புதன், 10 மார்ச், 2010

வெறுமை


-ந.மயூரரூபன்

நான் அழுதபடி பாயில் படுத்திருந்தேன். எப்போதோ கண்ணீர் வற்றிவிட்டிருந்தது. வாய் காய்ந்து நாக்கு வறண்டிருந்தது. தலையணையில் முகத்தைப் போட்டுத் தேய்த்துக் கொண்டிருந்தேன். முதுகு குலுங்க எனது கேவல் மட்டும் நிற்கவில்லை.

அம்மா அருகில் வந்து மெதுவாக அதட்டினாள்;;;

“பதின்மூண்டு வயசாப் போச்சுது, இன்னும் பால்குடி மாதிரி அழுது அடம்பிடிச்சுக்

கொண்டிருக்கிறாய்…

எழும்பு…….ஒம்பது மணியாப் போச்சுது;

……..சாப்பிட்டுட்டு வந்து கிட…..ம்….”

“…ம்…” என்ற அனுங்கலுடன் குப்புறப்படுத்தபடியே கிடந்தேன்.

“..யேய்..” கொப்பர் இக்கணம் அறிஞ்சாத் தெரியுமே…. எழும்பி வா…”

அம்மா கெஞ்சினாள்.

நான் புரண்டு மல்லாந்து படுப்பதைக் கண்ட அம்மா குசினிக்குள் சென்றுவிட்டாள்.



நான் மெதுவாக எழுந்து குசினிக்குள் செல்ல, அம்மா உணவை தயாராக வைத்திருந்தாள்.

நான் ஒருபிடி பிட்டினை எடுத்து வாய்க்குள் வைத்தபோது; குசினி மூலையினுள், இரு முனைகளிலும் கயிறு சுற்றப்பட்டு அநாதரவாய் கிடந்த ஊஞ்சற்பலகை என் கண்களில் விழுந்தது.

கண்ணீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது.

அம்மா ஆறுதல் சொன்னாள்,

“பிள்ளை …. அந்த மரம் போனால் என்ன….பின்னால நிக்கிற மாமரத்தில

கட்டலாம் தானே….அழாத…நான் அப்பாட்ட சொல்லி நாளைக்கே ஊஞ்சலை

கட்டிவிடுறன்….”

நான் மௌனமானேன்.



எனது பிரச்சனை ஊஞ்சல் தான் என அம்மா விளங்கிக் கொண்டமை என்னைத் தளரச் செய்தது.



நான் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது, எனது கன்னங்களை யாரோ வருடிக் கொடுப்பது போல உணர்ந்தேன். திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தேன். ஒன்றையும் காணவில்லை. மேலிருந்து இரு நீர்த்துளிகள் என் முகத்தில் விழுந்தன.

கைகளை உயர்த்தி, பரந்துள்ள வெறுமையைத் துளாவினேன்.

கைகளுக்குள் இலைகள் போன்று எவையோ தட்டுப்பட்டன. தட்டுப்பட்டவற்றை விரல்களால் உணர முயன்றேன். எனக்குள் மிகவும் பரிச்சயமான உணர்ச்சி ஊடுருவியது.

நான் பிறந்ததிலிருந்து இது நாள்வரை எனது மூச்சுக்காற்றுடன் கலந்து, எனக்குள்ளேயே உலாவிக் கொண்டிருந்த அந்த நறுமணம் அங்கு மெது மெதுவாய் பரவியது.

விரல்களால் இலைகளை வருடினேன்; அம்மாவின் தலைமுடியை வருடும் உணர்வு நிலை எனக்குள் படர்ந்து கொண்டிருந்தது. மரத்தின் இலைகள் எனக்குள் தனது பச்சை வர்ணத்தை கடத்துவது போலவும் நான் பச்சை வர்ணமாக மாறிக் கொண்டிருப்பது போலவும் நான் பிரமையிலாழ்ந்துவிட்டேன்.



மெதுவாக எழுந்து மரத்தின் தண்டுப் பகுதியை கட்டிப்பிடிக்க முயன்றேன். முடியவில்லை, அதன் சுற்று மிக அதிகமாயிருந்தது; கைகளில் எதுவோ பிசுபிசுப்பாய் ஒட்டியது.

எனது கைகளை எடுத்துப் பார்த்தேன். கைகளிரண்டும் சிவப்பு வர்ணத்தில் தோய்ந்திருந்தன.



காலையில் பாடசாலைக்குப் புறப்படும் போது முற்றத்தினைப் பார்த்தேன். கிளைகள் களையப்பட்டு முண்டமாய் அந்த வேப்பமரம் சாய்ந்திருந்தது. என்னால் பார்க்கமுடியவில்லை, கண்களை நீர் திரையிட்டிருந்தது.

கண்ளைத் துடைத்தபடி இன்னமும் கூட்டப்படாத முற்றத்தினைப் பார்த்தேன். சுள்ளிகளால் கோர்க்கப்பட்ட குருவிக் கூடுகளும் தும்புகளால் பின்னப்பட்ட அணில் வீடுகளும் சிதறிக் கிடந்தன.



குருவிகள், அணில்கள் போல என்னையும் நான் உணர்ந்தேன். மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.



மாலையில் வீட்டுக்கு வந்தபோது, முன்னறையின் கோலம் மாறியிருப்பதைக் கண்டுகொண்டேன்.

வெட்டப்பட்ட வேப்பமரத்தின் மூன்றடி உயர அடிப்பகுதி முன்னறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்தது. ஒப்பமாக சீவப்பட்ட அதன் மேற்றளத்தில் “பிளாஸ்டிக் “ சாடி ஒன்று – அதனுள் குரோட்டன் இனத் தாவரம் ஒன்று ஒற்றையாய் நிமிர்ந்திருந்தது.

எனக்கு ஏனோ இந்நேரத்தில் சிரிப்பு வந்தது, ஆனால் சிரிக்க முடியவில்லை.



அம்மா தந்த தேநீரை குடித்து முடித்தேன்.

எனக்குள் எல்லாம் வெறுமையாய் இருக்க, மெதுவாய் மரங்கள் அடர்ந்த எங்கள் ‘ஓடைக் காணியை’ நோக்கிப் போனேன்.

அடர்ந்து மரங்கள் வளர்ந்திருந்த அத்தோப்பு மனதுக்கு சிறு நிம்மதியைத் தந்தது.

பெருமூச்சொன்றுடன் மாமரமொன்றின் கீழ் அமர்ந்து கொண்டேன். காற்று இனிமையாய் என்னை வருடிச் சென்றது. கைகள் இரண்டினையும் தலைக்குக் கொடுத்தபடி மல்லாந்துபடுத்தேன். கண்களை மூடி அந்த தூய்மையான இன்பத்தினை நுகரத் தொடங்கினேன்.



திடீரென என்னைச்சுற்றி காற்றின் அனல் கணத்துக்கு கணம் ஏறுவதைப் போல உணர்ந்தேன். காற்று என்னைச் சுருட்டிப் போட…., நான் படுத்திருக்கும் தரை என்னை எரித்துக் கொண்டிருப்பதாய் ஒரு நினைவு….

காய்ந்த இலைகள் பெருகிக் கொண்டிருந்தன….

என்னைச் சுற்றி எங்குமே சிவப்பு வர்ணத்தின் சுவடுகளே தெரிந்தன.

உயிரினமேயற்ற பொட்டல் வெளி ஒன்றில் நான் மட்டும் தனியே…

வெப்பம் கூடிக்கொண்டே இருந்தது.

எனக்கு நா வரண்டுவிட்டது. தண்ணீர்….தண்ணீர் ….என உணர்வுகள் துடித்தன.

பயம் ஓடிவந்து தனக்குள் என்னை இழுத்துக் கொண்டது.



“….ஓ….” என்ற சத்தத்துடன் சடாரென எழுந்து கொண்டேன்.

”அம்மாடி” …. ஓடைக்காணியில்தான் நான் இருக்கிறேன்.

சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டேன், மரங்களெல்லாம் அப்படியேதான் இப்போதும் இருக்கின்றன.

நான் எழுந்து கொண்டேன்; சற்று தடுமாற்றமாய் இருந்தது. அருகில் சில நாட்களுக்கு முன் நடப்பட்ட வேப்பங்கன்று என்னைப்பார்த்து சிரிப்பது போல காற்றில் அசைந்து சலசலத்தது.

நான் அவசர அவசரமாய் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.







கடுகு (சிறுவர் இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக