிர்ந்து உடைவதற்குரிய நிலைமைகள் தெளிவாகத் தெரிந்தன.“ விதிகளில், ஒழுங்கைகளில், நூலக முற்றங்களில்… இப்பிடி ஊரில

இருக்கிற எல்லா இடங்களிலயும் நீ அடிக்கடி வந்து போறனி…. அதனால

நாங்கள் உயிர்ப்போட இருந்தம்….ஆனா இப்ப…நாங்கள் கொஞ்சம்

கொஞ்சமா செத்துக் கொண்டிருக்கிறம்….”

ஒரு பெருமூச்சுடன் இன்னொரு காலடி சொல்லி ஓய்ந்தது.

நான் சிறிது நேரம் அப்படியே பார்த்தபடி இருந்தேன்.“ ஓமோம்…உங்கள உயிர்ப்பிக்க நான் வாறதில்ல… நான் என்னையே

மறந்திட்டன்…”

எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.

“இஞ்ச… உன்ர கையை கொண்டுவா…”

ஓரு காலடி முண்டியடித்துக்கொண்டு என்னருகே நெருங்கியது. நான் கையை வைத்தேன்.

“ ம்ஆ…”

இதமான குளிர் எனக்குள் ஊடுருவியது.தேர்முட்டிப்படிகள் தங்களை ஞாபகப்படுத்தும்படி கைய+ட்டுக் கொடுத்து அனுப்பியிருந்தன.

இதமான காற்று வீசுகின்ற முன்னிராப் பொழுதில் குளித்தபடி ஆட்டுப் புழுக்கைகள் ஒதுங்கிய படிகள், எனக்காக ஏங்கிக் காத்திருப்பதைக் காலடிகள் சொல்லின.

எனக்குத்தான் காற்று, ஒவ்வொன்றையுமே முன்னமேயே சொல்லிவிடுகின்றதே.

எனது காலடிகளின் படையெடுப்பு என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருந்தது.

அழ வேண்டும்.

“அழு….அழு…”

நான் எனக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

காலடிகளுடன் வாசல்வரை சென்றபோது காற்றின் சுழட்டலில் எனது காலடிகளில் திரளாக சுற்றிக் கொண்டிருந்தன – வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள்.

பல நிறங்களில், பல வடிவங்களில்… அவை அலைபாய்ந்து கொண்டிருந்தன, வண்ணத்துப்பூச்சிகளின் உயிர்களைத் தேடி.மணல் கீழே கொதித்துக் கொண்டிருந்தது. மேலே சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான். அரையில் கட்டிய வேட்டி ஈரத்தை சொட்டிக் கொண்டிருந்தது.

கைகளில் தேங்காயுடன் நான் அம்மாவைப் பார்த்தேன். அவளது கண்கள் முட்டி வழிந்து கொண்டிருந்தன. என்னை கெஞ்சலாகப் பார்த்தாள்.

அம்மாவைக் கண்களில் இருத்திக் கொண்டேன். உடலின் ஒவ்வொரு துடிப்புக்களாலும் அவளைப் பார்த்தேன்.

மணலில் நீட்டிப்படுத்து உருளத் தொடங்கினேன்.

அம்மா கண்களால் நீரைக் கொட்டி தான் நம்பும் கடவுளிடம் போகும் காற்றக்கு தனது அரற்றலால் பாரத்தை ஏற்றிக் கொண்டிருந்தாள்.

அம்மா என்பின்னே அடியழிக்கத் தொடங்கியிருந்தாள். ஒவ்வொரு உருளலின் பின்னும் இருட்டு வைத்திருந்த இரகசியமும் அது கூறிய மந்திரங்களும் எனக்கு சித்தித்திருப்பதனை நான் ஞாபகங்கொள்ளத் தொடங்கினேன்.

இருட்டு என்னைப் பிடித்து தனக்குள் இழுத்தது. இழுக்கப்பட்டதால் தடுமாறி இருட்டுடன் முட்டிக் கொண்டேன். மூக்கு சூடாய் இரத்தத்தைத் தள்ளியதை விரல்களால் உணர்ந்தேன்.

“ இருட்டில் காற்றுக்கு கைகள் முளைக்கின்றன”

இது பலபேர் கூறிய அற்புதமான கதை. நான் அக்கதையின் சொற்களுக்குள் சிக்குப்பட்டிருந்தேன்.

சொற்கள் கடிக்கத் தொடங்கின.

வார்த்தைகள் ஒரே மாதிரியான உச்சாடனங்களாய் மாறி காற்றை அறையத் தொடங்கின. எனது காதுகளும் அதிரத் தொடங்கின. காதுகள் அதிர்வின் எல்லையை கடந்த நிலையில், காற்று உச்சாடனங்களின் உயிர் நாடியைப் பற்றிப் பிடித்துக் கொண்டது.

காற்றுக்குக் கைகள் முளைத்தன.

காற்றின் கைகள் எனது உடலுடன் அற்புதமான ஏற்ற இறக்கங்களுடன் உரையாடத் தொடங்கின.

எனது உடலுக்கு இது ஒரு புதிய மொழி.

எனவே காற்றின் கைகளினது வீச்செல்லைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சோர்ந்து துவண்டு விழுந்தது.

வெளி முழுதும் இருளைப் பழக்கப்படுத்தியிருந்த நான், சாக்கிற்குள் இருளைப் பின்தொடர்ந்து நுழைந்தேன். இறுகக் கட்டப்பட்ட சாக்கினுள் இருட்டும் நானும் சுருண்டு பிணைந்திருந்தோம்.

என்னைத் தின்னத் தொடங்கிய இருட்டுடன் நான் மொனமாயிருந்தபோது, சாக்கின் மோகம் நீரின் பக்கமாய் இருந்தது எனது துரதிஷ்டம்.

சாக்கு ஆவேசத்துடன் கிணற்றுக்குள் பாய்ந்தது.

சாக்குச் செய்தது தவறு என எனது உடல் எதிர்ப்புணர்வைக் காட்டியது.

இருளின் கடவுள் மேலிருந்து அனைத்தையும் பார்த்தான்.

அறிந்தான்,

விளைவு – எனது இருளின் பிணைப்பு தற்காலிகமாக விலக்கப்பட்டது.

இருள் காவித்திரிந்த இரகசியமும் மந்திரங்களும் என்மீது தொன்மங்களின் வழி, மாற்றமற்று கடந்துவந்த மனித நாகரிகத்தின் படங்களை அற்புதமாக வரைந்திருந்தன.

இந்நிலையில் ஏமாற்றத்திற்குள்ளான இருள்@ அதன் பின்பு என்னைப் பின்தொடரத் தொடங்கியிருந்தது. நான் செல்கின்ற எங்கும் இருளும் சற்று எட்ட நின்றிருக்கும்.

இருள் என்னைத் தின்ன மிகுந்த வெறி கொண்டிருப்பதனை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நான் நடந்து கொண்டிருந்தேன். இருளும் நடந்து கொண்டிருந்தது.

அம்மா அடியழிக்க அடியழிக்க, நான் உருண்டு கொண்டிருக்கின்ற பொழுதுகளிலும், இருள் என்னுடன் சேர்ந்து உருண்டு கொண்டிருக்கின்றது. நான் இருளின் மணத்தினையே எங்கும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.இருளின் பரிச்சயத்தால் என்னைச் சுற்றியிருந்த காற்று கறுக்கத் தொடங்கியிருந்தது. காற்றின் ஒவ்வொரு இடுக்குகளிலும் கருமையின் செறிவு ஏறிக் கொண்டிருந்தது.

காற்று இருளின் தூதனாகவே இருந்தான். ஆனால் அவனும் இருள்தான் என்பதை நான் விரைவில் புரிந்து கொண்டேன்.

நான் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிப்பதைக் குறைத்துக் கொள்ள முயன்றேன்.

எனது படுக்கையறையின் யன்னலுக்கூடாக தெரியும் விலாட்டு மாமரமும் இலேசாக கருமையை உள்வாங்கத் தொடங்கியிருந்தது. நிலவொளி படரும் நிலமும் கருமையை தன்மேல் விழுத்திக் கொண்டிருந்தது.

எனது விழிகள் கருமையின் செறிவை தனக்குள்ளும் உணரத் தொடங்கியிருந்தன.

எனது உயிரின் முனையை இருள் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பரபரப்பற்று படுத்திருந்தேன்.

எனது உள்ளங்கைகளில் கருமையின் தீற்றலை உணர முடிந்த அன்றைய பொழுதில் எனது எழுத்துக்களை என்முன் குவிக்கத் தொடங்கினேன்.

நீண்ட இரவின் பொழுதுகளில் எனது எழுத்துக்களுடனேயே நான் படுத்திருந்தேன்.

தேநீருடன் வந்த அம்மாவால், எனது படுக்கையில் எரிந்திருந்த எனது எழுத்துக்களின் கருமையையே பார்க்க முடிந்தது.

‘பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்’ தொகுதி 2008

தேவியின் ஆசைகளும் அதற்கான மொழிபெயர்ப்பும்

-ந.மயூரரூபன்
சடாரென்று எழுந்து உட்கார்ந்தேன். நான் விழித்துப் பார்ப்பது என் விழிகளுக்கே அந்நியமாய் இருப்பது போல் ஓர் கூச்சம் இமைகளில் ஒட்டிக் கொண்டது. நானாகவே எழுந்தேனா? எனக்குள் எழுந்த வினாவில், என் உணர்வுகளுக்கு உடன்பாடில்லை என்பதை என்னால் அறிய முடிந்தது. இதனை மிக நீண்ட தூக்கமாய் நான் கருதவில்லை. ஏனெனில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் தூங்கிய எனக்கு இடைக்கிடை ஏற்படும் இவ்வாறான விழிப்புக்கள் நுளம்புக்கடியின் சிறிய சிறிய அருட்டல்களாகவே தோன்றுகின்றன.எனினும், பதினாறு அல்லது பதினேழு மாதங்களில் ஏற்பட்ட திடீர் விழிப்புத்தான்.நானாக அருண்டிருக்க மாட்டேன். அருட்டியவர்களைத் தேடிச் சலிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் எனக்கு இல்லை. என் வாரிசுகள் பற்றி எனக்கு நன்கு தெரியும். இப்போது தூக்கத்தின் கனதி என்னை விட்டு இறங்கிவிட்டது.

இமைச்கூச்சத்தை உதறியெறிந்து விழிப்பார்வைகளை விரியவிட்டேன்.சிறைக்கூடம்தான்.வெளியேயிருந்து பார்ப்பவர்களுக்கான அற்புதச் சிறைக் கூடம். உள்ளிருந்து எனது உணர்வுகளையும் ஆசைகளையும் வழமை போல் வளர்த்துக்கொள்ள வசதிகளனைத்தும் உள்ளே வகையிட்டு இருந்தன.என் நூற்றாண்டு ஆசைகளின் எச்சங்களும், அதுபற்றிய கனவுகளும் செல்லரிக்காது பேண அழகிய பெட்டகமொன்று எனக்கருகே இருந்தது.எழுந்தேன்.

யானைகள் அணி வகுத்து நின்றன.

படை வீரர்கள் கவசம் பூண்டு, ஆயுதம் தாங்கி, என் வார்த்தைகளை எதிர்பார்த்து காதுகளில் உயிர்ப்பினை நிறைத்திருந்தனர்.

மஞ்சளுடை போர்த்திய,

புரவிகளின் வழி திறக்கும் எங்கள் மதிப்பிற்குரிய குரு ஆசி கொடுத்து ஒதுங்க நான் நீண்ட வாளுடன் அம்பாரி மேல் ஏறி அமர்ந்தேன்.

வாயிலிருந்து வார்த்தை பிறந்தது.

மண்ணிலிருந்து புழுதி பறந்தது.

வாளிலிருந்து இரத்தம் சொட்டியது.ஒவ்வொரு தடவையும் எனது துயில் நீங்கலில் இந்த நினைவுகள்தான் - (கனவுகள் என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் என்னால் அவ்வாறு சொல்ல முடியவில்லை.) குளிப்பாட்டுவனவாய் இருந்தன.இன்றும் மாற்றமேதுமின்றி அப்படியே இருக்கின்றன.புத்துணர்ச்சி புகுந்துகொண்டதாய் உணர்வுகள் எனக்கு ஞாபகப்படுத்தின.

பெட்டகத்தை நெருங்கினேன்.

ஆசைகளின் சேமிப்பு; எனது பொக்கிசம்.

பெட்டகத்தினை மிகுந்த அன்புடன் தடவினேன். நானென்று என்னை அடையாளப்படுத்துவதே இந்தப் பெட்டகந்தானே. என் மகனின் தலையினைத் தடவுவதாயும் எனக்குள் நினைப்பு ஓடியது. ஒருவித ஆவல் நிறைந்த வேகத்துடன் யன்னலை நோக்கிப் பாய்ந்தேன்.கால்களில் பூக்கள் மிதிபட்டன.

அப்போதுதான் பார்த்தேன். எனது கட்டிலின் பகுதிகளில் வாடாத அற்புத மலர்கள் - அருமையான அல்லி மலர்கள் தரையிலும் பரவியிருந்தன.

ஊதுபக்தியின் வாசனையை இப்போது நன்றாக எனது நாசிகள் நுகர்ந்து கொண்டன.எனக்குள் மகிழ்ச்சி பீறிட்டெழுந்தது.

கரைபுரண்ட சந்தோச வேக்காட்டுடன் சத்தமிட்டுச் சிரித்தேன்.

எனது விம்மும் இதயம், இச்சேதியை யாருக்காவது சொல்ல வேண்டுமெனத் துடித்தது. எனது துரதிஷ்டம், என்னருகே யாருமே இல்லை.மன்னர், விகாரமாதேவியின் இந்நிலையைப் பார்க்க நேரிட்டிருந்தால்…..

“ஹஹ்ஹஹ்ஹா…..”

அவருடைய முகத்தின் கோணலைக் கற்பனையில் ரசிக்க நன்றாய்த்;தான் இருக்கிறது.சிரித்தபடியே பெருமிதமாய் எனது பெட்டகத்தின் மீது விழிகளால் தடவினேன்.

எனது மகிழ்ச்சி அக்கணத்தில் திடீரென என்னைவிட்டு ஓடியது.

எனது உற்சாகத்தின் முதுகெலும்பை யாரோ உருவி எறிந்துவிட்டார்கள்.யாரோ? – அது எனது வாரிசுகளேதான்.பெட்டகத்தினை மீண்டும் நெருங்கினேன்.

முதலில் நான் இதனைக் காணவில்லையே…

கவனிக்கத் தவறிவிட்டேன்.பெட்டகத்திற்கு அல்லி மலர்களால் மாலை போடப்பட்டிருந்தது. அது ஆயிரம் மலர்களாகவே இருக்க வேண்டும். அருகே பெரிய சாடியொன்றில் தேன் நிறைந்திருந்தது.எனது ஆசைகளுக்காய் இன்றும் அவற்றினை நிறைவேற்றி இருக்கிறார்கள். மூன்றாவது ஆசையான தமிழ்த் தளபதியின் தலையையும் அர்ப்பணித்திருப்பார்கள்.மகிழ்ச்சிதான்.

எனினும், எனக்கான மரியாதை எனது ஆசைகள் பொதிந்த பொட்டகத்திற்கானதேயென்ற உண்மைதான் என்னை நிலைகுலைய வைக்கிறது.பெட்டகத்தின் முன்னே தட்டுக்களில் பழங்கள் படைக்கப்பட்டிருந்தன.

கொழுத்தப்பட்ட ஊதுபத்திகளின் வானை அங்கு காவல் வளையத்தினை ஏற்படுத்தியிருந்தது.எனக்கு நன்றாகவே புரிந்தது.

பெட்டகத்தின் உடமைக்குச் சொந்தக்காரி என்பதால் எச்சமலர்கள் ஒரு சில, எனக்காக.

இது வழமைதான்.

எனது துக்கத்தின் பின்னான ஒரு சடங்கு,

எனினும் ஒவ்வொரு தடவையும் எனக்கவை புதியனவாகவே உணர்ந்து கொள்கிறேன்.பெட்டகத்தினடியில் தளர்ந்தமர்ந்து, சிறிது நேரம் மோன நிலைப்பட்டவளாயானேன்.ஏதோவொரு திடுக்கிடலில் என் நிலைகலைந்து எழுந்து பெட்டகத்தினைத் திறந்தேன். திறக்கும் நொடிகள் ஒவ்வொன்றிலும் இனம் புரியாத ஓர் உணர்வு என்னைச் சூழ்ந்து கொள்கிறது.ஆயிரம் ஆண்டுகள் …..

இன்னுமோர் ஆயிரம் ஆண்டுகள் …. பின்னோக்கிச் சென்று எனது உயிர்ப்புடன் கலந்து கொள்வதாய் ஓர் குழப்பமான நினைவுகள் படருகின்றன.

எனது நிலை சிறிது தடுமாறுவதாய்…..

…”ஆங்…..ம்….”

மெது மெதுவாக அவற்றிலிருந்து விடுபட்டு, எனது ஆசைகளின் அடுக்குகளை ஒவ்வொன்றாய்ப் பிரிக்கிறேன்.எனது ஆசைகள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டனவாய்க் காணப்படுகின்றன. எனது ஆசையின் மூலத்தினைக் கொண்டு மொழி பெயர்த்த பிரதி மட்டும் அங்கே காணப்படுகின்றன. எனது ஆசையின் மூலத்தினைக் காணவில்லை. எனது நினைவடுக்கின் சேமிப்பினைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஆசையின் பிரதியில் மூலத்திற்கு அண்மித்ததாய் வார்த்தைகளைத் தேடினேன்.நீண்ட வருடங்களில் ‘தேன்’ இரத்தமென மாற்றம் கொண்டிருந்தது. கூசாவினை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

‘பல்லாயிரம் தமிழர்களின் தலையாலான மாலை’ என மீண்டுமொன்று.

இது கால நீட்சியின் மொழி மாற்றமா?

இல்லை…? ம்….!தொடர்ந்து ஏட்டினை வாசிக்க வேண்டிய தேவையில்லையென அவற்றிலிருந்து எனது உணர்வுகளை நான் திருப்பிக் கொண்டாலும், தொடர்ந்து வாசிப்பதற்கு எனக்கு ஏற்பட்ட பயமே முதற்காரணம். ஏனெனில் தேன், அல்லிமாலை, தளபதியின் தலை….என எனது ஆசைகளின் கிடைப்பிடத்தை ஒன்றெனப் பிணைத்து ஆசையின் மூல நாயகியாய் என்னை அடியிலே முத்திரை குத்திருப்பார்கள்.எனினும் காலங்கள் வழியே கடந்து வரும் எண்ணங்களிலாலான மொழிபெயர்ப்பை முழுவதுமாய் புரிந்து கொண்டேன்.

சரி! எனது ஆசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமே.

இன்றைய வேளையிலும்…

எனது ஆசைகளை நிறைவேற்றும் என் அருமை மைந்தன் எங்கே?

யன்னலை நோக்கி ஓடினேன், எட்டிப் பார்த்தேன்.காமினி அபயா!முன்பு போலவே விசாலமான கட்டிலில் ஒடுங்கியபடி சயனித்திருந்தான்.

நீண்ட தூக்கம்.

கண்ணாடி அறைக்குள் விழிப்பதற்குரிய அறிகுறி எதுவுமேயின்றி அசையாது கிடந்தான். கண்ணாடிக் கூண்டிற்கு வெளியே பலருக்கு அவனது நித்திரை பற்றிய மொழி பெயர்ப்பு நிகழ்த்தப்படுவதைப் பார்த்தேன்.

தங்களில் என்மகனை உணர்ந்துகொள்ள பலர் படுக்கையில் நித்திரை பழகிக் கொண்டிருந்தார்கள்.எனது கனவுகளில் இருந்து மீண்டெழுந்த நான் எனது சிறையினை மீண்டும் பார்த்தேன்.எனக்கான உணர்வுகள் என்னைத் தொற்றிக் கொண்டன.நான் விழித்தெழும் ஒவ்வொரு வேளையிலும் எனது ஆசையினை நிறைவேற்றிக் கொள்ளும் அவா எனக்குள் புகுந்து கொள்வதுண்டு. இன்றும் அது என்னை பிடரிபற்றித் தள்ளியது. எனது ஆசையின் பிரதிகளை தூக்கிக் கொண்டேன்.யானைகள் அணிவகுத்து நின்றன.

படைவீரர்கள் கவசம் பூண்டு ஆயுதம் தாங்கி என் வார்த்தைகளை எதிர்பார்த்து காதுகளில் உயிர்ப்பினை நிறைத்திருந்தனர்.

நான் நீண்ட வாளுடன்…

மீண்டும், தேவியாய் எழுந்தேன்.

வெளிச்சம் 2003

தேங்காய்ச் சொட்டு


-ந.மயூரரூபன்

அம்மா ஒவ்வொரு நாளும் எரிச்சலோடும் சலிப்போடும் சொல்லிக் கொண்டிருப்பா.

“ அரிசிப்பையை ஓட்டை போட்டுட்டுது…”

“ அப்பளத்தைக் காணேல்ல….”

“ தேங்காய்ப் பாதியைச் சுரண்டிப் போட்டுது……”இப்படி அடிக்கடி அம்மா முணுமுணுத்துக் கொண்டிருப்பா… இதுக்கு என்ன செய்யிறது? ஒரு நாளெண்டாலும் பறவாயில்லை. எந்தநாளும் இப்படித்தான். சரியான தொந்தரவு… என்ன செய்யலாமெண்டு யோசிச்சன்… எலிப்பொறி கண்ணில பட்டுது. எனக்கு பாவமாத்தான் இருந்துது… ஆனால் என்னத்தச் செய்யிறது?அணில் தேங்காய்ச் சொட்டின்ர மணத்துக்குக் கட்டாயம் வருமெண்டு எனக்குத் தெரியும்.இந்த அணில் தேங்காய்ச் சொட்டத் தேடிவாறத நினைச்சுப் பாக்கேக்குள்ள, நாங்கள் எந்தச் சொட்டப் பாத்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்தனாங்கள் எண்டு எனக்கு மட்டுமில்ல வந்த எல்லாருக்கும் … பிறகு கூட விளங்கேல்லைத்தான்.சரி வந்ததுதான் வந்தம் …. ஆனா இங்க….

அந்த அணில் மாதிரி என்ன தொந்தரவு செய்தனாங்கள்? நாங்களும் எங்கட பாடுமெண்டு அவங்கள் சொன்னதக் கேட்டுக் கொண்டுதானே இருந்தம்.ஒருத்தற்றை சோலிக்குக் கூடப் போகேல்லை.

நான் …. அந்த அணிலைக் கூட … எத்தினதரம் யோசிச்சு … மனமில்லாம கடைசியா அதின்ர ஆக்கினை பொறுக்கமாட்டாமத்தான்…ஆனா… நாங்கள்?

இவங்கள் எங்களை இப்பிடிச் செய்யிறத்துக்கு முன்னால…

நான் அந்த அணிலுக்காக யோசிச்ச மாதிரி யோசிச்சிருப்பாங்களே?

அப்படி யோசிச்சிருப்பாங்களெண்டு நானெண்டா நினைக்கேல்ல, அந்தப்பொறியை ஏத்திப் போட்டுப் பட்டபாடு எனக்குத்தான்; தெரியும்.அணில் கீச்… கீச் எண்டு கத்தேக்குள்ள… நெஞ்சுக்குள்ள ஒரு தடக்…

பொறுக்கமாட்டாம… பொறியைக் கழட்டி விடுவமோ எண்டும் நினைச்சன்.இடைக்கிடை பொறி வைச்ச இடத்தை ஓரக்கண்ணால பார்த்துக் கொண்டும் இருந்தன்.

அணில் வரேல்ல. எனக்கு அப்பிடிப் பாத்துக்கொண்டிருக்கத் தைரியமில்லை. எழும்பிப் போயேவிட்டன்.எங்களை…. அதுதான் என்னையும் என்ர சினேகிதியையும் பிடிச்சக்கொண்டு போகே;குள்ள எனக்கு இதொண்டும் நினைவு வரேல்ல. லேசான பயந்தான் இருந்துது.

விசாரிச்சுப்போட்டு விட்டிடுவாங்கள் தானே….ஆனா…

நாலைஞ்சு பேர்…

எனக்கு… பயங்கரமா ஏதோ நினைப்புகள் …ஆரோ கையைப் பிடிச்சுக் கூட்டிக் கொண்டுவந்து இருட்டுக்குள்ள தள்ளிவிட….

சுத்திவரப் பேயள் நிண்டு குதிக்கிற மாதிரி எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.மரத்துப்போன மாதிரி….

ஏதோ ஒண்டு என்னைக் கௌவிச் பிடிச்சமாதிரி…அந்த நேரத்திலையும் நான் இதத்தான் யோசிச்சனான்…

நான்…. இல்லை… நாங்கள் அப்பிடி என்னதான் செய்தனாங்கள்?

அதுக்கு இப்பகூட விடை கிடைக்கேல்லை.நான் அந்த அணிலுக்கு வச்ச பொறியை எடுத்து விடுவமோ எண்டு யோசிச்சமாதிரி… அவங்கள்…. யோசிச்சிருப்பாங்களே.... ?

அப்பிடி யோசிச்சிருக்க மாட்டாங்களெண்டு அப்பதான் விளங்கிச்சுது. முந்திக் கேள்விப்பட்ட விசயங்களுக்கு இப்பதான் வடிவம் கிடைச்சுது.நான் அந்த அணிலைப் பிடிச்சு வைச்சு ஒரு சித்திரவதை கூடச் செய்யேல்லை. அதைச் சீண்டிவிட்டு வேடிக்கை பாக்கேல்லை. அதுக்குப் பல்லால கடிக்கேல்லை, நெருப்பால சுடேல்ல, அடிக்கக்கூட இல்லை, அதின்ர தன்மானத்தைச் சுடுற மாதிரி மானத்தோட விளையாடேல்ல.ஒரேயொரு சத்தந்தான்.

“ படார் ” எண்டு கேட்டுது.

ஓடிப்போய்ப் பாத்தன், தலை பொறியுக்குள்ள அம்பிட்டுட்டுது. பொறியை ஒருசுற்றுச் சுற்றி இழுத்துப் போட்டு அடங்கிவிட்டுது.

கண நேரந்தான்.ஆனா … அவங்கள் எங்களை … நாள் முழுக்க அறையுக்குள்ள அடைச்சு வைச்சு …. வாறவங்கள் போறவங்களெல்லாம் …

அதுகளெல்லாம் என்னத்துக்கு இப்ப …இப்பகூட … அதை நினைக்கேக்குள்ள முகம் உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதி;ரி …

அப்படி ஒரு உணர்வுதான் … ஆனா என்ர உடம்பு?

எங்களை மோசமா சித்திரவதை செய்தாங்கள்.

என்னென்ன செய்யமுடியுமோ எல்லாம் செய்தாங்கள்.

முதலில பெருங்குரலில அலறினனாங்கள்தான் ….

ஆனா போகப்போக … குரல் வரேல்லை. எவளவு நேரமெண்டு அலறுறது?

தொண்டையும் வறண்டு போட்டுது.உடம்பெல்லாம் கந்தலாப் போனமாதிரி … தொய்ஞ்சு கிடந்துது …

வேதனை, உடம்பெல்லாம் நோ … அசையமுடியேல்ல,

நெருப்புப் பிடிச்சமாதிரி ஒரு உணர்வு. கண்ணில சூடான நீர்திரண்டு வழிஞ்சுது.

சிகரட்டுப் புண்களும் பல்லுக்காயங்களும் அடியின்ர வலிகளும் மரத்துப்போனமாதிரி நினைப்பு.எனக்கு என் மேலேயே ஆத்திரம் வந்தது ஏன் இன்னும் உயிர் போகேல்லை?இருட்டினாப்பிறகு ரெண்டுபேர் வந்தாங்கள். என்னையும் என்ர சினேகிதியையும் இழுத்துக்கொண்டு போனாங்கள். அந்த இருட்டுக்குள்ள காத்தின்ர “ ஊ “ எண்ட ஊளையில அது ஒரு வெளியெண்டு தெரிஞ்சுது, அதோட நடக்கப் போறதும் தெரிஞ்சுது.அணில் பொறியில அம்பிட்டவுடன நான் அம்மாவக் கூப்பிட்டன்.

அதை அங்கால தூக்கிக்கொண்டு போகச்சொல்லிக் கத்தினன். அம்மா குசினிக்குள்ள இருந்தபடியே என்னையே தூக்கிக் கொண்டு போய் வெளியில போடச் சொன்னா.“ஐயோ எனக்குத் தெரியாது”

எண்டு நான் அந்தப் பக்கமே பாக்காமல் வெளியில ஓடிவிட்டன்.

பேந்து அதை… தம்பிதான் எடுத்துக்கொண்டுபோய் வெட்டித் தாட்டவன்.

அண்டைக்கு நான் திரும்ப வீட்டுக்குள்ள போனபோது பாத்தன், அது கொஞ்சம் பெரிய அணில்மாதிரி எனக்குத் தெரிஞ்சுது.

வளையில இருந்துகொண்டு வாலைத் தூக்கித் தூக்கி அடிச்சபடி கீச் .. கீச் … எண்டு கத்திக் கொண்டிருந்தது.அது தாய் அணில் போல ….

ஓ! அதுதான் அந்த …. அடிபட்டுச் செத்ததின்ர தாய் …..

அது அண்டுமுழுக்க அந்த இடத்தில நிண்டு வாலை அடிச்சுக்கொண்டு….. கத்திக்கொண்டே இருந்துது.

இடைக்கிடை வளையில அங்கையுமிஞ்சையும் ஓடிப்போட்டு வந்து திரும்பவும் கத்திச்சுது.அது தன்ர குட்டியணிலக் கூப்பிடுறது போல எனக்கு இருந்தது.

நிலைகொள்ளாமல் அது தவிச்சுக் கொண்டிருக்குது எண்டு நான் ஊகிச்சன்.

எனக்குச் சரியான கவலையாக இருந்தது.

அந்த தாயணில் அழுகிற மாதிரி ஒரு நினைப்பு.எனக்கு அண்டைக்கு நித்திரையே வரேல்லை.

அழுது கொண்டுதான் படுத்தி;ருந்தன்.

இப்ப … எனக்கு இந்த தாயணில நினைக்கேக்குள்ள என்ர அம்மாவின்ர நினைப்புத்தான் வரும்.அவவும் இப்பிடித்தான். ரியூசனுக்குப் போனபிள்ளை வருகுது….. வருகுது … எண்டு வாசலையே பாத்துக்கொண்டு நிண்டிருப்பா.

எத்தின நாள் சாப்பாடில்லாம சுருண்டிருப்பா …

எவளவு இரவுகள் நித்திரை இல்லாம கண்ணீர் விட்டுப் புலம்பியிருப்பா.எனக்கு இப்பவும் கவலையாத்தான் கிடக்குது.

எங்களுக்கு முதல் புதைஞ்சவையையெல்லாம் கிண்டித் தூக்கி ஆராய்ச்சி செய்யினம்.

அம்மாவுக்கு … அது …. என்ர நினைப்பை இன்னும் நல்லாக் கிளறி விட்டிருக்குமெண்டு நினைக்கிறன்.

அங்கை அம்மா … என்னை அடையாளங்காண, காத்துக்கொண்டிருப்பா.அது சரி ....

அந்தக் குட்டியணிலின்ர கெதிமற்ற அணிலுகளுக்கும் தெரிஞ்சிருக்குமோ? தெரிஞ்சிருக்காதெண்டுதான் நினைக்கிறன்.

அப்பிடித் தெரிஞ்சிருந்தா தேங்காய்ச் சொட்டைத் திரும்பிப் பாக்குங்களே!ஆனா … எங்களைப்பற்றித் தெரிஞ்சிருந்தும் எத்தினபேர் அந்தச் சொட்டை சுவடெடுத்துத் தேடிவருகினம்!

இதுக்கு என்னத்தைச் செய்கிறது?ம் … எனக்கேன் மற்றாக்களைப் பற்றிக் கவலை?

அம்மாவை நினைக்க ….ஓ ….. அந்தத் தாயணில் தன்ர குட்டியணிலின்ர உடல்க் கூட்டை கடைசி வரையும் கண்டிருக்காது.

அது மாதிரி அம்மாவும்….

சரிநிகர்,

ஈழநாதம்

வெறுமை


-ந.மயூரரூபன்

நான் அழுதபடி பாயில் படுத்திருந்தேன். எப்போதோ கண்ணீர் வற்றிவிட்டிருந்தது. வாய் காய்ந்து நாக்கு வறண்டிருந்தது. தலையணையில் முகத்தைப் போட்டுத் தேய்த்துக் கொண்டிருந்தேன். முதுகு குலுங்க எனது கேவல் மட்டும் நிற்கவில்லை.

அம்மா அருகில் வந்து மெதுவாக அதட்டினாள்;;;

“பதின்மூண்டு வயசாப் போச்சுது, இன்னும் பால்குடி மாதிரி அழுது அடம்பிடிச்சுக்

கொண்டிருக்கிறாய்…

எழும்பு…….ஒம்பது மணியாப் போச்சுது;

……..சாப்பிட்டுட்டு வந்து கிட…..ம்….”

“…ம்…” என்ற அனுங்கலுடன் குப்புறப்படுத்தபடியே கிடந்தேன்.

“..யேய்..” கொப்பர் இக்கணம் அறிஞ்சாத் தெரியுமே…. எழும்பி வா…”

அம்மா கெஞ்சினாள்.

நான் புரண்டு மல்லாந்து படுப்பதைக் கண்ட அம்மா குசினிக்குள் சென்றுவிட்டாள்.நான் மெதுவாக எழுந்து குசினிக்குள் செல்ல, அம்மா உணவை தயாராக வைத்திருந்தாள்.

நான் ஒருபிடி பிட்டினை எடுத்து வாய்க்குள் வைத்தபோது; குசினி மூலையினுள், இரு முனைகளிலும் கயிறு சுற்றப்பட்டு அநாதரவாய் கிடந்த ஊஞ்சற்பலகை என் கண்களில் விழுந்தது.

கண்ணீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது.

அம்மா ஆறுதல் சொன்னாள்,

“பிள்ளை …. அந்த மரம் போனால் என்ன….பின்னால நிக்கிற மாமரத்தில

கட்டலாம் தானே….அழாத…நான் அப்பாட்ட சொல்லி நாளைக்கே ஊஞ்சலை

கட்டிவிடுறன்….”

நான் மௌனமானேன்.எனது பிரச்சனை ஊஞ்சல் தான் என அம்மா விளங்கிக் கொண்டமை என்னைத் தளரச் செய்தது.நான் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது, எனது கன்னங்களை யாரோ வருடிக் கொடுப்பது போல உணர்ந்தேன். திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தேன். ஒன்றையும் காணவில்லை. மேலிருந்து இரு நீர்த்துளிகள் என் முகத்தில் விழுந்தன.

கைகளை உயர்த்தி, பரந்துள்ள வெறுமையைத் துளாவினேன்.

கைகளுக்குள் இலைகள் போன்று எவையோ தட்டுப்பட்டன. தட்டுப்பட்டவற்றை விரல்களால் உணர முயன்றேன். எனக்குள் மிகவும் பரிச்சயமான உணர்ச்சி ஊடுருவியது.

நான் பிறந்ததிலிருந்து இது நாள்வரை எனது மூச்சுக்காற்றுடன் கலந்து, எனக்குள்ளேயே உலாவிக் கொண்டிருந்த அந்த நறுமணம் அங்கு மெது மெதுவாய் பரவியது.

விரல்களால் இலைகளை வருடினேன்; அம்மாவின் தலைமுடியை வருடும் உணர்வு நிலை எனக்குள் படர்ந்து கொண்டிருந்தது. மரத்தின் இலைகள் எனக்குள் தனது பச்சை வர்ணத்தை கடத்துவது போலவும் நான் பச்சை வர்ணமாக மாறிக் கொண்டிருப்பது போலவும் நான் பிரமையிலாழ்ந்துவிட்டேன்.மெதுவாக எழுந்து மரத்தின் தண்டுப் பகுதியை கட்டிப்பிடிக்க முயன்றேன். முடியவில்லை, அதன் சுற்று மிக அதிகமாயிருந்தது; கைகளில் எதுவோ பிசுபிசுப்பாய் ஒட்டியது.

எனது கைகளை எடுத்துப் பார்த்தேன். கைகளிரண்டும் சிவப்பு வர்ணத்தில் தோய்ந்திருந்தன.காலையில் பாடசாலைக்குப் புறப்படும் போது முற்றத்தினைப் பார்த்தேன். கிளைகள் களையப்பட்டு முண்டமாய் அந்த வேப்பமரம் சாய்ந்திருந்தது. என்னால் பார்க்கமுடியவில்லை, கண்களை நீர் திரையிட்டிருந்தது.

கண்ளைத் துடைத்தபடி இன்னமும் கூட்டப்படாத முற்றத்தினைப் பார்த்தேன். சுள்ளிகளால் கோர்க்கப்பட்ட குருவிக் கூடுகளும் தும்புகளால் பின்னப்பட்ட அணில் வீடுகளும் சிதறிக் கிடந்தன.குருவிகள், அணில்கள் போல என்னையும் நான் உணர்ந்தேன். மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.மாலையில் வீட்டுக்கு வந்தபோது, முன்னறையின் கோலம் மாறியிருப்பதைக் கண்டுகொண்டேன்.

வெட்டப்பட்ட வேப்பமரத்தின் மூன்றடி உயர அடிப்பகுதி முன்னறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்தது. ஒப்பமாக சீவப்பட்ட அதன் மேற்றளத்தில் “பிளாஸ்டிக் “ சாடி ஒன்று – அதனுள் குரோட்டன் இனத் தாவரம் ஒன்று ஒற்றையாய் நிமிர்ந்திருந்தது.

எனக்கு ஏனோ இந்நேரத்தில் சிரிப்பு வந்தது, ஆனால் சிரிக்க முடியவில்லை.அம்மா தந்த தேநீரை குடித்து முடித்தேன்.

எனக்குள் எல்லாம் வெறுமையாய் இருக்க, மெதுவாய் மரங்கள் அடர்ந்த எங்கள் ‘ஓடைக் காணியை’ நோக்கிப் போனேன்.

அடர்ந்து மரங்கள் வளர்ந்திருந்த அத்தோப்பு மனதுக்கு சிறு நிம்மதியைத் தந்தது.

பெருமூச்சொன்றுடன் மாமரமொன்றின் கீழ் அமர்ந்து கொண்டேன். காற்று இனிமையாய் என்னை வருடிச் சென்றது. கைகள் இரண்டினையும் தலைக்குக் கொடுத்தபடி மல்லாந்துபடுத்தேன். கண்களை மூடி அந்த தூய்மையான இன்பத்தினை நுகரத் தொடங்கினேன்.திடீரென என்னைச்சுற்றி காற்றின் அனல் கணத்துக்கு கணம் ஏறுவதைப் போல உணர்ந்தேன். காற்று என்னைச் சுருட்டிப் போட…., நான் படுத்திருக்கும் தரை என்னை எரித்துக் கொண்டிருப்பதாய் ஒரு நினைவு….

காய்ந்த இலைகள் பெருகிக் கொண்டிருந்தன….

என்னைச் சுற்றி எங்குமே சிவப்பு வர்ணத்தின் சுவடுகளே தெரிந்தன.

உயிரினமேயற்ற பொட்டல் வெளி ஒன்றில் நான் மட்டும் தனியே…

வெப்பம் கூடிக்கொண்டே இருந்தது.

எனக்கு நா வரண்டுவிட்டது. தண்ணீர்….தண்ணீர் ….என உணர்வுகள் துடித்தன.

பயம் ஓடிவந்து தனக்குள் என்னை இழுத்துக் கொண்டது.“….ஓ….” என்ற சத்தத்துடன் சடாரென எழுந்து கொண்டேன்.

”அம்மாடி” …. ஓடைக்காணியில்தான் நான் இருக்கிறேன்.

சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டேன், மரங்களெல்லாம் அப்படியேதான் இப்போதும் இருக்கின்றன.

நான் எழுந்து கொண்டேன்; சற்று தடுமாற்றமாய் இருந்தது. அருகில் சில நாட்களுக்கு முன் நடப்பட்ட வேப்பங்கன்று என்னைப்பார்த்து சிரிப்பது போல காற்றில் அசைந்து சலசலத்தது.

நான் அவசர அவசரமாய் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.கடுகு (சிறுவர் இதழ்)

செவ்வாய், 9 மார்ச், 2010

பெத்தாச்சி


-ந.மயூரரூபன்

வெயிலில் வெறித்திருந்த வளவுக்குள் பெத்தாச்சியின் நடமாட்டத்தைக் காணேல்ல….. வரம்பால இறங்கி பெத்தாச்சி வீட்டு ஒழுங்கைக்குள் ஏறி நடந்தன். வீட்டு முத்தத்துக்கு கிட்டவா நிண்டிருந்த ரண்டு தென்னையையும் காணேல்ல. நடு முற்றத்துப் பனை நிண்டிருந்த புட்டியும் வெளிச்சிருந்தது.
அப்புவின்ர உடைஞ்சுபோன வண்டிலும் ஒருதற்ற கையும் படாததால உக்கத் தொடங்கியிருந்தது.

வீட்டுக் கூரை இறக்கத்தின் மூலையோடுகள் உடைஞ்சிருக்கு…..
ஒரு பக்கச் சுவரும் இடிஞ்சு, பிறகு கட்டினது மட்டும் துருத்திக்கொண்டு தெரியுது….
நான் ஊர் பள்ளிக்கூடத்தில படிக்கேக்குள்ள நெடுகவும் பெத்தாச்சியோடதான் இருப்பன். இப்ப ரவுணுக்கு போனதால அவவை பாக்கக்கூட முடியிறேல்ல.
நானும் பெத்தாச்சியும்தான் ஆட்டுக்கு குழைவெட்ட மணலுக்குப் போறனாங்கள். பெத்தாச்சியோட போறதெண்டா ஓரே கொண்டாட்டந்தான். நிறைய கதையளெல்லாம் சொல்லிக்கொண்டு வருவா. அவ சொல்லித்தான் இஞ்ச இருக்கிற ஒவ்வொரு இடமும் எனக்கு நல்லாத் தெரியும். ஊரில பாக்குற எல்லா இடத்திலயும் பெத்தாச்சியத்தான் என்னால காணமுடியுது.

மணல்ல பாலை, சீந்தில், தவிட்டை குழையளைத்தான் பெத்தாச்சி தேடித்தேடி அறுப்பா. அவவுக்கு தெரியும் எந்தெந்த ஆட்டுக்கு எந்தெந்த குழை பிரியமெண்டு. குழைவெட்டுறதுக்கெண்டு பிள்ளைத் தடியொண்டும் பெத்தாச்சியிட்ட இருக்கு.
ஒரு கைக்கடக்கமான தடியில கத்தி கட்டியிருக்கும்… குழை அறுக்குறதுக்கு தோதானதுதான்.
குழையோட திரும்பி வரேக்குள்ள ஒவ்வொரு விறகுக்கட்டும் கொண்டுவருவம். முக்காவாசித்தூரம் என்ர சின்ன விறகுக்கட்டையும் பெத்தாச்சியே தூக்கிகொண்டு வருவா.

பூசின சுவரைப் பாத்துக்கொண்டு படலையடில நிண்டு கூப்பிட்டன்;
“பெத்தாச்சி……… பெத்தாச்சி………..”
“…….ணேய் பெத்தாச்சீய்ய்………”
ஒரு அசுமாத்தத்தையும் காணேல்ல.
ஆனா கனபேர் கதைக்கிற மாதிரியான சத்தமும் கேக்குற மாதிரிக் கிடக்கு.
ஒருத்தரயும் என்னால பாக்க முடியேல்ல.
“கிழவி வீட்டில இல்லயோ”
கிழவி வீட்டில எங்க நிக்கும், குடு குடுவென்டு எங்கையெண்டாலும் ஓடிக்கொண்டெல்லே இருக்கும்.

இப்படித்தான் குழைவெட்ட ஒரு நாள் போனம். பெத்தாச்சி முன்னுக்குப் போய்கொண்டிருந்தா.
அவ கையில வச்சிருந்த பிள்ளைத் தடியை,
“ணேய் உத இஞ்ச கொண்டு வாணை….” எண்டு இழுத்தன்.
“டேய் பெடி பேசாம வா…..இது உன்ர கையில இருந்தா அருமந்த குழையளையும் தடியளையும் அறுத்து விழுத்திக் கொண்டு வருவாய்…..
என்னட்டயே கிடக்கட்டும்…….வா….”
மள மள வெண்டு மணலில் கால் புதையப் புதைய நடந்துகொண்டிருந்தாள்.

பாதை மாறிப்போட்டுது.
கிழவி எனக்குச் சொல்லேல்ல, அங்கையுமிஞ்சையும் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.
கடற்கரையும் வந்துட்டுது... தூரத்துல அஞ்சு கொட்டிலுகள் தெரிஞ்சுது.
“அதென்னணை ஆச்சி”
தொலைவா மரங்களப் பாத்து கணக்குப் போட்டுக் கொண்டிருந்த ஆச்சி திரும்பி,
“அதுதான் மேன… வாடிவீடு”
“வாடிவீடோ…..” கேக்கிறதுக்குள்ள ஆச்சியின் முகத்தப் பாத்து கேள்வியக் கைவிட்டன்.
யோசனைக்குள் புதைஞ்சிருந்துது முகம்.
“பெடியா வரேக்குள்ள அந்தக் கொடிய மிதிச்சனியே”
“எந்தக் கொடிய…”
“அது தான்ரா… பச்சையும் சிவப்புமா… சுருண்டிருக்கும்”
“காலுக்குள்ள ஏதோ இழுவட்டதுதான்…நான் பாக்கயில்லையணை…”
“உதுதான்ரா எங்கள இப்படி ஏய்க்குது” என்று பெருமூச்சு விட்டாள் பெத்தாச்சி.
நாங்கள் சுத்திச் சுழல சூரியனும் மணலை விட்டு மறைய தொடங்கிவிட்டான்.
“மேன கெதியா….அந்தா…. தூரத்தில தெரியிற பெரிய சவுக்கப் பாத்து நட…… குண்டஞ்சி வீடா இருக்கோணும்….அங்க போனாச் சரி..”
“…………….”
ம் பராக்கு பாக்காமல் நட”
அதட்டியபடி வேகமா நடந்தாள் பெத்தாச்சி.
குடுகுடுவென்டு இப்பிடி ஓடிக்கொண்டிருக்கிற பெத்தாச்சியாவது வீட்டில நிக்கிறதாவது.

படலையைத் திறந்துகொண்டு வீட்டுக்குள்ள போக கண்ணில பட்டுது, சரிஞ்சுரிருந்த பூவரசு. எனக்குள்ள ஏதோ அறுபட்டுது.
பெருமூச்ச இழுத்து விட்டபடி பூவரசப் பாத்தன்.
“ஆரோ வெட்டித்தான் விழுத்தியிருக்கிறாங்கள்”
அது பெத்தாச்சியின்ர வேலியில இருந்த மொக்குப் பூவரசு.
ஆச்சி அடிக்கடி எனக்கு பூவரசக் காட்டி சொல்லிக்கொண்டிருப்பா.
“டேய் ….மேன….இந்தக்குத்திதான் என்ரநெஞ்ச வேக வைக்கோணும்…. அதுக்காகத்தான் இத விட்டு வச்சிருக்கிறன்”
கிளைகள் அறுபட்டு மணலில் கிடந்த பூவரசப் பாத்தன்… கண்களில கண்ணீர் கீறியது.

யாரோ எனது கையப் பிடிச்சு பக்கத்திலிருந்த நிழலுக்குள்ள இழுத்திச்சினம்.
என்ர கண்கள் ஒருதரயும் அறிஞ்சு கொள்ளேல்ல.
காற்று மட்டும் சூடான மூச்சுக்களைக் காவி எனக்கு ஏதோ நினைபூட்டவெண்டு என்னில மோதிச் சுழண்டு திரிஞ்சுது.
நான் பூவரசையே வெறிச்சுப் பார்த்துக்கொண்டு நிண்டன்.
“இது பெத்தாச்சியின்ர பூவரசு “

ஒருக்கா எங்கட சுடலைக்கு மயிலம்மான் என்னைக் கூட்டிக்கொண்டு போய்க்காட்டினவர்,
“டேய் இஞ்ச பார் இது நேசத்த எரிச்ச இடம்…..
...அதுதான் கொப்புவ எரிச்ச இடம்...”
அதில காடாத்திற்துக்காக அணைச்ச பூவரசங் குத்திகள் நூந்திருந்துது.
கொஞ்சநேரம் அதைத் தொட்டபடியே குந்தியிருந்தன.;

இடைக்கிடை லீவில ஊருக்குள்ள வரேக்குள்ள உடும்பு வேட்டைக்கும் பண்டி வேட்டைக்குமெண்டு இழுபட்டிருக்கிறன். அப்பவும் சுடலையும் பூவரசம்குத்திகளும் கண்ணில படும். பாத்துக்கொண்டே ஓடுவன். கண்கள் நனைஞ்சுகொண்டே கடக்க, மனமும் அதில தோஞ்சு சிலிர்க்கும்.
பத்து வருசமா என்னால எங்கட சுடலையை பாக்க முடியேல்ல. ஊருக்கு வாற நேரங்களிலயெல்லாம் நீளமான முள்ளுக்கம்பி வேலிய மட்டும் கொஞ்சநேரம் பாத்துத் திரும்பியிருக்கிறன்.
திரும்பேக்குள்ள புதுசா இடம்பிடிச்சுக் காத்திருக்கிற புதுச்சுடலையையும் கடந்துதான் வருவன். ஊருக்கு நல்லாக் கிட்ட இருக்கிற சுடலை, மனசுல எந்த மூலையையும் அருட்டினதில்ல.

கண்ணீர் விழுந்து கைகள் குளிர்ந்திச்சுது. நிமிந்து பாத்தன், பக்கத்தில அம்மா இருக்கிறா. நான் எழும்பி படலையைக் கடந்து மெதுவா மணல் பக்கமா நடந்தன்.
“நேரம் போகுது நீ எங்கயடா போறாய்”
அம்மா கேக்குறது, தூரமாய் வந்தது.
எங்கட சுடலையை தேடினன்.
அப்புவின்ர, நேசத்தின்ர ஊமையப்புவின்ர, பெரியண்ணாவின்ர …..எல்லாற்றையும் சுடலை இதுதான்.
கண்டுபிடிக்கேலாமல் கிடக்கு.
ம்….. இந்த ஆலமரத்த மட்டும் கண்டுபிடிக்ககூடியதாக் கிடக்கு….
இதுதான் ஆசையையாவின்ர அண்ணன் படுத்திருந்த ஆலடி.
ஆசையையாவின்ர அண்ணன் மூளை சுகமில்லாமல் மணலுக்கு வந்து ஒரு பத்தையச் சுத்து சுத்தெண்டு சுத்தி, பிறகு இந்த ஆலடியில தான் படுத்திருந்தவராம்.
வல்லிபுர சுவாமியை இந்த ஆலடியில வைச்சுத்தான் பராமரிச்சவை...
எனக்குத் தெரியும்.

ஆலமரம் மிகப்பெரிசாய் பெரிய இடத்தை பிடிச்சு வைச்சிருக்குது.
நிலத்தில குப்பையளும் தடியளும.;
வல்லிபுர சுவாமி இப்பவும் இருக்கிறாரோ?
ம் கூம் …. பராமரிக்க இஞ்ச ஒருத்தரும் இல்ல.
அண்ணன் மாதிரி ஆலமரத்த நான் சுத்தத் தொடங்கினன். கொஞ்ச நேரத்துல ஏலாமப் போட்டுது.
நாக்கு வறளத் தொடங்கீட்டுது.. உடம்பெல்லாம் தொய்ஞ்ச மாதிரி…..
நிழலில சுருண்டு படுத்தன்.

பெத்தாச்சி தன்னை எங்கட சுடலையிலதான் எரிக்கோணும் எண்டு வாய்க்குவாய் சொல்லுறவ……..
பெத்தாச்சிய நினைக்க நினைக்க மனசு கீறுப்பட்டு, வலிதான் பெருகுது.

...அங்க…..பெத்தாச்சி... பொக்கைவாய்ச் சிரிப்போட அப்புவின்ர வண்டில்ல ஏறியிருக்குறா…..
என்னப்பார்த்து கை காட்டுறாவோ…..!?
எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்துது.
மணலில முகம் புதைய அழுதுகொண்டேயிருந்தன்.