திங்கள், 22 ஜனவரி, 2018

பதுங்குகுழி





                                                                                                            
உருவத்தில் மிக மெலிந்த, உயரங்குறைந்த தோற்றத்தில் தற்போது குடியிருக்கும் அவன், தன்னை வீரசிங்கம் இரத்தினகுமார் என போதகரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
சுதந்திரபுரத்திலிருக்கும் அந்த ஆலயத்துக்குப் போதகர் ஆனந்தம் றோகான் கடந்தமாதந்தான் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு மிக இளவயது, ஆயினும் தனது எண்ணங்கள் தொடர்பில் மிக மேலான மதிப்பீடுகளை அனைவரிலும் ஏற்படுத்தியிருந்தார். அவரது ஆள்மன எண்ணமும் அதுவாகவே இருந்தது. அதற்கேற்றவகையிலேயே அவரது நடவடிக்கையும் இருப்பதை உணரமுடிந்தது.
தன்னை ஒரு ஆசிரியனாக அடையாளப்படுத்தியிருந்த இரத்தினகுமார், போதகர் றோகானின் முன் வெகுவாக சங்கடப்பட்ட தோரணையிலேயே அமர்ந்திருந்தான். போதகர் அவனது முகத்தினை மிக உன்னிப்பாகப் பார்த்தார். நீண்டநேரம் பாரத்தபடியே இருந்தார். இரத்தினகுமார் அடிக்கடி அவரது முகத்ததை நமிர்ந்து பார்ப்பதும் பின்னர் தலையைக் குனிவதுமாக இருந்தான். இடைக்கிடை கால்களை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்கொண்டான். அவனால் தொடர்ந்து அவ்வாறு இருக்கமுடியவில்லை.
போதகர் மேலும் கீழுமாக தலையை ஆட்டிக்கொண்டார். இறுதியுத்தத்தில் அவனது மனைவியும் பிள்ளைகளும் இறந்துவிட்டதன் பேதலிப்பு அவனது முகத்திலும் உடலிலும் இருப்பதனை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார்.
இரத்தினகுமாரும் எப்போதும் பதட்டத்தினை தன் மேல் போர்த்திக் கொண்டவன் போலவேயிருந்தான். சிரிப்பதற்கு அதிகம் சிரமப்பட்டான். சிரிக்கமுனையும்போது உதடுகள் மட்டும் கட்டளைக்கு விரிவது போல் விரிந்து பின் மூடிக்கொள்ளும். பற்கள் ஒழுங்கற்றும் அதிகமாய் கறைகளைப் பூசிக் கொண்டனவாயும் காணப்பட்டன. மிகத் தொலைவில் பார்ப்பதற்கு ஆசைப்பட்டவன் போல அவனது பார்வை தூர எறிந்திருப்பதனை போதகர் றோகான் கண்டுகொண்டார். இதனால் அவருக்குள்ளும் சிறிது பதட்டம் தொற்றிக்கொண்டது. நடுக்கமாகவும் இருக்கலாம், அந்தக் கணத்தில் அதனைச் சரியாக  இனங்கண்டுகொள்ள முடியவில்லை.
தனியாக யாருமற்று இரத்தினகுமார் இருப்பதை கண்டுகொண்ட போதகர் றோகான் இரத்தினகுமாரைத் தன்னுடனேயே இருத்திக்கொண்டார். பாடசாலை நேரம்போக மீதி நேரங்களில் போதகருடனேயே இருக்கமுனைந்தான் இரத்தினகுமார்.
தனிமையின் பிடிக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது அவனுக்கு மிகக் கடினமாகவே இருந்தது. ஆலயத்துள் அதிக நேரம் மௌனமாக இருக்கத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டான்.சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவத்தை பார்த்தபடி நீண்டநேரம் அமர்ந்திருப்பான். போதகர், இரத்தினகுமாரின் இந்த இருப்பை அவதானித்தபோதும் அவனைத் தொந்தரவு செய்யாமல் அவன் போக்கிலேயே விட்டுவிட்டார். சிலுவையிலுள்ள இயேசுவின் உருவத்தில் விழிகள் எப்போதும் நிலைத்திருந்தன.
தன்னை யாரோ பின் தெடருகிறார்கள் என்பதான பிரமை இரத்தினகுமாரின் தோள்களில் நன்றாகவே குந்தியிருந்தது. அந்தப்பிரமையில் அடிக்கடி தோள்களைக் குலுக்கிக் கொள்வான். தோள்களைக் குலுக்கிக் கொள்வது அவனது இயல்பாகவே மாறியிருந்தது.
இரத்தினகுமாரின் ஆலய இருப்புக்கண்டு போதகர் றோகான் அவனுக்கு ஞானஸ்னானம் செய்தார். அவன் போதகரிடம் தன்னுடைய மதத்தைப் பற்றியோ கடவுளைப்பற்றியோ அல்லது ஆன்மீகத்தைப்பற்றியோ எப்போதும் வாய்திறந்து உரையாடியதில்லை. அவனது தூரத்தில் கொழுவிய பார்வையும் ஆலயத் தனித்திருப்பும் இயேசுவின் மீதான பார்வை நிலைப்பும் இரத்தினகுமாரை கிறிஸ்தவனாக்கியிருந்தது.
கர்த்தர் அவனது வாழ்வின் கிருபைக்குத் துணையிருப்பார் எனப் போதகர் றொகான் முழுமையாக நம்பிக்கை வைத்தார்.
இப்பொழுதெல்லாம் கிறிஸ்தோபர் இரத்தினகுமார் பைபிளுக்குள் தனது பார்வையை நிலைத்திருக்கப் பழக்கிக் கொண்டான். இரவுகளிலும் தொடர்ந்து பைபிளுக்குள் தனது பார்வையை கொழுவியிருந்தான். ஆலயத்தின் மேலே பார்த்த, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அந்த உருவம் பைபிள் தாள்களில் நீர்த் தோற்றமாய் அசைந்தது. அது அவனது விழிகளை எப்போதும் அழைத்து வைத்திருந்ததை யாருமே அறிந்திருக்கவில்லை.
திடீரென அந்தத் தாள்களிலிருந்து விழிகளை பிடுங்கிக் கொள்பவன் தனது தோள்களை குலுக்கிக் கொள்வான். பின் விழிகள் மெல்ல மெல்ல அந்த நீருக்குள் இறங்கும். அங்கு சிலுவையில் தொங்கும் இயேசுவை அவை தேடிக்கொண்டேயிருக்கும்.
கிறிஸ்தோபரின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்த றோகான் போதகருக்கு வியப்பாக இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்க இரத்தினகுமார் உழைக்கிறான் என உணரத் தலைப்பட்டார். அதனால் கிறிஸ்தோபருடன் விவலியக் கருத்துகளை விவாதிப்பதற்கு அவர் முனைந்தார். எனினும் இரத்தினகுமார் அதில் பெரிதாக ஆர்வங் கொண்டவனாய்க் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் அமைதியுடன் போதகர் கூறுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் கரிசனையுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் தான் கூறுவனவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறானா என்பதை போதகரால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அவன் இடைக்கிடை தனது தோள்களைக் குலுக்கிக் கொள்வதை மட்டுமே அவரால் கண்டுகொள்ள முடிந்தது.
ஆயினும் கிறிஸ்தோபரின் பைபிள் படிப்பு தொடர்ந்து கொண்டேயருந்தது. விழிகள் தொடர்ந்து நீர்ச்சலனத்துள் மிதந்து படிப்படியாக நீந்தத் தொடங்கியிருந்தன. இயேசுவின் உடல், காயங்களின் செம்மையில் உயிர்த்திருந்தது. குருதிப் பொட்டுகள் நீரில் விழுந்து கீழிறங்கிப் பின்னர் உடைந்து நீரில் அடர்ந்தது. முக்குழித்துச் சுழியோடப் பழகிக் கொண்ட அவனது கண்கள் செந்நீர் அடர்த்தியின் வலிகளில் தத்தளித்து மீண்ட பின் தத்தளித்தது. தொடர்ந்து தத்தளிக்க, வலிகள் புதிது புதிதாய் உயிர்த்தெழுவதை விழிகள் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தன.
பொதுவாக இரத்தினகுமாருக்கு இரவுகளில் நித்திரை வருவதில்லை. பெரும்பாலான இரவுகள் இரத்தினகுமாரின் விழிப்புகளை மட்டுமே காவிச் சென்றன. இது கிறிஸ்தோபர் இரத்தினகுமாராக அவன் மாறிய பின்னும் தொடர்ந்தது. அவனது விழிப்பு நேரங்களில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. அதேபோல் தனிமையில் தன்னுடலை வைத்திருப்பதை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தான். அவனது மூளையும் மனமும் முழுமையான விழிப்புடன் இருளுக்குள்ளும் இருள் கடந்தும் தொடர்ந்தும் அலைந்தபடியே இருந்தன.
நைலோன் கயிறொன்று உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. சற்று பழுப்பேறிய நீலநிறக் கயிறு. ஆதன் கீழ்முனையில் ஞட்டியுடன் ஒருவன் தொங்கிக் கொண்டிருந்தான். குள்ளமான மெலிந்த தோற்றத்திலிருந்த அவனது வெற்றுடம்பிலிருந்து வியர்வை கரைந்து கொண்டிருந்தது. அவனது தலைக்குக் கீழே சிறு தொட்டியொன்று, அதற்குள் நீர் நிறைந்திருந்தது. சற்றே ஊத்தை கலந்த செம்மையேறிய அந்த நீர் சலனப்பட்டுக் கொண்டேயிருந்தது.
மெதுவாக ஒவ்வொரு இஞ்சிகளாய் இறங்கிய கயிறு, திடீரென மிக வேகமாக தொட்டிக்குள் அவனது தலை மூழ்கக் கூடியவாறு இறங்கி பின் நிலைத்து நின்றது. அவனது அந்தரத்தையும் அவஸ்தையையும் அவனது உடல் துடித்தபடி வெளித்தள்ளியது.
இரத்தினகுமாருக்கு மூத்திரம் மணத்தது.
தொhங்குபவனின் விழிகள் அந்தச் செந்நீரில் நீந்தி விளையாடுவது போலிருந்தது. தொங்குபவனின் முகம் தன்னைப் போலவே இருந்ததை அவனது மூளையும் மனமும் உணர்ந்துகொண்டது. அவன் முக்குளிப்பதை இரசிக்கும் ஒருவனும் அங்கிருந்தான். கொம்ரேட் டுச்-சின்னின்* மூளையும் எண்ணமும் அந்த இரசிப்பவனின் சாயலுக்குள் ஒளிந்திருப்பதை இரத்தினகுமாரின் வழிகள் துடித்தபடி கண்டுகொண்டன.

அவனது வாயில் குரூரப் புன்னகையொன்று நெளிந்த நிலையில் உறைந்திருந்தது. உதடுகளின் இடைவெளி  செத்துக்காய்ந்த பாம்பின் உடல்போல் வறண்டிருக்க குரூரம் நஞ்சாய்க் கசிந்து உலர்ந்து கிடந்தது. அவனது கைகளிலும் கால்களிலும் இரத்தம் காய மறுத்த அடத்துடன் வழிந்து சித்திரமாய்ப் படர்ந்து படிந்திருந்தது.
பார்வை அவனது முகத்தை நோக்கி நகர்வதற்கிடையில் கிறிஸ்தோபர் இரத்தினகுமாரின் விழிகள் உறக்கத்துள் அமிழ்ந்து போயின.
உயிர்ப்பதற்கு முன் இயேசு எவ்வாறான வேதனைகளை எனுபவித்தாரென போதகர் றொகான் மிகவும் உணர்வுபூர்வமாக கூறிக் கொண்டிருந்தார். கிறிஸ்தோபர் இரத்தினகுமார் அதனை எந்தவித சலனமுமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.
குறித்த ரிதத்தில் அவனது தோள்கள் குலுக்கிக் கொண்டன.
*பொல் பொட் ஆட்சியில் கமர் ரூஜ் இயக்கத்தினர் நடத்திய பயங்கரமான கொடுமைகளின் போது டுவால் ஸ்லெங் (Tuol Sleng )என்ற சிறையின் வோர்டனாக இருந்தவன். நடந்த கொலைகளில் 17000 கொலைகளுக்கு பொறுப்பானவன்.

மிக மூர்க்கமாக ஆணிகளில் அறையப்பட்ட வலியும் இரத்தமும் தன்னைச் சுற்றி உறைந்திருப்பதான எண்ணம் இரத்தினகுமாரின் எண்ணங்களை சூறையாடிக்கொண்டிருந்தது. அவனது விழிகள் அந்த வலிகளுள்ளும் வடியும் இரத்தத்துள்ளும் நுளைந்து நுளைந்து வெளியேறிக் கொண்டிருந்தன.
கொலை செய்யும்போதிருக்கும் கண்களை இரத்தினகுமாருக்கு நன்றாகத் தெரியும். அந்தக் கண்களின் விழிகள் எப்போதும் விரிந்திருக்க வாய்ப்பேயில்லை. புருவங்கள் குவிந்தபடியே எப்போதும் இருக்கும். கிறஸ்தோபர் இரத்தினகுமாரின் மூளையும் மனமும் இந்தக் கண்களை உதன் உறை நிலையில் பாடமாக்கித் தனக்குள்ளேயே வைத்திருந்தன.
குளிரேறிய அன்றிரவு இருள் சற்று அதிகப்படியான ஈரத்துடனிருந்தது. மௌனத்துக்கான இடைவெளிகள் அவனைச் சுற்றி வழமைபோல கொட்டப்பட்டுக் கொண்டேயிருந்தன. நித்திரையும் அவனருகில் சுற்றிவைக்கபட்டிருந்தது. மூளையும் மனமும் அந்தக் குரூரமுறைந்த கண்களைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
திடீரென எழுந்து ஆலயத்துள் ஓடினான். வழமையாக இருக்குமிடத்தில் அமர்ந்து கொண்டான் மூச்சு இலேசாக இழைத்தது. மெதுவாகத் தலையை உயர்த்தி சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்த்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே தொங்கவிடப்பட்டிருந்த சிலுவையின் மேற்புற ஆணி கழன்று சிலுவை தலைகீழாக வந்து நின்றது. இப்போது இயேசு தலைகீழாகத் தொங்கினார்
மீண்டும் வீட்டுக்குள் இரத்தினகுமார் ஓடிவந்து அமர்ந்து கொண்டான். தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டபின் பைபிளை எடுத்துப் புரட்டத் தொடங்கினான். நீராய் சலனப்படும் இயேசு இங்கேயும் அதேபோல் சிலுவையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தார்.
உண்மையில் தலைகீழாகத்தான் தொங்கவிட்டிருப்பார்களா?
'ச்சீ... அப்பிடியெண்டா கைகளை பின்னுக்கெல்லோ கட்டி வச்சிருப்பாங்கள்.'
விழிகள் இரண்டும் வலிகளும் செம்மையும் கலந்து நெகிழ்ந்த தாள்களுக்குள் முக்குளித்து மீண்டன. மிதந்து வரும் எண்களைச் சேகரமாக்கிக் கொண்டான். மீண்டும் அந்தக் குரூரக் கண்கள் இருளில் தொங்க முற்படும்போது முதலாவது அழைப்பை ஏற்படுத்தினான்.
' நீங்கள் அழைத்த இலக்கத்தை தற்போது அடையமுடியாதுள்ளது...'
மீண்டும் அழைத்தான்.
மீண்டும் மீண்டும் அழைத்தான்.
தொலைபேசி இலக்கம் அழைப்புகளால் தொடர்ந்து முற்றுகையிடப்பட்ட வண்ணம் இருந்தது. இது மீட்சி பெறும் வழியென கிறிஸ்தோபர் இரத்தினகுமாரின் மனம் நம்பத் தொடங்கியிருந்தது.
வெட்டிப்போடப்பட்டிருந்த தென்னை ஓலைகளுக்கு மேல் குந்தியிருந்தபோது இது ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. எந்தப் பற்றுமில்லை...
 எந்தக் கடவுளுமில்லை....
எந்த இலக்கமுமில்லை...
பயத்துக்கான அழைப்புகள் மட்டுமே அவனைச் சுற்றிச் சேர்ந்து கொண்டிருந்தன.
எனினும் இப்போது இந்தத் தேவைப்படாத அழைப்பை ஏற்படுத்த கிறிஸ்தோபர் இரத்தினகுமார் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தான். நகமில்லாத சுட்டு விரல்கள் இலக்கங்களை ஏதோவொரு வேகத்துடன் ஓடியோடி அழுத்திக்கொண்டிருந்தன.
எனினும் விரல்களில் காணப்பட்ட பதட்டம் அவனில் காணப்படவில்லை.
இரவு ஒரு பதுங்குகுளி போலவே தனது வாயைப் பிளந்திருந்தது. இரவு எப்போதும் போல பதட்டங்களை விழுங்கிக் கொண்டேயிருந்தது. அழைப்புகள் நிறைய நிறையக் குழி மூடிக்கொண்டது.
இரவின் வெளியில் மரணம் காத்திருப்பதான பிரமையை உள்வாங்கி அவனது உடல் அதனைப் பாவனை செய்து இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
இரவு – அது பெரும் பதுங்குகுழி
மரணம் - கடந்துவிடமுடியாப் பெருவெளி
அவன் கடந்துவந்த வெளி வர்ணங்கால் பூசப்பட்ட முகட்டைக் கொண்டது. சிவப்பும் கருப்பும் அதிகம் பூசப்பட்ட முகடு. அந்த முகட்டைப்போலவே அவனுக்கான இரவுகளும் துடைக்கப்படாதவை. அவனது ஒவ்வொரு இரவுகளிலும் சிதறியிருக்கும் மூளையும் இரத்தமும் நிணமுமாய் குழந்தைகள் சிதறிக் கிடக்கும் காட்சியும்.... நிறை வெடிலும்.... அள்ளியிறைக்கப்பட்டிருந்தன. இரவின் சுவர்களில் பசியும் பட்டினியுமாக இருந்த மனிதர்களின் ஓவியங்கள் மறைய மறுத்தன.
கிறிஸ்தோபர் இரத்தினகுமார் தன்னந் தனியே இரவுக் குழிக்குள் பதுங்கிக் கொண்டான்.
தூரத்தே எறித்த பார்வையுடன் அந்தத் தொலைபேசி  இலக்கங்களைத் தன்னிச்சையாக கைகள் அழுத்த, அவனது மூளையும் மனமும் இருளைத் துளாவித் துளாவி குரூரமாய் உறைந்த அந்தக் கண்களை இழுத்துக்கொள்ள முயற்சித்தன.
இருளைச்சுற்றி இருளுக்குள் அவனது மனமும் மூளையும் நாய்போல இளைக்க இளைக்க ஓடிக்கொண்டேயிருந்தன.
இரத்தினகுமார் தலைகீழாகத் தொங்க. அவனது முகம் மூத்திரத்  தொட்டியில் முக்குளித்துக் கிடந்தது. அவன் முக்குளிப்பதை அந்தக் குரூரக் கண்களுக்குச் சொந்தக்காரன் இரசித்துக்கொண்டிருந்தான். அவனது நிழல் அங்கிருந்த சிறு துண்டு ஒளியில் பூதாகரமாய் நீண்டிருந்தது. அந்த நிழலுக்குள் பல உருவங்கள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன. அவனது முகத்தில் குரூரப் புன்னகை பாம்பு போல நெளிந்த நிலையில் உறைந்திருக்க, இப்போது அவனது முகம் வெளிச்சத்துக்குள் சிக்குப் பட்டிருப்பதை கிறிஸ்தோபர் இரத்தினகுமார் கண்டுகொண்டான். மிக மெலிந்த உயரங்குறைந்த தோற்றத்திலிருந்த அந்தக் குரூரக் கண்ணுக்குரியவனின் முகம் இரத்தினகுமாரின் சாயலை அப்படியே கொண்டிருந்தது.
இப்போது அழைப்பை ஏற்படுத்தும் முயற்சியை கிறிஸ்தோபர் இரத்தினகுமார் கைவிட்டிருந்தான்.
            

 ந.மயூரரூபன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக