-ந.மயூரரூபன்
இதமான எண்ணங்களின் அரவணைப்பில் சுருண்டிருந்தது மனது. உடலது உணர்வுத்துளிர்களில் ஒருவிதமான இன்பத்தேறல் துளிகளாய்ச் சொட்டிக்கொண்டிருந்தன. எனது ஒவ்வொரு அணுக்களும் மோகத்தின் மயக்கந்தரும் மகரந்தத்தின் வாசனையின் ஆக்கிரமிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து துடித்துக்கொண்டிருந்தன. அவளின் அன்பு பொலியும் முகம் என்னருகே என்னையே பார்த்தபடி...........
நான் உணர்வுகளில் சரணடைந்து, என்னிலை மறந்து அவள் முகத்தினை நெருங்கினேன்.
ஒளிச்சிதறலுடன் வெடித்துச்சிதறியது காற்று.
என் கண்கள் இருளையே கண்டன. ஒளியைப் பார்க்க முனையும்போது சிதறிய உயிரின் துகள்களில் என்முகங்களே பலவாய்த் தெரிந்தன.
நினைவுகளின் அடுக்குகளில் வெடிக்கும் உண்மையின் கனவாயே இது எனக்குள் சேகரமாகிக்கொண்டிருக்கின்றது. மெதுவாக கால இழை படிகிற வாழ்க்கையின் அடுக்குகள் எனக்குள் வாழ்வின் இன்பத்தின் வரிகளை ஒளித்து வைத்தன. என்னால் அவற்றினை தேடிக்காண முடியவேயில்லை. இப்போது வாழ்க்கையின் அடுக்குகள் அடிக்கடி இழைபிரிந்து என் மூச்சுக்காற்றினைக் கதறவே செய்விக்கின்றன.
எனது காற்று வெடித்துச்சிதறிய பொழுதினைக் கடந்தபோது, நான் உயிரினைப் பொத்திவைத்து ஓடத்தொடங்கியிருந்தேன். மணல்களில் கால்கள் புதைந்தெழும் ஓட்டத்திலும், காற்றின் வாதையிலும் உயிர் தளம்பிக்கொண்டேயிருந்தது.
இப்போதும் தளம்பிக்கொண்டிருக்கின்றது.
எனது உயிரருகே சாம்பர் மேடுகளின் சூடு மெது மெதுவாய்த் தணிந்துகொண்டேயிருக்க, அந்த சாம்பர் பூத்த வெளிகளைக் கிளறிக் கிளறி மனது கீழிறங்குகிறது. கீழிறங்கும் மனத்தின் மூலைகள் ஒவ்வொன்றிலும் என்னசைவின் படங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளையாய் தூசிபடிந்து போகின்றன.
கீழிறங்கும் மனது பல்லாயிரம் சிலுவைகளில் அறையப்பட்ட வலியையே தேடுகிறது.
உயிர்பொத்தி ஓடுகின்ற பொழுதுகள் உன்னையும் அவனையும் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. ஆந்தப்பொழுதுகளின் இடுக்குகளில் நானும் தொங்கிக் கொண்டிருந்தேன். காற்றின் கதறலில் பயந்து பொழுதுகளில் அள்ளுண்ட என் நண்பன் தனது கைகளால் மணல் பறித்து என்னையும் தன்னுடன் அதற்குள் நுளைத்துக்கொண்டான். காற்று அவனின் கதறலை மட்டும் தன்னுடன் இழுத்தோடியது. அக்குழியின் வாசல் திறக்கும் நினைவுகளில் அவனது முகம் மிக நெருக்கமாக தன் கனவுகள் தூர்ந்து போன கண்களால் என்னை அழைந்து செல்லும்.
வாழ்க்கையின் வேர்கள் மறைந்திருந்து வேடிக்கை பார்க்க, மனதில் ஆணியடிக்கப்பட்ட வலிதரும் கண்ணீரில் நனைந்துகொள்கிறது-என் கீழிறங்கும் மனது.
..........................
இயல்புலகம் இதுவென சொன்ன இடம். நான் வெளிவருகிறபோது பலவீனப்பட்டிருந்த மனதினையும் உடலினையும் உறவுகளின் இயல்பிலும் மாசற்ற அன்பிலும் போக்குவதற்கு முனைந்தேன். எனினும் வீட்டில் முடங்கியிருக்கும் போது முகட்டில் தொங்கும் அந்தரத்தின் அரவணைப்பே என்னைத் தன்னுடன் உச்சி முகர்ந்து அணைத்துக்கொள்கிறது.
அப்பா நெல் விதைத்த வயல் என்னை அடிக்கடி அழைத்துக் கொள்ளும். ஆதன் மாறா இயல்பின் மடிகள் நீள நடக்கின்றபோதும், வயலின் நுனியிலுள்ள பனங்கூடலில் அமர்ந்து என்னைக் கரைத்தபோதும் நெருங்கி நின்று என் வலிநீவித் தடவ காற்றும் தயங்கி ஒதுங்கியது.அந்த சுடலைக்கருகே இருக்கும் தாமரைக்குளமும் அதனருகே ஒற்றையாய் நிற்கும் சிறுபற்றையும் நான் ஒதுங்கிப்படுக்க சலனமற்றிருந்தன.
உடலின் வலு வடுவாக உறைந்தபோதும் மனதின் வலி இன்னமும் இரத்தத்தினைக் கசியவே வைக்கின்றது.
என்னுயிரின் வெறுமையினை நான் என்னிலிருந்து தூக்கி வைக்க பிரயத்தனப்படவேயில்லை.
ஒளிச்சிதறலுடன் காற்று இப்போதும் எனக்குள் வெடித்துச் சிதறுகிறது. என்னைக் கடந்து போகும் காலத்துடன் சேர்ந்து நகரவே முடியவில்லை. காலம் என்னை மட்டும் தனியேவிட்டுப் போவதை வேடிக்கை பார்ப்பதற்கே முயற்சிக்கிறேன்.
அப்பாவும் அம்மாவும் என்னைச் சிறுபிள்ளை போல அவதானத்துடனேயே கவனிக்கிறார்கள். முதிரும் பருவத்திலும் அவர்கள்முன் குழந்தையாய்த் தளர் நடையிடுகிறது என் மனது. வெறும் சேதியாய் எவர்கள் என்னைக் கேள்விப்படுவதற்குப் பதில் நானாக அவர்களிடம் நான் இருப்பதில் கண்ணீர் வழியும் திருப்தி அவர்களுக்கு.
உலகம் தன்னியல்பில் அசைகிறது.!?
நான் அதனை புரிந்துகொள்ள முனையவில்லை.; நான் என்னைப் பிரித்துப் பார்க்கும் முயற்சியில் இறங்கினேன். என்னிலிருந்து நான் வேறுபட்டுக் கொள்வதற்கு காலத்தின் வரிகளையும் அதுதந்த வலிகளையும் அழித்துவிட முடியுமா?
பொழுதுகள் தம்மியல்பை மறந்துவிடுகின்றன.
அது வெறுமனே அனைத்தையும் காவிசெல்லும் வண்டியாயே ஓடிக்கொண்டிருக்கின்றது.
எழுதிவிடும் வரிகளை அடித்துவிடும் வெறுங்கதையாய் ஒருவரின் வாழ்வும் இங்கு இருந்துவிடவில்லை.
ஒளித்துவைக்கவே முடியும்.
ஒளித்துவைப்பதற்கான இடத்தினை எங்குபோய் நான் தேடுவது...?
ஒருவிடயம் எனக்குப் புரிவதேயில்லை.
இரவிலா பகலிலா ஒளிப்பது சிறந்தது?
எந்தக் காலக் கண்களில் மயக்கம் அதிகம்?
இருளைப்பற்றி நான் பேசுகின்ற பொழுதுகளில் இவனைப்பயம் முற்றாகத் தின்றுவிட்டது என்கிறார்கள். எனது வலிகளைச் சொல்லி அழுகிறபோது விளங்காத தத்துவத்துள் சரிந்துவிட்டான் என்கிறார்கள்.
இரவிலும் பகலிலும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
என்னை ஒரு அடையாளத்துடன் காணவே எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். உண்மையில் அடையாளங்களைத் துறக்கும் ஒரு நிலையே எனக்குத்தேவையானது.
என்னிலிருந்து நான் விலகிக் கொள்வதன் தேவை வலுப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. என்னுடன் நான் சேர்ந்திருக்கும் பொழுதுகளில் நான் ஆயுள் பலத்தினை இழந்துவிடுவேன் என சாத்திரிகள் கண்களை மூடியபடியே கூறினார்கள். அதற்கான குணங்குறிகள் பலதினையும் ஊரிலுள்ள குறிசொல்லிகள் அம்மாவிடம் சொல்லிச் சேர்ந்தழுதனர்.
சாத்திரக் குறிப்புகளும் குறிசொல்லிகளின் அருட்டல்களும் அம்மாவின் கண்ணீருடன் சேர்ந்து என்னை விரட்டி வந்துகொண்டேயிருக்கிறது. இங்கு கால இழைபடிகிற வாழ்க்கையின் அடுக்குகள்அடிக்கடி இழைபிரிந்து என்மூச்சுக் காற்றினை கதறவே செய்விக்கின்றது.
விழிகள் மயங்குகின்ற பொழுதொன்றில் வெறித்திருந்த வெளியொன்றில் நான் நடந்துகொண்டேயிருந்தேன் என்னுடன். எங்கும் வெம்மை ஏறிக்கொண்டிருப்பதை ஒதுங்கியிருந்த ஓரிரண்டு மரங்களும் அசைவற்றுப் பார்த்திருந்தன.
நான் நீள நடந்துகொண்டேயிருந்தேன்.
இருள் கனத்துப்படுத்திருந்த அந்தச் சரிவில் இறங்கி சிறுபற்றைக்கருகில் அமர்ந்துகொண்டேன். வியர்வை ஓடிக்கொண்டேயிருந்தது. நனைந்த சேட்டின் தெறிகளை கழற்றி விட்டுக்கொண்டேன்...
மூச்சு இரைத்தது.
மல்லாக்காகப் படுத்துக்கொண்டேன். வானில் நட்சத்திரங்களும் ஒளித்துவிட்டிருந்தன. நேரம் நீண்டுகொண்டேயிருந்தது, சடாரென எழுந்தமர்ந்தேன். வண்டுகள் கதறிக்கொண்டிருந்தன.
சுற்றுமுற்றும் பார்த்தேன், கதறலை நிறுத்திக்கொண்டன. தவளைகள் மட்டும் விட்டு விட்டுக் குரல் கொடுத்தன. அருகிலுள்ள தாமரைக்குளத்தின நெடியினை இப்போழுது உணரமுடிந்தது.
சிந்தனைகளை ஒதுக்கி பற்றையின் அடியில் மணலைக் கைகளால் வாரத் தொடங்கினேன். சாம்பர் பூத்த மணலைக் கிளறிக் கிளறி கைகள் கீழிறங்க மனதும் உடனிறங்குகிறது. கைகள் ஆழத்தைத் தேடியிறங்க மனதுமட்டும் பல்லாயிரம் சிலுவைகளில் அறையப்பட்ட வலியையே தேடுகிறது. கண்ணீரில் மனது தோய்ந்துகொள்கிறது.
களைத்துப்போய்ச் சற்றே அமர்ந்திருந்தேன். உடல் முழுதும் வியர்வையில் தோய்ந்திருந்தது. சாரத்தின் ஓரத்தினைத் துக்கி முகத்தினை ஆழுத்தமாய்த் துடைத்துக் கொண்டேன்.
பின் எழுந்து குளத்தினை நோக்கிச் சென்றேன். தண்ணீர் குளுமையற்று சூடாயிருந்தது. கைகளால் நீரினை அள்ளியள்ளி வாய்க்குள் விட்டேன். சூடு உடலுக்குள் நேர்கோடாய் இறங்குவதனை உணரமுடிந்தது. வயிறு நிறையும்வரையா மனது நிறையும்வரையா குடித்தேன்?
..........நினைவில்லை.
மீண்டும் பற்றையடியில் தோண்டத் தொடங்கினேன். தோண்டிமுடித்ததும் சேட்டினைக் கழற்றி வைத்துவிட்டு ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டேன். இருட்டில் சுற்றிவர இருப்பவையனைத்தும் என்னையே பார்ப்பதான பிரமையில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தேன். காற்றின் அருகாமை எனக்குத் தேவையாயிருந்தது, ஆழ மூச்சினை உள்ளிழுத்தேன். காற்றினை யாரோ கட்டிவைத்துவிட்டனர். தவளைகளும் காணாமலே போயிருந்தன.
நான் என்னை மெதுவாக அந்தக் கிடங்கினுள் வைத்து அழுத்தினேன். சாதாரணமான ஒரு பொருளை வைத்து மூடுவதுபோன்று மிக இலகுவாக இருக்குமென்று நான் நினைக்கவேயில்லை. மண்ணில் மறைந்திருந்து வேடிக்கை பார்த்திருந்த வேர் முனைகள் என்னை இறுக்கமாகப் பற்றிக் கொண்டன. என் மூச்சுக்காற்று ஒருகணம் பதறித்துடித்தது.
நான் கிடங்கினை மூடிவிட்டு எழுந்துகொண்டேன்.
நினைவின் அடுக்குகளில் வெடிக்குமந்த உண்மையின் கனவாயே இதுவும் எனக்குள் சேகரமாகிக் கொண்டிருந்தது. இப்பொழுது காற்று வெடித்துச் சிதறுகிற பொழுதுகளை நான் கலக்கமற்றுக் கடந்துகொண்டிருக்கிறேன். காற்றின் குளுமையையும் உணர முடிகிறது.
தவிர
10022010